பிதாவாகிய தேவனால் இயேசு மகிமையடைதல்
பிதாவாகிய தேவன், இந்த உலகத்தை ஒப்புரவாக்கும்படி, இயேசுவை அனுப்பினார்.
நமது ஆதிப் பெற்றோராகிய ஆதாமும், ஏவாளும், தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பாவத்தில் விழுந்து, இவ்விதமாகத் தேவனால் அவர்களுக்கு ஆதியில் வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டனர். ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்ததன் மூலம் சாத்தான், நியாயப்படி இந்த உலகத்தின் அதிகாரப் பிரபுவாகி, மனுவர்க்கத்திடமிருந்து ஆளுகையையும், அதிகாரத்தையும் எடுத்துக்கொண்டான்.
இயேசு, இவ்வுலகத்தில் தமது ஊழியத்தைத் தொடங்கவிருந்தபோது, அவர் சாத்தானால் மூன்று முறை சோதிக்கப்பட்டார். மூன்றாவதும், கடைசியானதுமான சோதனையில், இவ்வுலகைத் தானே ஆளுவதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி, இயேசுவிடம் சாத்தான் கூறுகிறான். இதைக்குறித்த லூக்காவின் பதிவில், ராஜ்யங்களை எல்லாம் தேவன் தனக்கு ஒப்புக்கொடுத்துவிட்டதாகவும், பதிலுக்கு அவற்றைத் தானும் தனக்கு இஷ்டமானவனுக்குக் கொடுக்க முடியும் என்றும் சாத்தான் உரிமை கோரினான் (லூக்கா 4:6). சாத்தான் இவ்வுலகின் அதிபதியாகத்தான் இருக்கிறான் என்னும் உண்மையை, இயேசு புரிந்துகொண்டார். ஏனெனில் அவர், “சாத்தானே, உன்னால் எனக்கு ராஜ்யங்களை வழங்க முடியாது!” என்று சொல்லவில்லை.
சாத்தான் தனது கடைசிச் சோதனையின் மூலம், எதைச் சாதிக்க முயற்சித்தான்? தேவனுடைய சித்தம் நிறைவேறக் காத்திருக்காமல், தாமே ராஜ்யத்தின்மேல் தமது அதிகாரத்தை அடையும்படி, இயேசுவைச் சாத்தான் சோதித்தான். சாத்தானால் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் இந்தத் தந்திரமான சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள, இங்கே நாம் சற்று முயற்சிப்போம். ஆதி காலத்திலிருந்தே, தேவனுடைய வாக்குத்தத்தங்களையெல்லாம் தங்களது மனித பெலத்தினால் நிறைவேற்ற முயற்சிக்கும்படி, மனிதர்களைச் சாத்தான் தூண்டிவிட்டான். ஆபிரகாமும், சாராளும், வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ணற்ற சந்ததியினரைப் பெறுவார்கள் என்று, தேவனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டார்கள். ஆனால் சூழ்நிலையைக் கண்டும், தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்வரை அவருக்காகக் காத்திருப்பதில் சோர்ந்துபோனதாலும், அவர்கள் தேவனுக்கு அக்காரியத்தில் உதவுவதென்று தீர்மானம் செய்துவிட்டார்கள்! தேவனுக்காகக் காத்திருப்பதற்கு மாறாக, ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பத்தைத் தாங்களே உருவாக்க, அவர்கள் ஒரு திட்டம் வகுத்தார்கள். இப்படியாக, இஸ்மவேல் வந்து பிறந்தான். ஆனால், ஆபிரகாமுக்குத் தாம் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றத் தேவன் தெரிந்துகொண்ட வழி அதுவல்ல. இஸ்மவேலுடைய கை எல்லாருக்கும் விரோதமாயிருந்ததுளூ அவனது சந்ததியினர், தொடர்ந்து அவனது சகோதரர்களுக்கு விரோதமாகவே வாழ்ந்துவந்தனர்.
கிறிஸ்துவின் மூன்றாவது சோதனைக்குத் திரும்புகையில், ஆபிரகாமின் மீது பயன்படுத்திய
அதே உபாய, தந்திரங்களையே, சாத்தான் மீண்டும் பயன்படுத்துகிறான். அவன் இயேசுவிடம்: “நான் இப்பொழுது ராஜ்யங்களை உமக்குத் தருவேன், நீரும் தேவனுடைய ராஜ்யத்தை இவ்வுலகிலே ஸ்தாபிக்கலாம். நீர் வந்ததன் நோக்கம் அதுதானே? அது தேவனைப் பிரியப்படுத்தாதோ? இப்பொழுதே, பாடுகள் எதுவுமே இன்றி, நீர் அதைச் செய்யலாம்!” என்று சொன்னான். நம் கர்த்தராகிய இயேசு, 40 நாட்கள் உபவாசத்திற்குப் பின்னர், என்னதான் பெலவீனமான, சோர்ந்துபோன நிலையில், பசியுடன் இருந்தபோதிலும், சோதனையில் விழுந்துவிடவில்லை. அவர், “அப்பாலே போ சாத்தானேளூ உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்” (மத்தேயு 4:10). இந்த மேற்கோள், உபாகமம் 6:13-ல் காணப்படுகிறது.
