பிரிவினைவாதம் என்பது என்ன?
பிரிவினைவாதம் என்கிற சொல், பிரிவு என்னும் வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அதிலிருந்துதான் பகுதி என்ற சொல்லும் வருகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவை மிகக் கவனமாகப் பின்பற்றுகிறவர்கள்… கருத்தளவில் எவ்வளவுதான் நெருங்கிய ஒற்றுமையுடையவர்களாய் இருந்தாலும், மற்றப் பிரிவினரைக் குறித்த வெறுப்பு உணர்வுடன்தான் இருக்கிறார்கள்.
என் பெற்றோர் வேறுபட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் பின்னணிகளிலிருந்து வந்த சூழ்நிலையில், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் காலங்களில், நான் இந்தியாவில் வளர்ந்துவந்தேன். இது, அந்த இளம் பருவத்திலேயே எனக்கு, இந்த இரு வேறுபட்ட பிரிவுகளைக் குறித்த நுட்பமான அறிவைக் கொடுத்தது. என் தாயாரின் சபைப்பிரிவு, பெயரளவிலான கிறிஸ்தவத்தில் ஆழமாக ஊறியிருந்தது. ஆனால், அதற்கு ஒரு வளமான வரலாற்றுப் பாரம்பரியம் இருந்ததுளூ என் தந்தையாரின் சபைப்பிரிவோ, சட்டங்களிலும், சபைப்பாகுபாட்டிலும் ஆழ்ந்து ஊறியிருந்தது. ஆனால், அதற்குப் பரிசுத்தத்தைக் குறித்துத் தீவிர வாஞ்சையிருந்தது. என் தந்தையின் சபைப்பாகுபாடு, எந்த ஒரு மாபெரும் இறையியல் வேறுபாடுகளையும் அடிப்படையாய்க் கொண்டிருக்கவில்லை. ஆனால், முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பாரம்பரியங்கள் மற்றும் விதிகளின் அடிப்படையில் இருந்தது. இது, பிற சபைப்பிரிவுகளின் மீது அவர்களுக்கு ஓர் ஆதிக்க மனப்பான்மையைக் கொடுத்தது. பிரிவினைவாத மனப்பான்மை என்பது, என்னைப்போன்ற ஒரு சிறு பிள்ளைக்கும்கூட விரும்பத்தகாததாய் இருந்தபோதிலும், அது, அந்தச் சபைப்பிரிவில் வளர்ந்துவந்தபோது, என்னையும்கூட விட்டுவைக்கவில்லை. எங்களது சபைப்பிரிவின் அடிப்படைக் கட்டமைப்பைச் சாராத யாரொருவரும், எப்படித் தேவனை “உண்மையாய்” ஆராதிக்க முடியும் என்கிற நினைப்பில் நான் வளர்ந்துவந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.
கிறிஸ்தவச் சமுதாயத்திற்குள் இந்தப் பிரிவினைவாதம் என்பது ஒன்றும் ஒரு புதிய நிகழ்வு அல்ல. அது எப்பொழுதுமே இருந்துவந்துள்ளது – இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோதும்கூட. மாற்கு 9:38-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல, ஒருமுறை அவரது சீஷர்கள் அவரிடத்தில் வலுவான ஒரு புகாருடன் அணுகிச் சென்றார்கள். அதிலே, இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி ஊழியம் செய்துகொண்டிருந்த, அவர்களைப் பின்பற்றாத “வேறொரு” நபர் இருந்தார்.
ஒருவேளை, இயேசு அந்த நபரைக் கடிந்துகொண்டு, தமது சீஷர்கள் மட்டுமே அவர்களது போதகரான இயேசுவை மெய்யாய்ப் பின்பற்றுபவர்கள் என அடையாளப்படுத்தவேண்டுமென்று, யோவானும் மற்ற சீஷர்களும் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் அதற்கு மாறாக, இயேசு தமது பதிலால் அவர்களைத் திருத்தினார் (காண்க மாற்கு 9:39).
ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது சபைப்பிரிவைச் சாராதவர் என்கிற ஒரே காரணத்துக்காக, யாரொருவரையும் தேவனுடைய ஊழியத்திலிருந்து தடை செய்யும்படி, நம் ஆண்டவராகிய இயேசு நமக்குப் போதிக்கவில்லை என்று அவரது பதிலின் அடிப்படையில், நம்மால் யூகிக்க முடிகிறது. தாம் ஒரு காரியத்தைச் செய்யத் தீர்மானிக்குமுன், நமது ஒப்புதலைப் பெறவேண்டுமென்று, நம் ஆண்டவருக்கு அவசியமில்லைளூ நமது அமைப்புடன் இணைந்திராதபோதும், அவரது நாமத்தினால் ஊழியத்தைச் செய்கிற ஒருவரை அவர் பயன்படுத்த விரும்பினால், அது அவரது சித்தம். “நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்,” என்கிற வார்த்தைகளின் மூலம், பிரிவினைவாதமானது, கிறிஸ்தவர்களிடையே வன்மையாகத் தடைசெய்யப்படுகிறது.
ஒற்றுமையின் தேவன்:
சாத்தான், பொய்க்குப் பிதா மட்டுமல்ல, பிரிவினையைத் தொடங்கியவனும் அவனே. முதல் மனிதர்களைக் குறித்த தேவனுடைய பூரணமான திட்டத்திற்கு விரோதமாக, அவர்களைக் கீழ்ப்படியாமைக்குள் செல்லும்படி அவன் வஞ்சித்தான். அப்பொழுதிலிருந்து, மனிதநேயம் ஒருவருக்கொருவர் முரண்பட்டதாகவே இருந்துவருகிறது. குடும்பங்களும், தேசங்களும், எல்லா விதங்களிலும் தொடர்ச்சியான பிரிவினைகள் மற்றும் மோதல்களால் பிளவுபட்டுக்கொண்டேயிருக்கின்றன.
இந்தப் பிரிவினைக்கு மாறாக, நம் தேவன் தமது பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையில் ஐக்கியப்பட்டு வாழ்ந்திருக்க விரும்புகிறார். சங்கீதம் 133-ல், நல்லிணக்கத்துக்கான அவரது இருதய வாஞ்சை, அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கீதம் 133:1-2 – “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்… ஒப்பாயிருக்கிறது.”
யாத்திராகமம் 30-ல், அபிஷேகத் தைலம் எப்படித் தயாரிக்கப்படவேண்டும் என்பதைக் குறித்து, மோசேயிடம் தேவன் தெளிவான வழிமுறைகளைக் கொடுத்தார் என்பதைப் பார்க்கிறோம். இந்த விசேஷித்தத் தைலமானது, பிரதான ஆசாரியனை அபிஷேகிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அது, வெள்ளைப்போளம், சுகந்த கருவாப்பட்டை, சுகந்த வசம்பு, மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை ஒலிவ எண்ணெயில் கலந்து செய்த கலவையைக் கொண்டிருந்தது. சங்கீதம் 133-ல், இந்த விசேஷித்த அபிஷேகத் தைலத்தை, சகோதரருக்குள் அல்லது கிறிஸ்துவின் விசுவாசிகளுக்குள் நிலவும் ஒற்றுமையின் தன்மையுடன், சங்கீதக்காரர் ஒப்பிடுகிறார். ஒலிவ எண்ணெயில் ஊறியிருக்கும், பல்வேறு விசேஷித்த, நறுமணப் பொருட்களின் கலவையைப்போலவே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும், வெவ்வேறு பின்னணிகள் மற்றும் இனங்களிலிருந்து வந்து, நல்லிணக்கத்தில் வாழ்வதற்குக் கூடிவருகின்றதான, இரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்ட, பரிசுத்தவான்களாலான ஓர் அமைப்பாகும்.
இயேசு தமது செய்தியில், ஒற்றுமைக்குத் தெளிவானதோர் இடத்தை வைத்திருந்தார். யோவான் 17:22-ல் காணப்படும், இயேசுவின் உணர்வுப்பூர்வமான, பிரதான ஆசாரியரின் ஜெபத்தில், அவர் பிதாவிடம், நாமனைவரும் இந்த ஒருமனப்பாட்டை அனுபவிக்கும்படியாக ஜெபிக்கிறார்.
விசுவாசிகளாக, நம்முடைய ஒன்றுகூடுதல், பூரணப்படுதல் மற்றும் ஒற்றுமை ஆகியவை, கிறிஸ்துவில் முழுமையாகக் காணப்படுகின்றன. நமது தடுப்புச் சுவர்களெல்லாம் தரைமட்டமாவதையும், நாமனைவரும் ஒரே குடும்பமாக ஆக்கப்படுவதையும் அவரில் மட்டுமே நாம் காண முடியும். விசுவாசிகளிடையே உள்ள இந்த ஒற்றுமை, வழி தவறிய இந்த உலகத்திற்குக் கிறிஸ்துவின் அன்பைக் கொண்டுசெல்லும் வாய்க்காலாக இருக்கும்.
