தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிதல்

கிறிஸ்துவ வாழ்க்கை

நீங்கள் எப்பொழுதாவது தேவனுடைய பரிசுத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? தீர்க்கதரிசிகளுக்குள் முதன்மையானவராகக் கருதப்பட்ட ஏசாயா, தேவனின் பரிசுத்தத்தை அனுபவித்தறிந்தார். அது அவருக்கு நிரந்தர மாற்றத்தைக் கொடுத்தது.

உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்ளூ அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது” (ஏசாயா 6:1).

தேவனின் பரிசுத்தத்தைக் குறித்த ஏசாயாவின் அனுபவத்தைக் காண்பதற்குமுன், உசியா ராஜாவைப் பற்றி நான் சிறிது சொல்ல விரும்புகிறேன். உசியா ராஜா, யூதாவை 52 வருஷங்கள் அரசாண்டார். அவரது நீண்ட ஆட்சிக் காலத்தில், மக்கள் சமாதானத்தையும், செழிப்பையும் அனுபவித்தார்கள். ஆனால் இப்பொழுதோ, உசியா ராஜா மரித்துப்போனார். அசீரிய சாம்ராஜ்யம் எழுச்சி பெற்றிருந்த அதே நேரத்தில், யூதா, அரசரை இழந்து நின்றது. தேவஜனங்கள், பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டார்கள். எனினும், சரித்திரத்தின் இந்தத் தருணத்தில் ஏசாயா, ராஜாவாகிய சேனைகளின் கர்த்தரைக் கண்டார் (வசனம் 5). உலகப் பிரகாரமான இராஜாக்கள் எழுவதும், விழுவதுமாக இருக்கும்போது, நமது ராஜாதி ராஜா, மாட்சிமையிலும், பரிசுத்தத்திலும், என்றென்றைக்கும் ஆளுகை செய்கிறார் என்பதை, இவ்வசனப் பகுதி நமக்கு நினைவூட்டுகிறது.

அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது (வசனம் 1). அந்தச் சிங்காசனம் எவ்வளவு பெரிதானதாகவும், அந்தச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர் எவ்வளவு பெரியவராகவும் இருந்திருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஏசாயாவால் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை. காரணம், தேவனைக் காண்பதற்கு ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கர்த்தருடைய பரலோக ஜீவன்களை ஏசாயா கண்டார்.

சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்ளூ அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தனளூ அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து… (வசனம் 2).

கர்த்தர், சிங்காசனத்தின் மீது வீற்றிருந்தார். சேராபீன்கள், (தேவதூதர் ரூபங்களான, எரிந்து பிரகாசிக்கிறவர்கள்) எப்பொழுதும் பணி செய்வதற்கு ஆயத்தமாக, அவருக்கு மேலாக நின்றுகொண்டிருந்தனர். சேராபீன், இரண்டு
செட்டைகளால் தன் முகத்தை மூடியிருந்தார். அது ஒருவேளை, அச்சம் மற்றும் பயபக்தியின் அடையாளமாக இருக்கலாம். இரண்டு செட்டைகளால் தன் கால்களை மூடியிருந்தார். அது ஒருவேளை, தாழ்மையைக் குறிப்பதாக இருக்கலாம். இரண்டு செட்டைகளால் அவர், கர்த்தரின் கட்டளைகளை நிறைவேற்றுகிறவராகப் பறந்தார்.

சேராபீன்களின் ஓய்வில்லாத பாடலில், குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை ஏசாயா கேட்டார். “தேவனின் பரிசுத்தம்” என்பதே அந்;தப் பாடலின் மையக் கருத்தாக இருந்தது.

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்” (வசனம் 3).

ஏசாயாவின் தரிசனத்தின் மையப்பொருள் இதுதான். “பரிசுத்தர்” என்கிற பெயரடைமொழி, மூன்று முறைகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. மிக மேம்பட்டவைகளை வெளிப்படுத்த அல்லது பரிபூரணத்தைக் குறிப்பிட, எபிரெய மொழியானது, மீண்டும் மீண்டும் கூறும் உத்தியைப் பயன்படுத்துகிறது. வேதாகமத்தில் மும்முறைகள் திரும்ப உச்சரிக்கப்படும் ஒரே சத்தியம், கர்த்தருடைய பரிசுத்தம் மட்டுமே. “பரிசுத்தர்” (அ) “பரிசுத்தம்” என்பது, தூய்மை என்பதைவிட மிகவும் மேலானதாகும். “பரிசுத்தம்” என்பது, தேவனை அவரது படைப்புக்களிலிருந்து வேறு பிரிக்கிற, அவரது தெய்வீகப் பரிபூரணத்துவத்தின் முழுமையைக் குறிக்கிறது. இங்கே, சேராபீன்கள் ஒருவர் மற்றவரிடம், வெறும் “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,” என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கவில்லைளூ மேலும் அவர்கள், “பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது!” என்றும் சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவரது பரிசுத்தம், மகிமைவாய்ந்தது. தேவனின் பரிசுத்தமும், தேவனின் மகிமையும் பிரிக்கப்பட முடியாதவை.