மனுக்குலத்தின் பாவங்களுக்காகச் சிலுவையில் மரிக்கும்படியாகத் தமது குமாரனை அனுப்பவேண்டுமென்பது, ஆதியிலிருந்தே தேவனுடைய திட்டமாய் இருந்தது. தேவன், சர்வஞானியாயிருக்கிறார் – அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார். தமது உதவி இல்லாவிடில் மனிதன் பாவம் செய்து அழிந்துபோவான் என்பதை, அவர் உலகத் தோற்றத்துக்குமுன்பே அறிந்திருந்தார். ஆகையால் அவர், ஏற்கெனவே இரட்சிப்பின் ஒரு திட்டத்தை – ஒரே மத்தியஸ்தரும், பரிந்து பேசுபவருமான தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுவதற்கான ஒரு வழியை ஆயத்தம் செய்திருந்தார்.
“குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்” (1 பேதுரு 1:19-21)
இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு, அவர் கர்த்தாதி கர்த்தராய் இருந்தார்ளூ அவர் மூலமாகவே அண்டசராசரங்களும் முழுவதும் சிருஷ்டிக்கபட்டன. அவர், தமது மகிமையை அங்கேதானே விட்டுவிட்டு, நம்மை மீட்கும்பொருட்டு இந்தப் பூமிக்கு ஒரு மனிதராக வருவதைத் தாமே முழு விருப்பத்தோடு தெரிந்துகொண்டார்.
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:6-8).
இயேசுவைப் பூமிக்கு அனுப்பியதால், அந்நாட்களிலிருந்த ரோம சாம்ராஜ்யத்தை வீழ்த்திவிடுவது தேவனுடைய திட்டமல்ல. இயேசுவின் இவ்வுலகிற்குரிய ஊழியத்தின் மைய நோக்கமே, நமது ஆவிக்குரிய நிலையைச் சீர்ப்படுத்துவதுதான். மனுக்குலம் முழுவதுமே, தன் பாவங்களில் மரித்துப்போய்த் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நம்மேல் அவர் வைத்த அன்பு எத்தனை பெரியது என்றால், நாம் அதற்குத் தகுதியற்றவர்களாய் இருந்தும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காக வந்தார். அவரில் விசுவாசிப்போர் ஒருவராகிலும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவர், பாவத்துக்கான விலைக்கிரயத்தைச் செலுத்த வந்தார். அவரது மனு அவதாரம் முழுவதுமே, தனித்தன்மை வாய்ந்ததும், களங்கமற்றதுமான, தேவனுக்கான அன்பையும், இழந்துபோன ஆத்துமாக்களின் மீதான அன்பையுமே நோக்கமாய்க் கொண்டிருந்தது. இது, தேவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற ஒன்றாகும். ஏனெனில் தேவன், பாவிகளை நேசிக்கிறார். (யோவான் 3:16)
சிலுவையிலே கிறிஸ்து, உதவியற்ற பாவிகளான நம் சார்பாகச் சாத்தானை வீழ்த்தினார். இயேசு சிலுவைக்குச் செல்லும் முன்பு, அவர்:
“இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறதுளூ இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்” (யோவான் 12:31), என்று அறிவித்தார்.
வெறுமையான கல்லறையின் மூலமாகக் கிறிஸ்து, சாத்தானின் மிகவும் அதிக வல்லமையுள்ள ஆயுதமாகிய மரணத்தையும்கூட அழித்தார். தேவனுடைய திட்டத்துக்குத் தாழ்மையும், கீழ்ப்படிதலும் உள்ளவராய் இருந்ததன் மூலம் இயேசு, அவர் இந்தப் பூமியில் நிறைவேற்றவேண்டும் என்று தேவன் அனுப்பிய நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றினார்.
பிதாவாகிய தேவன், இயேசுவை உயர்த்துகிறார்.
“ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:9-11).
