உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8).
தாழ்மை என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாம்ச சரீரத்தில் வாழ்ந்த போது வெளிப்படுத்திய மிக முக்கியமான தெய்வீகப் பண்புகளில் ஒன்றாகும். ஆனால், எல்லாத் தீமைக்கும் வித்தாகிய பெருமை மனிதனுடைய இருதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. அது தன் வாழ்க்கையில் இருப்பதைப் பற்றிய உணர்வே இல்லாதவனாய் மரத்துப் போயிருக்கிறான். நம்மில் இருக்கும் பெருமையை நாம் தேவனுடைய கண்ணோட்டத்தில் கண்டு, அதன் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நம் பெருமையினிமித்தம் இம்மையில் இந்த வாழ்க்கையிலும் மறுமையில் இனிவரும் வாழ்க்கையிலும் உண்டாக்கக்கூடிய விளைவுகளும் மற்றும் பெருமையுள்ளவர்கள் மீது வரும் தேவ நியாயத்தீர்ப்பும் அதிர்ச்சியூட்டக்கூடியவைகளாகும்.
நம் பெருமையின் அவல நிலையைக் கண்ணுற்று நாம் மனந்தளர்ந்து போக வேண்டியதில்லை. கிறிஸ்துவின் தாழ்மை அதினின்று மீளும் வழியை நமக்குக் காண்பிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையின் மகிழ்ச்சியின் உச்சநிலை, நாம் அடைந்துகொள்ளும் கிறிஸ்துவின் தாழ்மையின் ஆழத்திலே தங்கியிருக்கிறது. தாழ்மை என்பது தேவன் நமக்கு அளித்திருக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும். மறுபக்கத்தில், பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை என்றென்றைக்கும் நித்தியமாய் அழித்துப்போடுகிறது. இவ்விரு சுபாவங்களில் எது நம்மை ஆளுகை செய்கிறது என்பதை நிதானிப்பது அவசியம்.
பெருமையின் ஆரம்பம்
மனிதன் சிருஷ்டிக்கப்படுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தூதர்களைத் தேவன் சிருஷ்டித்தார். இருப்பினும் அவர்களில் சிலர் பெருமையினிமித்தம் விழுந்துபோயினர். இவ்விதம் விழுந்துபோன தூதர்களை தண்டிக்கும் பொருட்டாகத் தேவன் நரகம் அல்லது நித்திய அக்கினியை ஆயத்தம் பண்ண வேண்டியதாயிற்று (மத்தேயு 25:41). ஆகவே, பெருமை நரகத்துடன் நேரடியான தொடர்புடையது. கொலைபாதகம், துர்நடத்தை, தூஷணம் முதலான பாவங்கள் பிசாசினாலோ, பாவம் நிறைந்த உலகத்தினாலோ, அல்லது பாவ மாம்சத்தின் பெலவீனத்தினாலோ தூண்டப்படுகின்றன. ஆனால் இவ்வித தீய தூண்டல்கள் அறவே இல்லாத தூய்மையான பரலோகத்தில்தான் பெருமை என்ற பாவம் ஆரம்பித்தது.
தேவன் தமது இரக்கங்களினிமித்தம் ஒவ்வொரு முறையும் நாம் சந்திக்கும் சோதனைகள், கஷ்டங்கள் மூலமாக அவ்வப்போது நம்மிலுள்ள பெருமையின் கொஞ்ச பகுதியை நமக்கு சுட்டிக்காட்டுவதால் நாம் நம்மைத் தாழ்த்தி, மனந்திரும்பி, ஒவ்வொரு நாளும் கர்த்தர் பக்கமாகத் திரும்ப அது ஏதுவாகிறது. நாம் எவ்வளவு ஆழமாகச் சென்று நம்முடைய வாழ்க்கையை ஆராய்கிறமோ அவ்வளவு அதிகமாக நம்மிலுள்ள பெருமையை கண்டு கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அனுதினமும் தேவனோடு நடக்கும் அனுபவத்தில் தேவனுடைய வார்த்தையானது நம்மிலுள்ள பெருமையின் ஆழத்தை உணர்ந்துகொள்ளவும் அதனை மேற்கொள்ளவும் வழிசெய்கிறது.
பெருமையை சுட்டிக்காட்டும் சில உதாரணங்கள்:
- தன்னைத் தானே உயர்த்துவது அல்லது தனக்கு இருப்பதைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தையும் கனத்தையும் பற்றிப்பிடித்துக்கொள்ள முயற்சிப்பது.
- மற்றவர்களை அற்பமாக எண்ணுவது.
- சுய சித்தத்தைச் செய்தலின் பெருமை – தங்களைப்பற்றியே சிந்தை கொண்டிருக்கும் சுய உணர்வுள்ளவர்களாக இருப்பது.
- தன் சொந்த தவறுகளை ஒத்துக்கொள்ளாமல் மற்றவர்களுடைய தப்பிதங்களை சகிக்ககூடாதபடி இருப்பது.
- கற்பிக்கப்படக்கூடாதபடி இருப்பது.
- உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும் பெருமை – கோபம், பேராசை, அதிருப்தி, பொறாமை, அதைரியம், மனத்தளர்ச்சி, பயம், கசப்பு, பகை, புண்படுத்தப்பட்ட உணர்வுகள்.
