பலதிறப்பட்ட பணிகள், முறைப்படியான திட்டமிடல் மற்றும் துல்லியமான செயல்பாடு ஆகியவை, மிகவும் அத்தியாவசியமான அம்சங்களாக இருக்கும் ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். உண்மையாகச் சொல்வதானால், “மனிதர்கள்” இந்த நவீன உலகில், “மனிதச் செயல்களாக” உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அதன் மூலம் நான் சொல்வது என்னவெனில், கடினமாய்ப் பாடுபடுவதும், இலக்குகளை அடைவதும் அதிகம் வலியுறுத்தப்படுவதுடன், நமக்கான முக்கியமான விஷயங்களைச் சரியாகச் செய்வது, மிகவும் சவாலான ஒன்றாக ஆகியுள்ளது என்பதே ஆகும்.
நமது பெரிய நோக்கமாகிய, “நித்தியம்” என்பதைப் புறக்கணிக்கும் அளவுக்கு, நாம் செய்கிற காரியங்களில் மிக அதிகமாக நாம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறோமா?
லூக்கா 10:38-42
38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்ளூ அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
மேற்கண்ட பகுதி, மார்த்தாள் மற்றும் மரியாள் என்னும் இரண்டு சகோதரிகளைப்பற்றி விவரிக்கிறது. அவர்கள் இருவருமே, இயேசு தங்கள் இல்லத்துக்கு வருகைதரும் நாளுக்காகத் தங்களுக்கேயுரிய திட்டங்களுடன் காத்திருக்கிறார்கள். விருந்தோம்பலில் மிக்க ஆர்வமுள்ள ஒருத்தியான மார்த்தாள், இயேசுவுக்காகத் தனது இல்லத்தைத் திறந்து கொடுத்து, சிறிதும் தன்னலமற்ற சேவையை வழங்குகிறாள். இருப்பினும், ஆவிக்குரிய விதத்தில், அது தனக்கு பாரச்சுமையாய் இருப்பதை அவள் சிறிதும் உணரவில்லை. மேசியா தன் இல்லத்துக்கு வருகைதரும் தருணத்தில் அவருடன் நேரம் செலவிட முடியாதபடி, அவள் தனது பணிச்சுமையால் திணறிப்போகிறாள். வசனம் 40, “மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து” இயேசுவினிடத்தில் முறையிடும்படிச் செல்கிறாள் என்பதாகச் சொல்கிறது.
மற்றொருபுறம், மரியாளோ, “இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக்
கேட்டுக்கொண்டிருந்தாள்”. அவள், அண்டசராசரங்களின் சிருஷ்டிகர் தனது எளிய இல்லத்தைச் சந்திக்க வருகிறார் என்பதை உணர்ந்து, இயேசு அங்கே தங்கியிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக்கொண்டாள். ஒருவேளை அவள், ஜீவனுள்ள வசனத்தால் நிரப்பப்படவேண்டிய தேவையிலிருந்த, தனது ஆத்துமாவிலுள்ள வெறுமையை உணர்ந்திருக்கலாம். இயேசு, “தேவையானது ஒன்றே, மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்,” என்று சொல்லி, மரியாளின் செயல்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்த்தார். அதனுடனேகூட, “அது அவளை விட்டெடுபடாது,” என்றும் கூறினார்.
பின்னாட்களில், அவர்களது சகோதரன் லாசரு மரிக்கும்போது, அந்தக் குடும்பத்தைத் துயரமான சூழ்நிலை தாக்குகிறது. மரியாள் மறுபடியும் தனது நம்பிக்கையின் இடத்தை நோக்கி ஓடுகிறாள். அது, அவரை ஆற்றித் தேற்றும் இடமாக இப்பொழுது மாறியிருக்கிற, “இயேசுவின் பாதங்களே” ஆகும்.
