இரட்சிப்பின் அனுபவத்தில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தேவனுடைய மன்னிப்பு மற்றும் ஒப்புரவாக்குதல், தேவனுடனான ஐக்கியம் (அல்லது) உறவு போன்ற மேன்மையான காரியங்களை நன்கு அறிந்து, அனுபவிக்கிறவர்களாயிருப்பார்கள். இதை வெளிப்படுத்துவது என்னவென்றால் சகமனிதர்களுடன் அவர்கள் கொண்டுள்ள அன்பும், உறவும், சகமனிதர்கள் தங்களை காயப்படுத்தும் போது அவர்களை மன்னிப்பதும், அவர்களுடன் ஒப்புரவாகுதலும் ஆகும்.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20)
இதற்கு ஒரு நல்ல உதாரணம் சகேயு. இயேசு சகேயுவை பார்த்து “இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்று சொன்னபோது, பாவியாயிருந்த அவன் இயேசுகிறிஸ்துவுடன் தனக்கு கிடைக்கும் உறவின் அடிப்படையில், சகமனிதர்களுடன் எவ்வளவாய் சீர்பொருந்துவதைக் காண்கிறோம் (லூக்கா 19:8). அப்பொழுதே இயேசு “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது” என்று சொன்னார்.
நாம் நமது குடும்பம், சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள், சபையின் விசுவாசிகள் என மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து பயணிக்கும் போது, உறவுகள் சம்பந்தமான பல சவால்களை சந்திக்க நேரிடும். சவால்களின் மத்தியிலும் அவர்களை அன்பு கூற அழைக்கப்படுகிறோம். இதற்கு வேதம் தரும் சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.
நாம் தேவனோடு கொண்டுள்ள தனிப்பட்ட உறவு மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வது இன்றியமையாததாக உள்ளது.
எந்த சூழ்நிலையும் தேவனோடுள்ள ஐக்கியத்தை பாதிக்காதவாறு நடந்துகொள்ள இருதயத்தில் தீர்மானித்திருக்க வேண்டும்.
உன்னிடத்தில் நீ அன்புகூருவதைப்போல பிறரிடத்தில் அன்புகூரவேண்டுமென்றால், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூரவேண்டும் (மத்தேயு 22:37-39).
அப்படி தேவனோடுள்ள ஐக்கியத்தில் அல்லது உறவில் நீங்கள் வளரும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் தேவன் அதை உங்களுக்கு நினைப்பூட்டுவார். அப்பொழுது, உடனடியாக அவர்களை மன்னிப்பதும் அவர்களுடன் ஒப்புரவாகுவதும் அவசியம்.
உதாரணத்திற்கு, “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து “உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (மத்தேயு 5:23,24).
இதை எளிதாக சொல்லிவிடலாம். ஆனால், நம்மை காயப்படுத்துகிறவர்களை எப்படி மன்னித்து அவர்களுடன் ஒப்புரவாகமுடியும்?
சில சூழ்நிலைகளில், நாம், “அநியாயத்தைச் சகித்துக்கொள்வது மேன்மையானது” என்று பவுல் வலியுறுத்துகிறார். (1 கொரிந்தியர் 6:7). இயேசு கிறிஸ்துவும் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அநியாயத்தை சகித்துக்கொண்டாரே.
மேலும் நம்முடைய வாழ்க்கை முற்றிலும் ஆண்டவரை சார்ந்து இருக்கும் போது அவருடைய நோக்கம் மற்றும் வல்லமை ஆகியவற்றை முழுநிச்சயமாய் நம்பி இருக்க முடியும்.
எப்படியெனில், “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).
உதாரணமாக யோசேப்பின் வாழ்க்கையை நன்கு அறிவோம். தன்னை காயப்படுத்திய சகோதர்களை பார்த்து அவன் சொன்னது, “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதியாகமம் 50:20).