இன்றியமையாதவைகளில் ஒற்றுமை:
வெகு காலத்துக்கு முன்பே நாம் அறிந்துகொண்டிருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பக்கூடிய சில சத்தியங்கள் வாழ்வில் இருக்கின்றன. அப்படியானதொரு தருணம், 12 ஆண்டுகளுக்கு முன்பு, நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
வசித்துவந்தபோது, எனக்கு நேரிட்டது. அந்தச் சமயத்தில், நான் ஒரு வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். தினந்தோறும் நான் மிக நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருந்தது. அப்படிப் பயணிக்கும் நேரங்களில், “வேத விளக்க மனிதர்” என்கிற ஒரு வானொலி நிகழ்ச்சியை நான் கேட்டுவந்தேன். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரான ஹேங்க் ஹேன்கிராஃப், வேதாகமம் தொடர்பான அநேக முக்கியமான விஷயங்களை எனக்குக் கற்பித்தார். அவற்றுள் வேத வசனத்தைப் பயன்படுத்தி வேதத்தை வியாக்கியானப்படுத்துவது எப்படி என்பதும், தேவ ஆலோசனை முழுவதையும் புரிந்துகொள்வதும், என் நினைவில் இன்றும் பெருமதிப்புக்குரியவையாய் உள்ளன.
ஹேன்கிராஃப் இந்த மேற்கோளைக் குறிப்பிட்டதை நான் முதன்முதலாகக் கேட்டபோது (இது அடிக்கடி ஹிப்போவின் புனித அகஸ்டின் கூறியதாகக் கூறப்படுகிறது), இந்தச் சுருக்கமான மேற்கோளில் அடங்கியிருக்கிற ஞானத்தைக் கண்டு, பிரமிப்படைந்தேன் – மேலும், அது பிற கிறிஸ்தவர்களைக் குறித்த எனது கண்ணோட்டத்தின் மனப்பான்மையை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டது.
“இன்றியமையாதவைகளில், ஒற்றுமைளூ அவசியமற்றவைகளில், சுதந்திரம்ளூ அனைத்;திலும், இரக்கம்…”
இந்த மேற்கோளை, நான் மேலும் பகுத்துப் பார்க்கிறேன். விசுவாசிகள், இன்றியமையாத போதனைகளைப் பொறுத்தவரையில், திட்டவட்டமான உடன்பாட்டில் இருக்கவேண்டும். கிறிஸ்தவத்தின் மைய மற்றும் இன்றியமையாத போதனைகளில் யாரேனும் ஒருவர் விசுவாசம் கொள்ளாவிடில், அங்கே ஐக்கியமில்லை. அத்தியாவசியமற்ற அல்லது இரண்டாம் நிலைப் போதனைகளில், கிறிஸ்தவர்களுக்குள் பலத்த விவாதங்களுக்கு இடமிருக்கிறது. ஆனால், மெய்யான ஐக்கியம் கொள்வதிலிருந்து அது நம்மைத் தடுத்துவிடக்கூடாது – அத்துடன் இவை அனைத்துமே, அன்புடன் செய்யப்படவேண்டும்.
நாம் எப்போது பிரியவேண்டும்?
கள்ளப் போதனைகள் மலிந்து கிடக்கிற ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மேலும் சாத்தான், சத்தியத்திற்கும், இயேசு கிறிஸ்துவின் சபைக்கும் எதிராக கடுமையானதொரு யுத்தத்தைத் தொடுத்துக்கொண்டிருக்கிறான். யூதா 1-ல், பரிசுத்தவான்களுக்கு ஒரே ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக, தைரியமாய்ப் போராடவேண்டுமென்று நாம் உணர்த்தப்படுகிறோம்.
யூதா 1:3 – “… பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.”
தேவனின் வார்த்தை என்கிற விதத்தில் வேதாகமத்தில் நம்பிக்கை என்பதோடு, கீழ்க்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ள இந்த இன்றியமையாதவற்றையும் சேர்த்து, வரலாற்றுச் சிறப்புமிக்கக் கிறிஸ்தவப் போதனைகள் உருவாகியுள்ளன.
• ஒரே திரித்துவ தேவன்ளூ பிதாவின், குமாரனின், பரிசுத்த ஆவியானவரின் தேவத்துவம்.
• கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு.
• கிறிஸ்துவின் பாவமற்ற வாழ்க்கை.
• பதிலீடு செய்கிற பாவநிவாரணம் – ஆதாமின் பாவம் நம் அனைவருக்கும் மரணத்தைக் கொண்டுவந்தது மற்றும் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் மாசுபடுத்தியது. இருந்தபோதிலும் தேவன், “இரண்டாம் ஆதாம்” ஆகிய இயேசு கிறிஸ்துவின் பரிகாரக் கிரியையின் மூலமாக நமக்கு மீட்பை அருளிச் செய்திருக்கிறார்.
• மரித்தோரிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதல்.
• கிறிஸ்துவின் மறு வருகை – அதாவது, கிறிஸ்து உலகின் பாவங்களைச் சுமக்கும்படியாக ஒருமுறை பூமிக்கு வந்தார். அதைப்போலவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்க்கவும், அனைத்தையும் மீட்டெடுக்கவும் அவர் மீண்டும் திரும்பி வருவார்.
• இரட்சிப்பு, கிருபையினால் மட்டுமே, விசுவாசத்தைக்கொண்டு மட்டுமே, கிறிஸ்துவில் மட்டுமே.
நாமனைவருமே, இந்த அடிப்படைச் சத்தியங்களை மையமாகக்கொண்டு, ஒன்றுபட்டிருக்கவேண்டும். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மையமாக இருக்கக்கூடிய, இந்தப் போதனைகள் எங்கே நிராகரிக்கப்படுகின்றனவோ, அங்கே ஒத்துழைப்பும், ஐக்கியமும் இருக்க முடியாது. இதுவே நாம் அவர்களைவிட்டு விலகுவதற்கான சரியான தருணம்.
மற்ற விசுவாசிகளுடன் சமாதானம் செய்துகொள்ளப் பிரயாசப்படுங்கள் இன்றியமையாத கிறிஸ்தவப் போதனைகளில் ஓர் உடன்பாடு இருக்கும்போது, நம் உடன் விசுவாசிகளுடன் நாம் பிரிவினையைத் தவிர்க்கவேண்டும். நம்மிடையே விவாதங்கள் இருக்கலாம், சரிதான். ஆனாலும் அந்த நாளின் முடிவில், கருத்து வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தை முன்னெடுத்துச் செல்ல, ஒன்றிணைந்து உழைப்பதற்கான வழிகளை நாம் தேடவேண்டும்.
ரோமர் 12:18 – “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”
இயேசு கிறிஸ்துவின் சபையானது, பல்வேறுவகைப்பட்டது. அது, அனைத்துக் கண்டங்களிலும், எண்ணற்ற தேசங்கள் மற்றும் கோத்திரங்களுடன் பரந்து விரிந்துள்ளது. இதைப்போலவே, இரண்டாம் நிலைப் போதனைகள் குறித்த வேறுபாடுகளைப் பொறுத்தமட்டிலும் அது, பல்வேறுவகைப்பட்டதாயிருக்கிறது. எல்லாக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாயிருந்து, இவ்விதமாகவே எல்லாப் போதனைகளிலும் ஒருமனமுள்ளவர்களாயிருக்கவேண்டுமல்லவா? ஆம், அதுதான் சரியானது. ஆனால், நிஜத்தில்? அப்படியில்லை. கிறிஸ்து, தமது பிள்ளைகள் அனைவரையும் வெவ்வேறு விதங்களில் சீர்ப்படுத்துகிறார். அனைவருமே, போதனைகளுக்கும், கடைப்பிடித்தலுக்கும், இன்னும் முழுமையான இணக்கம் உள்ளவர்களாகவில்லை. சில வேளைகளில் இந்த வேறுபாடுகள், தேவனுக்கு ஒத்தவாறு நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்ளும்பொருட்டு, புதிய சபைகள் மற்றும் உட்பிரிவுகளை உருவாக்குவதில் சென்று முடிகின்றன. ஆனால், இவ்வகைப் பிரிவுகள், நம்மிடையே நல்லிணக்கத்தைக் குலைத்துவிடுவதாக இருக்கக்கூடாது (காண்க ரோமர் 15:5). இந்த வேறுபாடுகள் முக்கியமானவையாயிருக்கிற அதே வேளையில், நாம் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் சமாதானத்தை அவை அழித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நாமும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வோம்.
ரோமர் 15:5-7 – “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.”