ஏனெனில், ஜீவனையும், பரலோகத்தையும், பூலோகத்தையும் சிருஷ்டித்தவரான குமாரனாகிய தேவன், மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும், கீழ்ப்படிந்தவராவது என்பது, தாழ்மையின் உச்சக்கட்டமான செயலாகும். அதிகபட்சக் கீழான நிலைமைக்குத் தம்மைத் தாழ்த்திய இயேசு, பரலோகத்தில் தமது மகிமையான ஸ்தானத்துக்குப் பிதாவினால் உயர்த்தப்பட்டார். குமாரானானவரை, உயர்த்தப்பட்ட ராஜாவாக நாம் கனம்பண்ணி, ஆராதிக்கவேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்புகிறார்.
யோசேப்பின் வாழ்க்கைக்கும், இயேசுவின் வாழ்க்கைக்குமிடையே, வியக்கத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. அந்த ஒற்றுமைகளுள் ஒன்று, யோசேப்பு தாழ்த்தப்பட்டதன் பின்பு, அவர் உயர்த்தப்படுதலாகும். யோசேப்பு, தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குச் சிறைக்கு அனுப்பப்பட்டார். எதிர்பாராத நிகழ்வுகளின் ஒரு திருப்பமாக, அவர் திடீரென்று ஒரு சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லும்படியாகப் பார்வோனின் முன்னிலையில் அழைத்துச்செல்லப்படுகிறார். அவர் வெற்றிகரமாகச் சொப்பனத்துக்கு அர்த்தம் சொன்னபின்பு, எகிப்துதேசம் முழுமைக்கும், அதாவது தனக்கு மட்டும் அடுத்த ஸ்தானத்தில், பார்வோன் அவரை அதிகாரியாக்குகிறார்.
யோசேப்பைப்போல இயேசுவும், இழந்துபோன இந்த உலகத்தைப் பிதாவாகிய தேவனோடு ஒப்புரவாக்குவதற்காகச் சிலுவையைச் சகித்தபின்பு, அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். இது இயேசுவால் வெளிப்படுத்தப்படுவதை, மத்தேயு 28:18-ல் நாம் காண்கிறோம். “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடு(ங்கள்)” (மத்தேயு 28:18,19).
வேதாகமத்தில் மிகவும் மனங்கவரும் வசனங்களுள் ஒன்று, சங்கீதம் 110:1-ல் காணப்படுகிறது. இயேசு பூமிக்கு வருவதற்கு ஏறத்தாழ 14 தலைமுறைகளுக்கு முன்பே, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால், தாவீது இந்தச் சங்கீதத்தை எழுதினார். 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலப் பிரசங்கியாரான சார்ல்ஸ் ஸ்பர்ஜன், இந்தச் சங்கீதத்தைப் பற்றித் தனது கருத்தைப் பதிவிடும்போது, மிகவும் ஆழ்ந்த விதத்தில் இந்த வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறார்:
“யேகோவா, தமக்குச் சரி நிகரான குமாரனுடனான தம்முடைய இரகசியமான உரையாடலை, ஒரு மனிதக் காது கேட்பதற்கும், ஒரு மனித எழுதுகோல் பதிவு செய்வதற்கும் அனுமதிப்பது, அவரது பக்கமிருந்து என்னவொரு கிருபையான சிலாக்கியம்! குமாரனானவருடனான அவரது தனிப்பட்டதும் மற்றும் பரிசுத்தமானதுமான உரையாடலைக்குறித்த வெளிப்பாடு, அவரது ஜனங்களுக்குப் புத்துயிரூட்டுவதற்காக இங்கே வெளியரங்கமாக்கப்பட்டிருப்பதை, நாம் எவ்வளவு சிறப்பான விதத்தில் மதித்துப் போற்றவேண்டும்!”
மேன்மை தங்கிய திரித்துவத்துக்குள் நிகழும் இந்த பரிசுத்தமான உரையாடலைப் புரிந்துகொள்ள, இப்பொழுது அந்த வசனத்தை நாம் காண்போம். சங்கீதம் 110-ன் தொடக்க வசனத்தில், பிதாவாகிய தேவன், தம் குமாரனுடன் பேசி, அவரது சத்துருக்களின்மேல் ஆளுகை செய்யும்படியாக அவரை நியமிக்கிறார்.
“கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்” (சங்கீதம் 110:1).