சீமேயி, தாவீது ராஜாவை தூஷித்த போது, கர்த்தர் அனுமதித்திருக்கிறார் என்று பொறுமையோடு சகித்து, “ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்” என்று சொன்னார். (2 சாமுவேல் 16:12)
ஆகையால் தேவன் தீமையை நன்மைக்கேதுவாக மாற்றுவார் என்று நம்பி தீமையை நாம் சகித்துக்கொள்ளவேண்டும்.
இப்பொழுது ஒருவேளை உங்களுக்குள் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று ஒரு கேள்வி எழும்பலாம். இதே கேள்வி இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான பேதுருவுக்கு எழும்பிற்று. பேதுரு இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று சொன்னார்.
ஏழெழுபதுதரமட்டும் என்பது மற்றவர்கள் நமக்கு விரோதமாக பேசியதோ அல்லது செய்ததோ நம் நினைவிற்கு வரும் போதெல்லாம் அல்லது எண்ணிக்கையில்லாமல் நம் இருதயத்தில் முழுமையாக மன்னிக்க வேண்டும். அதை எப்படி செய்ய முடியும் என்பதையே இயேசு உவமையை கொண்டு விளக்குகிறார்.
ஒரு ராஜாவிடம் பதினாயிரம் தாலந்து கடன்பட்ட ஊழியக்காரன் ஒருவன் வந்து கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், “தாழவிழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று வேண்டி கொண்டபோது, அந்த ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
அதை அறிந்த அந்த ராஜா, “நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ?” என்றான் (மத்தேயு 18:33).
அதேபோல, நாம் தேவனுக்கு விரோதமாக செய்த குற்றங்கள், மற்றவர்கள் நமக்கு விரோதமாக செய்த குற்றங்களைப் பார்க்கிலும் மிக மிகப் பெரியதாக உள்ளது. தேவன் சிலுவையில் தம்மையே பலியாக விலைக்கிரயம் கொடுத்து நம்மை மன்னித்திருக்க, நாமும் மற்றவர்களை மன்னிக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் தேவனால் எவ்வளவு மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வதே மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் குற்றங்களை மன்னிக்க வழிசெய்கிறது. அதோடுகூட தேவன் மேலுள்ள நமதுஅன்பை பலப்படுத்துகிறது (லூக்கா 7:47).
இரட்சிக்கப்பட்டவர்களே சில வேளைகளில் நம்மை காயப்படுத்தும்போது, இரட்சிக்கப்படாதவர்கள், அதாவது பாவத்தின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள், எப்படி நம்மை காயப்படுத்தாமல் இருக்க முடியும்?
இரட்சிக்கப்பட்டு ஆவிக்குரிய அனுபவங்களை பெற்ற நாம், இரட்சிக்கப்படாமல் இருக்கிறவர்கள் செய்யும் குற்றங்களை அறியாமல் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தேவனை சார்ந்து, தேவ பெலனைக் கொண்டு நாம் அவர்களை மன்னித்து, நேசித்து, அவர்களுக்காக ஜெபித்து வாழும் போது, நாம் தேவனுடைய குணாதிசயத்தை பிரதிபலிக்கவும், அவரை மகிமைப்படுத்தவும், அவர்களும் தேவனை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.
இறுதியாக, பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதின ஆலோசனையை கூறி முடிக்கிறேன். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் 12:18). பவுல் ஏன் இப்படி ஒரு ஆலோசனையை கொடுக்கவேண்டும்? சில வேளைகளில் நாம் கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல, பிறரை மன்னித்து அவர்களுடன் ஒப்புரவாக பிரயாசப்படுவோம். ஆனால், நம்மை காயப்படுத்தியவர்கள் அதற்கு ஒத்துழைக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தீமைக்கு தீமை செய்யாமல் பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் மிகச்சிறந்த குணாதிசயமான மன்னிப்பு நம்மிடத்திலும் வெளிப்பட வேண்டும் என்ற வாஞ்சையோடு வாழ்வோம்.