யாத்திராகமம் 19:16-20:21
16. மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18. கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20. கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
22. கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
23. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
24. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.
25. அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
யாத்திராகமம் 20:1-21
1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
13. கொலை செய்யாதிருப்பாயாக.
14. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15. களவு செய்யாதிருப்பாயாக.
16. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
17. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
18. ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
19. மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
20. மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
21. ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
தேவன் தன்னிடம், எரியும் முட்புதரிலிருந்து பேசிய இடத்திற்கே திரும்பிவருவது, மோசேக்கு ஒரு வித்தியாசமான உணர்வாயிருந்திருக்க வேண்டும். அவன் முதலில் அங்குச் சென்றபோது, அவனைச் சுற்றிலும் ஒரு செம்மறியாட்டு மந்தை சூழ்ந்திருந்தது. இப்போதோ, அவன் இருபது இலட்சம் ஜனங்களால் சூழப்பட்டிருந்தான். தேவன் உண்மையுள்ளவராய் இருந்தார். அவர் தம் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி, அவர்களைச் சீனாய் மலைக்குக் கொண்டுவந்தது, பழைய ஏற்பாட்டிலுள்ள அவரது மாபெரும் அற்புதங்களுள் ஒன்று.
“கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது” (யாத்திராகமம் 19:18). அம்மலையின் அடிவாரத்தில், தடுப்புகள், அல்லது “எல்லைகள்” (19:12, 23) அமைக்கப்பட்டன. மலை முழுவதும் மிகவும் கடுமையாக அதிர்ந்தது. எக்காளசத்தம் மிகவும் பலமாய்த் தொனித்தது. தேவன், தம்முடைய ஜனங்களுக்குத் தமது நியாயப்பிரமாணங்களைக் கொடுப்பதற்காக இறங்கி வந்துகொண்டிருந்தார்.
தேவனுடைய கிருபையின் புதிய வெளிப்பாடு
இரட்சிக்கப்படாத மக்கள் பரலோகம் நோக்கி மேலேறுவதற்குத் தேவனின் நியாயப்பிரமாணம் ஓர் ஏணியாய் என்றுமே இருந்ததில்லை. அது, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றப்பட்டிருந்த தேவ ஜனங்களுக்கு, எப்பொழுதுமே ஒரு வாழ்வியல் முறைமையாக இருந்துவந்துள்ளது. அதனால்தான், “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே” (20:2), என்று தேவன் தம் ஜனங்களுக்கு நினைவுட்டுவதாகப் பத்துக் கற்பனைகள் தொடங்குகின்றன.
“இந்தக் கட்டளைகளையெல்லாம் பின்பற்றுவதால் நீங்கள் என் ஜனம் ஆகலாம் என்பதற்காக இவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்,” என்று தேவன் சொல்லவில்லை. அவர், “நீங்கள் ஏற்கனவே என் ஜனமாக இருக்கின்ற காரணத்தால், நான் இந்தக் கட்டளைகளை உங்களுக்குத் தருகிறேன்,” என்றுதான் சொன்னார். இரட்சிக்கப்படுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகள் உங்களிடம் கூறவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலம், உங்களைக் கிருபையினால் இரட்சிக்கும்போது, தேவன் உங்களை அழைக்கிறதான வாழ்வையே, கட்டளைகள் வரைபடமாகக் காண்பிக்கின்றன.
தேவ மகிமையின் ஒரு சிறு நிழலாட்டம்
பத்துக் கற்பனைகள் என்பவை, ஏதோ இஷ்டம்போலப் பட்டியலிடப்பட்ட விதிகளின் தொகுப்பல்ல. அவை, தேவனுடைய குணாதிசயங்களை நேரடியாகப் பிரதிபலிக்கக்கூடியவைகள்.
புதிய ஏற்பாட்டில், தேவமகிமையை இழந்துபோவதும், நியாயப்பிரமாணத்தை மீறுகிறதுமே பாவம் என்பதாக வரையறுக்கப்படுகிறது (ரோமர் 3:23; 1 யோவான் 3:4). இவையிரண்டையும் இணைத்துப் பார்த்தால், நியாயப்பிரமாணம் தேவனுடைய மகிமையின் வெளிப்பாடு என்னும் ஏற்கக்கூடிய முடிவுக்கு நாம் வரலாம்.
நீங்கள் விபசாரம் செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் களவு செய்யக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் நம்பத்தக்கவர். நீங்கள் பொய் சொல்லக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் சத்தியத்தைப் பேசுகிறவர். நீங்கள் பிறனுக்குரியதை இச்சிக்கக்கூடாது என்பது ஏன்? ஏனெனில், தேவன் சமாதானமாகவும், தம்மில்தாமே பூரணராகவும் இருக்கிறார்.