ஏசாயா, சேராபீன்களின் ஓய்வில்லாத பாடலைக் கேட்டபோது, தேவனுடைய பிரசன்னத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது.

கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது” (வசனம் 4).

இவைபோன்ற அசைவுகளும், புகைகளும் ஏதோ புதிதானவைகளல்ல. இஸ்ரவேலர்களும், ஏற்கெனவே சீனாய் மலையின்மேல், தேவனுடைய
பிரசன்னத்தில் இவற்றை அனுபவித்திருக்கிறார்கள் (யாத்திராகமம் 19:18).

தேவனுடைய பரிசுத்தத்தை அனுபவித்ததனால், ஏசாயாவுக்கு இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. முதலாவது, தேவனுடைய தொடுதலும், அவரது சுத்திகரித்தலும் மிகத் தீவிரமாகத் தேவைப்படக்கூடிய ஒரு பாவியாகத் தன்னையே அவர் ஒப்புக்கொண்டார். இரண்டாவது, தேவனின் உத்தரவுக்கு உடனடியாகக் கீழ்ப்படியும், ஒரு தேவ ஊழியனாகத் தன்னையே அவர் ஒப்புக்கொண்டார்.

1. ஒரு பாவியாயிருப்பதை ஒப்புக்கொள்ளுதல்

தேவனுடைய பரிசுத்தம், நமது பாவ நிலையை, அசுத்தத்தை, தகுதியின்மையை மற்றும் பற்றாக்குறைகளை வெளியரங்கமாக்குகிறது.

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்ளூ சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (வசனம் 5).

திடீரெனக் கணப்பொழுது காணக்கிடைத்த ஒரு பரிசுத்தத் தேவனின் தரிசனமும், தனது அசுத்தத்தின் தோற்றமும் தந்த அச்சத்தில், ஏசாயா உடனடியான ஓர் அழிவை எதிர்பார்த்தார். “நான் அதமானேன்” என்பது, “நான் அறுப்புண்டுபோனேன் அல்லது மரணத்துக்கு நியமிக்கப்பட்டேன்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும் ஏசாயா, ஏன் தன்னையே அசுத்த உதடுகளுள்ள மனுஷனாக ஒப்புக்கொள்ளவேண்டும், என நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? ஒரு தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும் ஏசாயா, வார்த்தைகளின் ஊழியத்தையுடைய ஒரு மனிதராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேச்சுதான் அவரது வலிமையும், அவரது சக்திவாய்ந்த திறமையுமாய் இருந்தது! இருப்பினும், காலின் ஸ்மித் தனது பிரசங்கங்களுள் ஒன்றில் சொல்வதுபோல, “நீங்கள் தேவனுடைய பரிசுத்தத்தை உணரும்போது, உங்களில் சுத்திகரிக்கப்படவேண்டியவை, உங்களிடத்திலுள்ள மிக மோசமானவை மட்டுமல்ல. மாறாக, உங்களிடத்திலுள்ள மிகச்சிறந்தவையுங்கூடத்தான் என்பதை நீங்கள் காண்பீர்கள்.” சில நேரங்களில் நமக்கிருக்கும் மாபெரும் வரங்களும்கூடச் சுத்திகரிக்கப்படவேண்டியுள்ளது. தேவனுடைய பார்வையில், நமது தூய்மை மாசுள்ளதாயிருக்கிறது. தேவனுடைய பார்வையில், நமது மிகச்சிறந்த மற்றும் மாபெரும் வரங்களும்கூட, அசுத்தமானவையாய் இருக்கின்றன.

இந்தக் கதை, தேவனின் பரிசுத்தத்தையும், தனது பாவநிலையையும் ஏசாயா கண்டதோடு மட்டும் முடிந்துவிடுவதாயில்லை. ஏசாயா, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை, அதாவது, தேவனின் பாவநிவிர்த்தியைக் கண்கூடாகக் கண்டார்.

அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்” (வசனங்கள் 6-7).

