வேதாகமம் சார்ந்த விசுவாசம்

கிறிஸ்துவ வாழ்க்கை

நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் கடினமான காலங்களினூடாகக் கடந்து செல்கிறோம். அத்தகைய காலங்களில், நாம் தேவனிடமிருந்து தீர்வுகளை உடனடியாக எதிர்பார்க்கிறோம். ஆகவே, தேவன் ஜெபங்களுக்குப் பதில் தருகிறார் என்று விசுவாசித்து, நாம் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம். நம் ஜெபங்களுக்குப் பதில் வரவில்லையென்றால், நமது விசுவாசம் போதுமானதாயிருக்கிறதா என்று கேள்வியெழுப்புகிறோம். நீங்கள் செழிப்பின் சுவிசேஷங்களைப் பின்பற்றுபவராய் இருந்தால், போதுமான அளவு விசுவாசம் உங்களுக்கு இல்லை என்ற குற்றவுணர்வு தோன்றுகிறது. மேலும், ஏதோ உங்கள் விசுவாசம்தான் ஒரு தீர்வை அடைவதற்கான பிரதான வழி என்பதுபோல, நீங்கள் உங்கள் விசுவாசம் அதிகரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள்.

மத்தேயு 15:21-28-ல், கானானிய ஸ்திரீயின் விசுவாசத்தைப்பற்றி நாம் வாசிக்கிறோம். அவள், தனது குறிப்பிடத்தக்க மூன்று அறிக்கைகள் மூலமாக, வேதாகமம் சார்ந்த விசுவாசத்தின் மூன்று குணாதிசயங்களைப் பிரமிக்கத்தக்க வகையில் சித்திரிக்கிறாள். நீங்கள் கடினமான காலங்களினூடாகக் கடந்து செல்லும்போது நினைவுகூரும்படியாக, அந்த மூன்று குணாதிசயங்கள் இங்கே தரப்படுகின்றன.

1. வேதாகமம் சார்ந்த விசுவாசம் உரிமைகளைப்பொறுத்ததல்ல

ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் (வசனம் 22).

கானானிய ஸ்திரீ ஒருத்தி, பிசாசினால் கொடுமையாய் வாதிக்கப்படும் தன் மகளின் சார்பாக, ஆண்டவரிடம் இரக்கத்துக்காகக் கூக்குரலிடுகிறாள். அவள் மட்டும் எருசலேமில் வசித்திருந்தால், அப்படிப்பட்டதான ஜெபம் மாபெரும் விசுவாசமாகக் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவள், தீரு மற்றும் சீதோன் எனப்பட்ட, யூதருடையதல்லாத இரண்டு பட்டணங்களிலிருந்து வருபவள். மத்தேயு 20-ல், பார்வையற்ற இரண்டு நபர்களைப்பற்றி நாம் வாசிக்கிறோம். கானானியப் பெண்ணைப்போலவே அவர்கள், “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்,” என்று கூப்பிட்டார்கள். இது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல, காரணம் அவர்கள் யூதர்களுடைய பிரதேசங்களிலிருந்து வருகிறார்கள். இந்தக் கானானிய ஸ்திரீ, இயேசுவை, “ஆண்டவரே” என்றும், “தாவீதின் குமாரனே” என்றும் அழைப்பது, பெரியதொரு ஆச்சரியமாகும். அவள், இயேசுவின் யூதச் சீஷர்களுக்கு ஒரு அந்நியரும், ஆச்சரியமுமாய் இருக்கிறாள். ஆனால், நிச்சயமாய்த் தேவனுக்கு ஆச்சரியமாயில்லை.

அந்த ஸ்திரீ, இயேசுவைத் தாவீதின் குமாரனாக ஏற்றுக்கொள்கிறாள். “தாவீதின் குமாரன்” என்பது, மேசியாவைக்குறித்த, யூதர்களுக்கேயுரித்தான, தனித்துவமான ஒரு பெயராகும். விடுதலையைப் பெற்றுக்கொள்ளப் புறஜாதியார் தேடிச் சென்றதான, பிசாசைத் துரத்துகிற ஒருவராக, அவள் இயேசுவைக் கருதவில்லை. அவள், தாவீதின் குமாரனாக இயேசுவை
ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் வருகிறாள். அவள் இதை எப்படி அறிந்தாள்?