தேவன், “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” (யாத்திராகமம் 20:3), என்று சொல்லும்போது, அவர் ஒருவரே தேவன் என்பதே அதன் காரணமாயிருக்கிறது. அவரைப்போல வேறு ஒருவரும் இல்லை. மேலும், தேவன் தமது கிரியைகளிலெல்லாமிருந்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்பதனாலேயே, வாரத்தின் ஒரு நாளில் நாம் ஓய்ந்திருக்கவேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்.
தேவனின் கட்டளைகள், இரட்சிக்கப்பட்ட, அவருடைய சொந்த ஜனங்களுக்கே கொடுக்கப்பட்டன. நீங்கள் அவருக்குரியவர்களானால், அவை உங்களுக்குரியவை. தேவன் உங்களிடம், “நீ என்னுடையவர்கள், ஆகவே நான் யார் என்கிற மாதிரியின்மேல், உன் வாழ்க்கையை அமைத்துக்கொள், தெய்வீகமான ஒரு வாழ்க்கை இப்படித்தான் காணப்படும்,” என்று சொல்கிறார்.
தேவனின் அன்பைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி
தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரது பத்துக் கற்பனைகளும் அன்பான ஒரு வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பறைசாற்றுகின்றன. ஒரு முறை நமது ஆண்டவராகிய இயேசுவிடம், “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது?” (மத்தேயு 22:36), என்று கேட்கப்பட்டது. ஏதேனும் ஒரு கட்டளையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இயேசு அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:37-39), என்று சொன்னார்.
நடைமுறையில், அன்பான ஒரு வாழ்க்கை எப்படிக் காணப்படுகிறது? பத்துக் கற்பனைகள் அதற்கான பதிலைத் தருகின்றன. முதல் நான்கு கற்பனைகள், தேவனிடத்தில் அன்புகூருவது எப்படியிருக்கிறது என்று கூறுகின்றன:
1. கர்த்தரையல்லாமல் உங்களுக்கு வேறே தேவர்கள் இல்லை.
2. யாதொரு சொரூபத்தையும் உண்டாக்காதீர்கள். தேவனிடத்தில், அவர் இருக்கிறவிதமாகவே அன்புகூருங்கள். அவர் எப்படியிருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறவிதமாகவோ, நீங்கள் கற்பனை செய்கிறவிதமாகவோ அல்ல.
3. தேவனுடைய நாமத்தைக் கனம்பண்ணுங்கள். அதை ஒருபோதும் வீணிலே வழங்காதீர்கள்.
4. தேவனுக்கு உங்கள் நேரத்தைக் கொடுங்கள் – ஆராதிக்க, ஊழியம் செய்ய, மற்றும் நித்தியமான வாழ்க்கை உங்களுக்கு முன்பாக இருக்கிறதைக் குறித்து நினைவுகூரவும், அதற்கு ஆயத்தப்படவும் நேரம் கொடுங்கள்.
கடைசி ஆறு கற்பனைகளும் உங்களிடத்தில் நீங்கள் அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவதன் அர்த்தம் என்னவென்பதைக் கூறுகின்றன:
5. அது, உங்கள் வீட்டில், உங்கள் வாழ்க்கையில் தேவன் கொடுத்திருக்கும்
முதல் உறவுகளுடன் தொடங்குகிறது: உங்கள் தகப்பனையும் உங்கள்
தாயையும் கனம்பண்ணுங்கள்.
6. அது, நீங்கள் மனித வாழ்வைத் தேவனின் பரிசுத்தமான பரிசாக மதிக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
7. அது, நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உண்மையானவராய் இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
8. அது, பிறருடைய பலவீனம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாதவர் என்பதையும், நம்பிக்கைக்கு உரியவர் என்பதையும் குறிக்கிறது.
9. அது, உங்கள் வார்த்தையில் நீங்கள் உண்மையுள்ளவர் என்பதையும், உங்கள் வார்த்தையும் உண்மையானது என்பதையும் குறிக்கிறது.
10. அது பிறருக்குத் தேவன் கொடுத்திருக்கிற ஈவுகளைக் குறித்து நீங்கள் களிகூருகிறீர்கள் என்பதையும், அவர் அவர்களுக்குக் கொடுத்திருப்பதை நீங்கள் உங்களுக்கென்று இச்சிப்பதில்லை என்பதையும் குறிக்கிறது.