தாவீது, “கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,” என்று எழுதியபோது, மேசியாவானவர் (அல்லது கிறிஸ்துவானவர்), தனது ஆண்டவரும், எஜமானருமாய் இருக்கிறார் என்று தெளிவாகச் சொல்கிறார். இயேசு, தாவீதுக்கு ஆண்டவராய் இருக்கிறார் (அதை விடுத்து வேறு விதமாக நினைக்கக் கூடாது), என்பதை நிரூபிப்பதற்காகப் பரிசேயர்களுக்கு இயேசுவால் மத்தேயு 22:41-45-ல் இந்த வசனம், மேற்கோள் காட்டப்பட்டது. இந்த மேசியானிய மற்றும் தீர்க்கதரிசனச் சங்கீதம், அவர் தமது உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராகப் பரமேறிப் பிதாவினிடத்துக்குச் சென்றபோது,
உண்மையாய் ஆனது (ரோமர் 14:9).
சங்கீதம் 110:1-ன் இரண்டாம் பகுதி, பிதாவானவர் அனைத்தையும் இயேசுவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படுத்துவதைப்பற்றிப் பேசுகிறது. “அவர் ஏற்கெனவே உயர்த்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அது நிகழவேண்டிய அவசியமென்ன?” என நீங்கள் ஆச்சரியப்படலாம். இது, அதிகாரம் குறைவுபடுவதனால் அல்ல. மாறாக, இவ்வுலகிற்கு எதிரான நியாயத்தீர்ப்பை ஒத்திவைப்பதில், தேவன் பொறுமையோடிருப்பதனால் ஆகும் (2 பேதுரு 3:9-15). இது, மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றும்படியாக, இந்தப் பூமியிலுள்ள ஒவ்வொருவருக்கும் கிருபை மிகுந்த நல்வாய்ப்பை அளிக்கிறது. இதனால்தான், “பாதபடியாக்கிப் போடும்வரைக்கும்” என்ற மிக முக்கியமான வார்த்தையைத் தேவன் பயன்படுத்துகிறார். இப்பொழுதும்கூட இயேசு, பிதாவாகிய தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்ளூ அவர் பூமியனைத்தின்மேலும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் – ஆனால் திரும்பி வந்து இவ்வுலகை நியாயந்தீர்ப்பதற்கான வேளை, கிறிஸ்துவுக்கு இன்னும் வரவில்லை.
தானியேல் 2-ல், மனிதக் கையால் பெயர்க்கப்படாமல், மலையிலிருந்து பெயர்ந்து வந்த கல், என்று கிறிஸ்து சித்திரிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அந்தக் கல் வளர்ந்து, ஒரு பெரிய பர்வதமாகிப் பின்பு பூமியையெல்லாம் நிரப்புகிறதான, ஒரு வளர்ச்சிக்காலப் பகுதி இருக்கிறதுளூ அது, உலகத்தின் இராஜ்யங்கள் மீதெல்லாம், கிறிஸ்து மற்றும் அவரது திருச்சபையின் அதிகாரம் பரவிப் பெருகுவதைக் குறிப்பிடுகிறது. அனைவரும் மற்றும் அனைத்தும், இயேசுவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படுவதை உறுதிப்படுத்தும்படியாகப் பிதாவாகிய தேவன், குமாரனானவரின் சார்பில் துரிதமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கடைசி நியாயத்தீர்ப்பில் கிறிஸ்து, அனைத்து மக்களையும், தேசங்களையும் நியாயந்தீர்த்து, பாவம் மற்றும் மரணம் உட்பட்ட அனைத்துச் சத்துருக்களையும் அழித்துவிடுவார்.
“அதன்பின்பு முடிவு உண்டாகும்ளூ அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரேளூ ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்” (1 கொரிந்தியர் 15:24-28).
அப்படியானால், நம் ஆண்டவரைக்குறித்து நமது மனோபாவம், நிகழ்காலத்தில் எப்படி இருக்கவேண்டும்? இந்தப் அண்டசராசரங்களின் தெய்வீக ராஜாவாகவே, நாம் குமாரனானவரை கனம்பண்ணவும், ஆராதிக்கவும்வேண்டும் என்று, பிதாவாகிய தேவன் இப்பொழுது விரும்புகிறார்.
“அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்” (யோவான் 5:22, 23).
பிதாவானவர் வாஞ்சிப்பதுபோலவே, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை உடையவரான, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஆராதிப்போமாக. அவரது மகிமையை, இந்தப் பூமியெங்கும் அறிவிக்கவும், பரவச்செய்யவும், நாம் தீவிரமாய்ப் பாடுபடுவோமாக.
தெய்வாட்டுக்குட்டிக்குப்
பன்முடி சூட்டிடும் இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்!
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம் சதாகாலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.
“பன்முடி அவருக்குச் சூட்டிடு”
பாமாலை 1851
பாடலை எழுதியோர்: மேத்யூ ப்ரிட்ஜஸ் மற்றும் காட்ஃப்ரே த்ரிங்