வேதாகமம் சார்ந்த விசுவாசமானது, இயேசு கிறிஸ்து என்னும் நபரில் கொள்ளும் நம்பிக்கையால் வெளிப்படுத்தப்படுகிறது. அந்த விசுவாசமும்கூட, எபேசியர் 2:8-ல் தேவனுடைய ஓர் ஈவாகச் சித்திரிக்கப்படுகிறது. அது சம்பாதிக்கப்பட முடியாது. அந்தக் கானானிய ஸ்திரீ, இயேசுவினிடத்தில் தனது உரிமைகளின் அடிப்படையில் வரவில்லை என்பதை இங்குக் கவனியுங்கள். இனத்தின் அடிப்படையிலான அவளது பின்னணியும், அவளது பாலினமும் உதவி பெறுவதற்கான தகுதியற்ற மனுதாரராக அவளை ஆக்கிவிடுகின்றன. அவள் கிருபைக்காக மன்றாடும் ஒரு நபர்போல் இயேசுவிடம் வருகிறாள். அவள் தனது உரிமைகளின் அடிப்படையில் விடுதலைக்காக மன்றாடியிருப்பாளானால், வேதாகமப் பிரகாரமான விசுவாசம் தகுதிகளின் அடிப்படையிலான ஒன்று என்னும் முடிவுக்கு நாம் வர முடியும். அவள் இரக்கத்துக்காகக் கெஞ்சியபடியால், வேதாகமம் சார்ந்த விசுவாசமானது, தகுதிகளுக்கு அப்பாற்பட்டது என நாம் புரிந்துகொள்கிறோம். நீங்கள் தேவனிடத்தில் விசுவாசத்தோடு உங்கள் விண்ணப்பங்களைக் கொண்டுவரும்போதெல்லாம், இதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கடின முயற்சியால் அதை நிறைவேற்றலாகாது. மாறாக, இரக்கத்துக்காக மன்றாடுவதன் மூலமே நிறைவேற்றலாகும்.

2. வேதாகமம் சார்ந்த விசுவாசம் அசைவுறாதது

ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும். (வசனம் 25)

இரக்கத்துக்காக மன்றாடிய பின்பு அந்தக் கானானிய ஸ்திரீ, மூன்று தடைகளை எதிர்கொள்கிறாள். அவற்றுள் இரண்டு, இயேசுவிடமிருந்தும், ஒன்று, இயேசுவின் சீஷர்களிடமிருந்தும் வருகிறது. முதலாவது, இயேசு அவளுக்கு ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. மத்தேயு 20-ல், “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்,” என்று பார்வையற்ற இருவர் கூப்பிட்டபோது, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இயேசு உடனடியாகப் பதிலளித்தார். ஆனால் இங்கேயோ, அந்தக் கானானிய ஸ்திரீ, “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்,” என்று கூப்பிடுகிறாள்ளூ இயேசு ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. இரண்டாவது, இயேசுவின் சீஷர்கள் வந்து, “இவளை அனுப்பிவிடும்,” என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். இந்தப் பெண் தங்களுக்குக் குடைச்சல் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. மூன்றாவது, தமது சீஷர்கள் வேண்டிக்கொண்டபடி அந்தப் பெண்ணை அனுப்பிவிடுவதற்குப் பதிலாக இயேசு, “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல,” என்று பதிலளித்தார். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு, இயேசு அப்பெண்ணின் கோரிக்கையை நிராகரிப்பதைப்போலவே அது காணப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை உற்று நோக்கினால், இயேசு அப்பெண்ணிடமிருந்து இன்னும் தொடர்ந்து பதில் வரவேண்டும் என்ற நோக்கத்துடன், வேண்டுமென்றே காத்திருப்பதைப்போல் அது தோன்றுகிறது.

இயேசுவில் தனது விசுவாசத்திற்காக அந்தப் பெண், சோர்வுறச் செய்யும் மூன்று தடைகளை எதிர்கொள்கிறாள். அவளது இடத்தில் நான் இருந்திருந்தால், நான் நம்பிக்கை இழந்திருப்பேன். ஆனால் அந்தக் கானானிய ஸ்திரீ, நம்பிக்கையில் தளரவில்லை. மாறாக அவள், ஆச்சரியப்படத்தக்க ஒன்றைச் செய்கிறாள். அவள் வந்து, இயேசுவுக்கு முன்பாகப் பணிந்துகொண்டு, “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்,” என்று சொல்கிறாள். அவள் விடாப்பிடியாய் நிற்கிறாள். அவள், இயேசுவில் கொண்ட தனது விசுவாசத்தில் சந்தேகப்படவில்லை. இதுவே வேதாகமம் சார்ந்த விசுவாசம். வேதாகமம் சார்ந்த விசுவாசம் அசைவுறாதது.
ஒருவேளை, தற்போது நீங்களும் இயேசுவிடமிருந்து அதேவிதமான மௌனத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கலாம். அல்லது ஒருவேளை நீங்கள் உங்களது நிலைமையைக்குறித்து முற்றிலும் அக்கறையே காண்பிக்காத மக்களால் புண்பட்டிருக்கலாம். அல்லது ஒருவேளை, தேவன் உங்களது ஜெபத்துக்குப் பதிலளிக்கவில்லை என்பதுபோல் நீங்கள் உணரலாம். அந்தக் கானானியப் பெண்ணைப் பொறுத்தவரையில், இயேசு தொடர்ந்து அவளது ஆண்டவராகவே இருக்கிறார். தேவன் மௌனம் காக்கிறார் அல்லது அவர் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் அல்லது பதிலளிக்கவில்லை என்று எப்படியிருப்பினும், அவர் இன்னும் நம் ஆண்டவர்தாம். காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாகச் சந்தேகப்படுகிறவனைப்போல, நாம் இருக்கவேண்டாம்.