முதல் இரண்டு வசனங்களில், சேராபீன்கள் பணி செய்வதற்கு ஆயத்தமாக, எப்பொழுதும் நின்றுகொண்டிருந்தார்கள் என்று பார்த்தோம். தேவனுடைய கட்டளையின்பேரில், சேராபீன்களுள் ஒருவர் பலிபீடத்திலிருந்து, எரிகின்ற நெருப்புத் தழலை எடுத்துக்கொண்டுவந்தார். இதன் மூலம், ஏசாயாவின் சார்பில், அவருக்குப் பதிலாக ஒரு பலியானது (ளரடிளவவைரவழையெசல ளயஉசகைைஉந), பலிபீடத்தில் ஏற்கெனவே ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இரத்தம் ஏற்கெனவே சிந்தப்பட்டிருக்கிறது என்றும், பாவநிவிர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். ஏசாயாவின் மாபெரும் வரமாகிய, அவரது உதடுகளைச் சேராபீன் தொட்டார். மேலும் சேராபீன், “உன் அக்கிரமம் நீக்கப்பட்டது, உன் பாவம் நிவிர்த்தியானது,” என்று சொன்னார்.

ஏசாயாவுக்கு உண்மையாய் இருந்ததே, நமக்கும் உண்மையாய் இருக்கிறது. நமது மோசமானவற்றிலும், நமது சிறந்தவற்றிலும், தேவனுடைய தொடுதலையும், சுத்திகரித்தலையும், நாம் அனுபவிக்க முடியும். சரி, ஏசாயாவுக்காக, அவருக்குப் பதிலாக ஒரு பலியானது (ளரடிளவவைரவழையெசல ளயஉசகைைஉந), பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. நம்மைப்பற்றி என்ன? என்று நீங்கள் யோசிக்கக்கூடும். தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு, “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபிரெயர் 9:12). கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியினாலே, நாம் தேவனின் தொடுதலையும், சுத்திகரித்தலையும் பெற்றுக்கொள்கிறோம்.

2. ஒரு தேவ ஊழியராக இருப்பதை ஒப்புக்கொள்ளுதல்

இந்தத் தரிசனத்தில் முதன்முறையாகக் கர்த்தர் பேசினார். ஏசாயா, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார்.

பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்” (வசனம் 8).

நண்பர்கள் சுவிசேஷ ஜெபக்குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊழியக் கூட்டங்களில், “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” என்கிற இந்த வசனத்தை மீண்டும், மீண்டும், மீண்டும், கண்டதும், கேட்டதும், என்னுடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில் என்னை உருவாக்கிய அனுபவங்களுள் ஒன்றாகும்.

ஏசாயா, “இதோ, அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்,” என்று சொன்னார். ஏசாயாவின் பதில் உடனடியானது. மேலும், தேவன் நியமித்த பணிக்கு அவர், உடனடியாகக் கீழ்ப்படிந்தார். தனது பாவத்தைக்குறித்து உணர்த்தப்பட்டிருப்பவரும், கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியை அனுபவித்திருப்பவருமான ஒரு நபரால் மட்டுமே, தன்னைத் தேவனின் ஊழியக்காரன் அல்லது ஊழியக்காரி என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ள முடியும். கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியானது, தேவனுக்கு மகிழ்ச்சியுடனும், கீழ்ப்படிதலுடனும் ஊழியம் செய்ய, நமக்கு உதவுகிறது (எபிரெயர் 9:14). கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலமாக, தேவனுக்கு ஊழியம் செய்ய, நாம் அதிகாரம் பெற்றிருக்கிறோம்.

பொல்லாதவர்களும், உண்மையற்றவர்களும், கலகக்காரர்களும், கடினப்பட்டவர்களுமான ஜனங்களுக்குத் தேவனின் நியாயத்தீர்ப்பையும், நம்பிக்கையையும் அறிவிக்கிறவராக ஏசாயா, 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்தார் (ஆறு தசாப்தங்கள்). புண்பட்ட இவ்வுலகிற்குத் தேவனின் நியாயத்தீர்ப்பையும், நம்பிக்கையையும் அறிவித்துத் தேவனுக்கு உண்மையாய் நாம் ஊழியம் செய்ய, இவ்வளவான பல்லாண்டுகளை அவர் நமக்குக் கொடுக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தேவனின் பரிசுத்தத்தை, ஏசாயா அனுபவித்தறிந்தார். அதன் விளைவாகத் தேவனுடைய தொடுதலும், அவரது சுத்திகரித்தலும் மிகத் தீவிரமாகத் தேவைப்படக்கூடிய ஒரு பாவியாகத் தன்னையே அவர் ஒப்புக்கொண்டார். அத்துடன், தேவனின் உத்தரவுக்கு உடனடியாகக் கீழ்ப்படியும், ஒரு தேவ ஊழியராகத் தன்னையே அவர் ஒப்புக்கொண்டார். தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்ய, நமது மோசமான நிலையிலும், சிறந்த நிலையிலும் நமக்குத் தேவனின் தொடுதலும், சுத்திகரித்தலும் தேவை.

ஆசிரியர்

மேலும் படிக்க