பெருமையுள்ளவர்களின் முடிவு பயங்கரமானது! ஆனால்….
வேதாகமத்தைப் போல் பெருமையின் அபாயகரமான விளைவுகளைக் குறித்த எச்சரிப்புகளைக் கொடுக்கக்கூடிய வேறொரு புத்தகம் இவ்வுலகில் இல்லை. பெருமையுள்ளவர்கள் பயங்கரமான ஒரு முடிவை அடைவார்கள்.
ஏரோது ராஜா இதற்கு ஓர் உதாரணமாவான்: “குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்” (அப்போஸ்தலர் 12:21-23).
ஆனாலும், உலகிலேயே மிக மோசமான நபராயிருக்கும் ஒருவனுங்கூட, அவன் எப்பேர்ப்பட்ட பொல்லாத காரியங்களை செய்திருந்தாலும் அவன் தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினால், மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் பெற்றுக்கொள்வான். இதற்கு ஆகாப் ஒரு நல்ல உதாரணம்: “ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்” (1 இராஜாக்கள் 21:29).
எனவே, இத்தகைய தாழ்மையுள்ள மனந்திரும்புதல், நம் வாழ்க்கையின் எல்லா பகுதியிலும் தேவனுக்கு மகிமை செலுத்தவும், முடிவில் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவும் வழிசெய்கிறது.
கிறிஸ்துவில் எவ்வித பெருமையும் இல்லை!
தமது பிறப்பு முதல் மரணம் வரை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாழ்மையின் ஒரு பூரண முன்மாதிரியை நமக்கு காண்பித்திருக்கிறார்.
பிறப்பு அல்லது அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் துவக்கம், பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருத்தல், நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுதல், தேவனோடிருத்தல், ஊழியம் ஆகிய காரியங்களில் மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலுள்ள தாழ்மையைக் காண முடியும்.
மனிதர்கள் மேன்மை பாராட்டும் பல காரியங்களில் உதாரணமாக, குடும்ப அந்தஸ்து, குடியுரிமை, அழகு, புகழ்ச்சி, ஐசுவரியம், தாம் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று எண்ணுதல், பிறரைப் பார்க்கிலும் தம்மை உயர்ந்தவராக எண்ணுதல், பேச்சுத்திறமை, தம் சொந்த பெலன் அல்லது தன்னம்பிக்கை, மற்றும் அதிகாரம் ஆகியவற்றில் பெருமை கொள்ளாதிருப்பதும் அவருடைய தாழ்மையைக் காட்டுகிறது.
பிதா தம்முடைய கையில் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதை இயேசு அறிந்து, போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கியது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
“அவர் (கிறிஸ்து இயேசு) தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:6-8).
அவருடைய தாழ்மையை பின்பற்றாவிடில் நாம் ஒருபோதும் அவரைப் பின்பற்றுகிறவர்களாயிருக்க முடியாது. நாம் அவரது தாழ்மையைக் குறித்து எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவதிகமாய் அதைக் குறித்த பசியும் தாகமும் உள்ளவர்களாய் இருப்போம்.
தாழ்மை அருமையானதோர் ஜீவியம்!
நாம் இந்த உலகத்தில் தேவனுக்கு பிரியமாக வாழ இன்றியமையாதது அவருடைய கிருபை. இந்த விலைமதிப்பற்ற கிருபை தாழ்மையுள்ளவர்களுக்கே வாக்களிக்கப்பட்டிருக்கிறது. “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5: 5; யாக்கோபு 4:6 ). மெய்யான தாழ்மையுள்ள ஒரு மனிதனின் வாஞ்சையோ நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும் என்பதாகவே இருக்கும். தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் மற்றவர்கள் நம்மை அவமதிக்கும்போதோ அல்லது தாழ்த்தும்போதோ, கோபமும் கசப்பும் அடையாமல் பொறுமையுடன் சகிப்பதற்கு தாழ்மை நமக்கு மிகவும் உதவி செய்கிறது. அதோடுகூட பரலோகத்தில் மிகுதியான பிரதிபலனை அருளிச்செய்கிறது (லூக்கா 6:22,23). தேவனுடைய மகிமைக்காக மற்றவர்களுக்கு பணிவிடை செய்வதற்குத் தங்களையே தத்தம் செய்யும் வாழ்க்கையானது அதிமேன்மையான சந்தோஷமானதும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஒரு வாழ்க்கையாகும்.
சர்வ வல்லமையுள்ள தேவன் ஒரு மனிதனுக்குள் நடப்பிக்கக்கூடிய மிகப் பெரிய கிரியை, கிறிஸ்துவைப் போன்ற தாழ்மையை அவனுக்கு அருளிச் செய்வதே ஆகும். தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29). நாம் கிறிஸ்துவுடன் நித்தியத்தில் ஆளுகை செய்யும்படி அவரது தாழ்மையை வஸ்திரத்தைப் போலவும், ஒரு போராயுதத்தைப் போலவும் தரித்துக்கொள்ள ஆண்டவர்தாமே நமக்கு அருள்புரிவராக. தாழ்மையில் தங்கியிருக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கும்படி வாஞ்சையோடு வாழ்வோம்.