பத்துக் கற்பனைகள் தேவனுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கின்றன. தேவன் அன்பாகவே இருக்கிறார், அவரது இயல்பைப் பிரதிபலிக்கவே நம்மை அழைக்கிறார். அவரது இயல்பு எப்படியிருக்கிறது என்பது, பத்துக் கற்பனைகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆத்துமாவை ஊடுருவும் ஓர் எக்ஸ்-ரே கருவி
பல் மருத்துவரைச் சந்தித்த ஓர் அனுபவத்தைக் குறித்து ஒரு போதகர் சொன்னார். முக்கியமாகத் தனக்கு வலியில்லை என்பதால், பல் மருத்துவரைச் சந்திப்பதை அவர் நீண்டகாலமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டேயிருந்தார். அவருக்கு அந்த அனுபவம் விரும்பத்தக்கதாயில்லை.
அவரது பல் மருத்துவர் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்துவிட்டு, அவற்றை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்தார். வருத்தத்துடன் அவர், “ம்ம்ம்… அடடா…! மிகவும் மோசம். இந்த உள்பூச்சுக்களுக்கடியில் நிறையச் சிதைவு இருக்கிறது,” என்று சொன்னார்.
இவரோ, “ஆனால், எனக்கு வலியில்லை,” என்பதிலேயே நின்றார். அதைப் பல் மருத்துவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர், “உங்கள் சிகிச்சைக்குச் சற்றுப் பெரிய சிக்கலான செயல்முறை தேவைப்படும், அத்துடன், எவ்வளவு சீக்கிரமோ, அவ்வளவு நல்லது,” என்றார்.
அநேக மக்கள், தங்களது ஆவிக்குரிய நிலைமையைக் குறித்த, எந்தவித வலி உணர்வையும் அறியாமலேயே வாழ்க்கையைக் கடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்துகொண்டிருப்பதாகவும், பொதுவாக ஒரு மதிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்துவருவதனாலேயே தாங்கள் நல்லதொரு ஆவிக்குரிய அந்தஸ்தில் இருப்பதாகவும் பொய்யாக அனுமானித்துக்கொள்கிறார்கள். ஆனால், தேவனின் நியாயப்பிரமாணம், ஆத்துமாவை ஊடுருவிப் பார்க்கும் ஓர் எக்ஸ்-ரே கருவியைப் போலிருக்கிறது. நாம் தேவனைத் தேவனாக இருக்கவிடுவதற்குச் சிரமப்படுகிற ஜனமென்றும், பிறரைக்காட்டிலும் நம்மை நாமே நேசித்துக்கொள்வதுதான் நமது இயல்பாக இருக்கிறதென்றும் அது நமக்குக் காண்பிக்கிறது.
இயேசு கிறிஸ்து உங்களுக்குப் பிரதானமாகத் தேவைப்படுவது, நீங்கள் அதிக செழிப்பும், அதிக பூரணமும், அதிக திருப்தியுமுள்ளதொரு வாழ்வை அடைவீர்கள் என்பதற்காக அல்ல. அது, நீங்கள் இயல்பிலும், நடைமுறையிலும் ஒரு பாவியாயிருக்கிறீர்கள் என்பதற்காகவே. தேவனின் நியாயப்பிரமாணம் என்னும் எக்ஸ்-ரே கருவி அதைக் காண்பிக்கிறது.
எக்ஸ்-ரே கருவியைப்போலவே, கெட்ட செய்திகளைக் கொடுத்தாலும்கூட, நியாயப்பிரமாணம் நன்மையானதுதான். பல் மருத்துவரின் அறிக்கையை அந்தப் போதகர் விரும்பவில்லைதான். எனினும், பிரச்னை இன்னும் மோசமடைவதற்கு முன்னரே அதை அறிந்துகொள்ள முடிந்ததற்காக அந்தப் போதகர், நன்றியுள்ளவராயிருந்தார். ஒரு பிரச்னையிருக்கிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளாவிடில், அதற்கான பரிகாரத்தைத் தேடிச்செல்ல மாட்டீர்கள்.
கட்டளைகள், நம் கிரியைகளைவிட மிக ஆழமானவை என்பதை, இயேசு தெளிவுபடுத்தினார். அவை, நம் இருதயங்களின் எண்ணங்களையும், நோக்கங்களையும் ஆராய்ந்தறிகின்றன. “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்ளூ ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” (மத்தேயு 5:27-28).