3. வேதாகமம்; சார்ந்த விசுவாசம் வெட்கப்படாதது

மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே.” (வசனம் 27)

கானானிய ஸ்திரீயிடம் இயேசு முதலில் கூறியதான, “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல,” என்பது, உற்சாகமூட்டுவதாக இல்லை. இருப்பினும் அப்பெண், “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்,” என்று வேண்டிக்கொண்டாள். நம் ஆண்டவர் இரண்டாவதாகக் கூறியதான, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல,” என்பது, முதலாவது பேச்சைவிட இன்னும்கூடச் சோர்வுறச் செய்வதாக உள்ளது. அவள் மட்டும் இயேசுவினிடத்தில் விசுவாசம் கொண்டிராவிட்டால், இந்தப் பதில் அவளது அனைத்து நம்பிக்கையையும் அவளிடமிருந்து அற்றுப்போகப்பண்ணியிருக்கும். நவீனக்கால வாசகர்களுக்கு, இது முரட்டுத்தனமாகவும், அவமதிப்பாகவும் தோன்றக்கூடும். ஆனால் இது அந்தக் கானானியப் பெண்ணுக்கு, அப்படிப்பட்டதாக இல்லை. முரட்டுத்தனமும், அவமதிப்புமாகக் காணப்பட்டதும்கூட, அவளை மௌனமாக்கவில்லை.

முதலாவது, அவள் தனது சூழ்நிலையைக்குறித்து வெட்கப்படவில்லை. அவள், “மெய்தான் ஆண்டவரே,” என்று மனதார ஒத்துக்கொள்கிறாள். அவளுக்கு அதில் கருத்து வேறுபாடில்லை. அவள், தான் ஒரு புறஜாதியாராக, அல்லது, பொதுவாக அந்நாட்களின் யூதக் கண்ணோட்டத்தின்படி, ஒரு “நாயாக” இருப்பதுபற்றிக் கவலைப்படவில்லை. அவளைப் பொறுத்தவரை, தன் சூழ்நிலை எப்படியிருப்பினும், இயேசுவே ஆண்டவர். அவள், தான் இயேசுவிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதற்கு எந்த உரிமையும் அற்றவள் என்பதை மனதார ஒத்துக்கொள்கிறாள். இரண்டாவதாக அவள், இரக்கத்தின் சில துணிக்கைகள் தனக்கு வழங்கப்படவேண்டும் என்று மன்றாடுகிறாள். ஆண்டவரிடமிருந்து, துணிக்கைகளையும் பெற்றுக்கொள்ள அவள் மனதாயிருக்கிறாள். வேதாகமம் சார்ந்த விசுவாசம் வெட்கப்படுவதில்லை. வேதாகமம் சார்ந்த விசுவாசம், ஒருவரது சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது அல்லது வெளிப்படையாகவும், குற்றவுணர்வோ, தயக்கமோ இன்றியும் செயல்படுகிறது. ஆண்டவரிடத்திலிருந்து நீங்கள், இரக்கத்தின் ஏதாவது சில துணிக்கைகளைக் கேட்கும்போதெல்லாம், இந்தக் கானானிய ஸ்திரீயை நினைவுகூருங்கள்.

இப்படிப்பட்ட வியக்கத்தக்கதான – உரிமைகளினடிப்படையில் இல்லாத, அசைவுறாத மற்றும் வெட்கப்படாத விசுவாசத்துக்கு: “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிதுளூ நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது,” என்று இயேசு பதிலளிக்கிறார். அந்தக் கானானிய ஸ்திரீ ஒரு நற்சாட்சியைப் பெறுவது மட்டுமல்ல, அத்துடன் அவரது மகளும் உடனடியான ஆரோக்கியத்தைப் பெறுகிறாள். சுகமடைதல் உடனடியானதாக இருந்தாலும், சுகமானதற்கான பாதை விறுவிறுப்பான கட்டங்கள் நிறைந்தது.

இந்தச் சம்பவம், ஒரு மகிழ்ச்சியான முடிவுடன் நிறைவுபெறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான நோக்கம், உங்களது ஒவ்வொரு ஜெபமும் பதிலளிக்கப்படும் என்று வாக்குப்பண்ணுவது அல்ல. வேதாகமம் சார்ந்த விசுவாசம் என்பது என்னவென்று, வாசகர்கள் புரிந்துகொள்ள உதவுவதே இதன் நோக்கம் ஆகும். நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் நின்றுகொண்டு, நாம் எப்பொழுதுமே இதேபோன்ற மகிழ்ச்சியான முடிவை எதிர்பார்க்க முடியாமல் போகலாம். ஆனால் புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இல்லாத நித்தியத்தின் மறு பக்கத்தில் நாம், நிச்சயமாகவே சிறப்பான முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.

ஆசிரியர்

மேலும் படிக்க