யோவான் 11:32
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
மேலும் யோவான் 12:1-8-ல், ஆண்டவர் பஸ்காபண்டிகைக்கு முன்பாகப் பெத்தானியாவிலுள்ள அவர்களது இல்லத்திற்கு மீண்டும் வருகைதந்தபோது, அவரது பாதங்களை அபிஷேகிப்பது மிகவும் முக்கியமானது என்று மரியாள் உணர்வதை நாம் காண்கிறோம்.
யோவான் 12:3,7
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்ள அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் . . . என்றார்.
நேரத்தைச் செலவிட்டு, இயேசுவின் சத்தத்தைக் கேட்டதன் மூலம், மரியாள் தேவ திட்டத்துக்கு உடன்படுகிறவளாய் இருந்திருக்கவேண்டும். அது, இயேசுவின் மிக நெருங்கிய உள் வட்டத்தில் இருந்த சீஷர்கள்கூட, முன்னமே புரிந்துகொள்வதற்குக் கடினமாக உணர்ந்த ஒரு காரியமாகும்.
இயேசுவின் பாதங்களைத் தேடுவது என்பது, ஒருவர் தன்னைத்தானே தாழ்த்துகிறதும், தேவனுடைய சித்தத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அர்ப்பணிக்கிறதும் மற்றும் மறைவாயிருக்கும் எதிர்காலம்குறித்து அவரை விசுவாசிப்பதுமான ஒரு செயலாகும். இயேசு தம் சீஷர்களின் பாதங்களைக் கழுவினார் என்று, நாம் யோவான் 13:5-ல் வாசிக்கிறோம். தேவகுமாரனானவர் தம்மையே தாழ்த்தினார். மகிழ்ச்சியான தருணங்களில் மரியாள், இயேசுவின் பாதங்களருகே அமர்ந்து, அவரது வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். துன்பமான தருணங்களிலோ, அவர் இயேசுவின் பாதங்களில் உதவிக்காக முழங்காற்படியிட்டாள். தெய்வீக ஞானத்தின் மூலம், இயேசுவின் மரணத்துக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, ஆண்டவரது பாதங்களை அபிஷேகம் செய்யவேண்டியதன் அவசியத்தை, அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அவரது பாதங்களருகே
காலை புலரும்போது, மனதில் எண்ணற்ற எண்ணங்களுடன் நான் எழுகிறேன்
அணிவகுக்கும் அனுதினப் பணிகளின் பட்டியல்களினூடே தடுமாறுகிறேன்.
நாட்களும், வாரங்களும், விசேஷம் ஏதுமின்றியே கடக்கின்றன
மாதங்களும், வருஷங்களும், சுவாரஸ்யம் தொடாமலேயே உருண்டோடுகின்றன.
பலதிறப்பட்ட பணிகளின் வேகத்தில், இலக்குகளை அடையப் போராடுகிறேன்
என் ஆத்துமாவின் மாபெரும் தேவைகளையோ நான் கண்டுகொள்வதே இல்லை.
அடுத்த நாள் தொடங்குவதற்கும் முன்னதாகவே,
செய்து முடிக்கவேண்டிய ஏராளமானவை உள்ளன
எப்படியோ தட்டுத்தடுமாறி விளிம்புவரை வந்து தப்பிவிடுகிறேன்
அது, பெரும் சவாலாகவே இருக்கிறது.
ஒரு சிறு பொழுது அவரது பாதங்களருகே இளைப்பாற அணுகும்போது
அமைதியான, அமரிக்கையில், என் சிறந்த நிலைக்கு என்னை அவர் எழுப்புகிறார்!
ஜெபம்
ஆண்டவரே, நாங்கள் இங்கே, இப்பொழுது என்கிறதான நிகழ்கால வாழ்வின் நினைவுகளில் மூழ்கிப்போய், நித்தியத்தைக்குறித்த கண்ணோட்டத்தை இழந்திருந்தால், தயவாய் எங்களை மன்னியும். வாழ்வின் சாதாரணமான மற்றும், பரபரப்பான தருணங்களிலும், உம்முடைய பாதங்களருகே அமர்ந்து, உமது அமர்ந்த, மெல்லிய சத்தத்தைக் கேட்பதற்கு எங்களுக்கு உதவி செய்யும்.