பத்துக் கற்பனைகளைச் சரியானவிதத்தில் புரிந்துகொள்வது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு நேராய் உங்களை நடத்தும் (கலாத்தியர் 3:24). நியாயப்பிரமாணம் உங்களைக் கிறிஸ்துவினிடத்தில் இன்னும் கொண்டுவரவில்லையெனில், அதன் மாபெரும் நோக்கத்தை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்கள். பரிசேயர்களுக்கு இயேசுவின் செய்தியிலிருந்த குறிப்பு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்…அப்படியிருந்தும்…என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40), என்பதுதான். அவர்கள் வேதத்தைக் கற்பதில் மும்முரமாயிருந்தார்கள். ஆனால், கிறிஸ்து தங்களுக்குத் தேவைப்படுவதை அவர்களுக்குக் காண்பித்திருக்கக்கூடிய, அதன் முழு அர்த்தத்தையும் கோட்டைவிட்டுவிட்டார்கள்.
இரயிலுக்கான தடம் அமைத்தல்
தேவ ஜனங்களால் அவருடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியவில்லை என்பதைப் பழைய ஏற்பாட்டுச் சரித்திரம் தெளிவுபடுத்துகிறது. நியாயப்பிரமாணம், நாம் என்ன செய்யவேண்டுமென்று கூறுகிறது. ஆனால், அதைச் செய்வதற்கான வல்லமையை அது நமக்குத் தருவதில்லை.
பின்பு வரக்கூடிய வேதாகமச் சரித்திரத்தில், தேவன் ஒரு புதிய உடன்படிக்கையை வாக்குப்பண்ணுகிறார். அதில் அவர், நாம் என்ன செய்யவேண்டுமென்று கூறுவது மட்டுமின்றி, அதன் வழியில் செல்வதற்கு நமக்கு வல்லமையும் தருகிறார்: “உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்” (எசேக்கியேல் 36:27).
தேவனுடைய நியாயப்பிரமாணம், இரயில் செல்லும் தண்டவாளப்பாதை போன்றது.
தண்டவாளப்பாதை, செல்லும் திசையைக் காட்டுகிறது. ஆனால், இரயிலானது, என்ஜினில் சக்தியில்லையெனில் முன்னோக்கி நகராது. அவ்வாறாகவே, தேவனுடைய நியாயப்பிரமாணத்தில், தேவ ஜனங்களாகிய நமக்கென்று போடப்பட்டுள்ள பாதையில் நாம் வழிநடக்கப் பரிசுத்த ஆவியானவரின் விசேஷித்த கிரியை மட்டுமே நமக்கு வல்லமை தர முடியும்.
கட்டளைகளை வாக்குத்தத்தங்களாக மாற்றிக்கொள்ளுதல்
திருடனானபடியினால், சிறைவாசத்திலேயே காலம் கழித்த ஒரு மனிதனைப் பற்றிய மாபெரும் கதை ஒன்றுண்டு.ழூ சட்டத்தின் எல்லையற்ற, சக்திவாய்ந்த கரங்களில் அவன் சிக்கும்வரை, திருடுவதுதான் அவனது வாழ்க்கைமுறை. அவன் சிறைச்சாலையில் கழித்த நாட்களில், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தைக் கேட்டு, அற்புதவிதமாக மனமாற்றமடைந்தான்.
அவன் விடுதலையாகிற நேரம் வந்தபோது, அம்மனிதன், தான் மிகப்பெரிய
போராட்டத்தைச் சந்திக்கப்போவதை அறிந்தான். அவனது பழைய நண்பர்களில் பெரும்பாலானவர்கள் திருடர்களாக இருந்தார்கள். அத்துடன், தனது பழைய வாழ்க்கைமுறையின் அமைப்பை மாற்றுவது அவனுக்குச் சுலபமாக இருக்கப்போவதில்லை.
புதிதாக விடுதலையடைந்தபின் வந்த முதல் ஞாயிறன்று, அவன் ஓர் தேவாலய வளாகத்துக்குள் நுழைந்தான். அதன் முகப்பில், பத்துக் கற்பனைகள் ஒரு பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. அதில், “களவு செய்யாதிருப்பாயாக,” என்று அவனைக் கண்டனம் செய்வதாகத் தோன்றிய ஒரு கட்டளையின் வார்த்தைகளை நோக்கி, அவனது கண்கள் உடனடியாக ஈர்க்கப்பட்டன.
அவன் ‘அது எனக்கு நிச்சயமாக வேண்டாம்,’ என்றும், ‘எனக்கு என் பலவீனம் தெரியும். நான் என் தோல்வியையும் மற்றும் நான் எதிர்கொள்ளப்போகும் போராட்டத்தையும் அறிவேன்,’ என்றும் தனக்குள் நினைத்துக்கொண்டான். ஆராதனை தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோது, அவன் அந்தப் பலகையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அந்த வார்த்தைகளை மீண்டும் வாசித்தபோது, அவை ஒரு புதுவித அர்த்தம் கொடுப்பதாகத் தோன்றியது. முன்பதாக அவன், “களவு செய்யாதிருப்பாயாக!” என்ற இந்த வார்த்தைகளைக் கண்டனம் தொனிக்கும் ஒரு கட்டளையாக வாசித்திருந்தான். ஆனால் இப்பொழுதோ, தேவன், “நீ களவு செய்ய மாட்டாய்!” என்ற அதே வார்த்தைகளைத் தன்னிடம் விடுதலையின் ஒரு வாக்குத்தத்தமாகப் பேசுகிறார் என்று தோன்றியது. அம்மனிதன், கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய மனுஷனாக ஆனான். அவனது பழைய வாழ்க்கைமுறையை ஜெயங்கொள்வதைப் பரிசுத்த ஆவியானவர் அவனுக்குச் சாத்தியமாக்கித் தருவார் என்று தேவன் வாக்குத்தத்தம்பண்ணினார்.
நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, தேவன், நீங்கள் அவருக்குப் பிரியமானதொரு வாழ்க்கையை வாழத்தக்கதாக, உங்களுக்குத் தமது பரிசுத்த ஆவியானவரை அருளுவார். தோற்பதற்கென்றே உங்களை விதித்திருக்கும் ஒரு போராட்டத்திற்கும், நீங்கள் இறுதி வெற்றியைச் சுதந்தரித்துக்கொள்ளும் ஒரு யுத்தத்திற்குமிடையேயான வித்தியாசத்தை அவரது வல்லமை ஏற்படுத்தும். நியாயப்பிரமாணம் நீங்கள் எப்படி வாழவேண்டுமென்று தேவன் விரும்புவதை உங்களுக்குக் கூறுகிறது. இயேசு கிறிஸ்து இந்த வாழ்க்கையைச் சாத்தியமாக்குகிறார்.
திறவுண்டது
நியாயப்பிரமாணம், நமது வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பாவங்களை அம்பலப்படுத்துகிற கண்ணாடியாயிருக்கிறது. சரியாகப் புரிந்துகொண்டால், அது ஓர் இரட்சகரின் தேவை நமக்கிருப்பதை உணர்த்தி, நம்மைக் கிறிஸ்துவிடம் கொண்டுவரும். மேலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்கும்போது, நியாயப்பிரமாணமானது, சாத்தியமற்றவைகளை நம்மைச் செய்யச்சொல்லி வற்புறுத்தும் ஒரு பட்டியலாக இனி ஒருபோதும் இருக்காது. மாறாக, புதிய சாத்தியக்கூறுகளின் ஒரு விளக்கமாக இருக்கும்.
குறிப்பு: ழூ ஒரு போதகர், தனது நண்பர் சார்ல்ஸ் பிரைஸிடமிருந்து இந்தக் கதையைக் கேட்டறிந்தார். அதை அவர் பயன்படுத்திக்கொள்ள அவரது நண்பர் அனுமதித்ததற்காக அவர் நன்றி தெரிவித்துக்கொள்கிறார். காண்க சார்ல்ஸ் பிரைஸ், மேத்யூ: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா? (ஃபெர்ன், ஸ்காட்லாந்து: கிறிஸ்டியன் ஃபோகஸ், 1998), 88.
1. பத்துக் கற்பனைகள் எப்படித் தொடங்குகின்றன? அவை ஏன் கொடுக்கப்பட்டன? நியாயப்பிரமாணம் இன்று நமக்கு விடுக்கும் செய்தி என்ன?
2. பத்துக் கற்பனைகள் காலத்துக்கு உட்பட்டவையா? இன்று நமக்குப் புதிய கற்பனைகள் தேவைப்படுகிறதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
3. உங்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்துகொண்டிருந்தால், அத்துடன் நீங்கள் பொதுவாக மதிப்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவருவதாக உணர்ந்தால், பத்துக் கற்பனைகளைப் புறக்கணிப்பது பாதுகாப்பானதா? ஏன் அல்லது ஏன் இல்லை?
4. ஒரு நபர், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை அவர் தவறவிட்டுவிட்டாரோ என்று எவ்வாறு அறியலாம்?
5. நியாயப்பிரமாணம் எவ்வாறு இரயில் தடத்தைப் போலிருக்கிறது? நியாயப்பிரமாணம் ஒரு நபரின் வாழ்வில் செய்ய வேண்டுமென்று தேவன் நினைக்கிற கிரியைகளை அது நிறைவேற்றி முடிக்கும் பொருட்டு, அதற்கு இன்னும் வேறென்ன தேவைப்படுகிறது?