சிலுவையிலிருந்து இயேசு பேசிய கடைசி 7 வார்த்தைகளின் விளக்கம்

காலின் ஸ்மித்

இந்தக் கட்டுரை, தி ஆர்ச்சர்ட் திருச்சபையின் தலைமைப் போதகரான, போதகர் காலின் ஸ்மித் அவர்களுடைய தொடர் போதனையான, சிலுவையிலிருந்து 7 வார்த்தைகள் என்கிற போதனைத் தொகுப்பின் அடிப்படையிலானது. இந்தப் போதனையை நீங்கள், ஓப்பன் த பைபிள் ஆப்-ன் யூடியூப்-ல் அல்லது உங்கள் அபிமான “ஓப்பன் த பைபிள்” பாட்காஸ்ட் ஆப்-ல் தேடுவதன்மூலம் தொடரலாம்

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8), என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. தேவனுடைய அன்பைச் சிலுவை எவ்வாறு காண்பிக்கிறது அல்லது விளங்கப்பண்ணுகிறது?

இயேசு சிலுவையில் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கும் அநேக மக்கள், தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வதில்லை. ஒருவேளை, நீங்களும் அப்படிப்பட்ட நபராக இருக்கலாம். உங்களுக்குச் சிலுவையைப்பற்றித் தெரியும். அதன்மீது இயேசு பாடுபட்டு, மரித்தார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால் இது எப்படி அன்பாகும் என்று உங்களுக்குத் தெளிவாய்த் தெரியவில்லை.

இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த ஆறு மணி நேரங்களில், ஏழு முறைகள் பேசினார். அப்படி ஒவ்வொருமுறையும் பேசும்போதும், அவர் தமது அன்பைக்குறித்து ஏதோவொன்றை வெளிப்படுத்தினார். சிலுவையிலிருந்து பேசிய இயேசுவினுடைய கடைசி ஏழு வார்த்தைகளின் சாராம்ச விளக்கத்தை நீங்கள் வாசிக்கும்போது, இயேசு உங்களை நேசிக்கிறார் என்பதையும், அவரது அன்பு தவிர்க்கமுடியாதது என்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

சிலுவையிலிருந்து இயேசு பேசிய கடைசி 7 வார்த்தைகள்

1. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.”

பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34).

போர்ச்சேவகர்கள் தங்கள் சம்மட்டிகளையும், நீளமான உலோக ஆணிகளையும் எடுத்து, தேவனுடைய குமாரனானவரை ஒரு மரக்கட்டையில் சேர்த்து அறைந்தார்கள். அவர்கள் ஒரு மரக்கம்பத்தில் அவரைத் தூக்கி மாட்டி, அந்தக் கம்பத்தைத் தரையில் இருந்த ஒரு குழியில் போட்டார்கள். பின்பு இயேசு, முதன்முறையாகச் சிலுவையிலிருந்து: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34), என்று பேசினார்.

இயேசுவை ஆணிகளால் சிலுவையிலறைந்த மனிதர்கள், தாங்கள் எந்தத் தவறையும் செய்வதாக நினைக்கவில்லை. அவர்களுக்கு எந்தக் கெட்ட மனச்சாட்சியும் இல்லை. அவர்கள் தேவனிடத்தில் மன்னிப்புக்காக மன்றாடவேண்டும் என்று உணரவில்லை. அவர்கள் மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பயங்கரமான ஒரு பாவத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் இயேசு, அவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று சொன்னார்.

இது, நீங்கள் சரி மற்றும் தவறு என்பவற்றைப்பற்றிய உங்களது சொந்த உணர்வுகளிலிருந்து, பாவம் என்றால் என்ன என்பதை அறியமுடியாது என்கிற, மாபெரும் முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றை நமக்குக் கூறுகிறது. நீங்கள் உங்கள் சொந்த உள்ளுணர்வை நம்புவீர்களென்றால், நீங்கள் பாவம்செய்து, தொடர்ந்து பாவத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பீர்கள். மேலும், அதை நீங்கள் அறியவும்மாட்டீர்கள். பாவம் என்பது என்ன என்று நமக்குக் கூற, தேவன் நமக்குத் தேவை. அவர் வேதாகமத்தில் இதை நமக்குப் போதிக்கிறார்.

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் … உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44), என்று இயேசு சொன்னார். இங்கே அவர் அதைத்தான் செய்கிறார். அவரது இருதயத்தில் இருந்தவர்களெல்லாம், அவர்மீது கொடூரத்தை ஊற்றிக்கொண்டிருந்தவர்களே. ஒருவேளை இந்த ரோமைப் போர்ச்சேவகர்களுக்காக, அதற்குமுன்பு ஒருபோதும் யாருமே ஜெபிக்காமல்போயிருக்கலாம், ஆனால் இயேசு ஜெபித்தார். அவ்வாறே, உங்களுக்காக ஜெபிக்க ஒருவரும் இல்லாதபோதும், அவர் உங்களுக்காக ஜெபிக்கிறார்.

2. “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”

இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 23:43).

இயேசுவின் வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக வேறே இரண்டு குற்றவாளிகளும் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டிருந்தார்கள். சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்” (லூக்கா 23:39). தனது வாழ்வின் கடைசி மணி நேரங்களில் இருக்கும் ஒரு மனிதன் அவன். அவன் முற்றிலும் தொலைந்துபோய், முற்றிலும் உதவியற்றவனாய், ஆனாலும் தேவனிடத்தில் இன்னும் கோபங்கொண்டவனாய் இருக்கிறான்.

மற்றொரு குற்றவாளியும்கூடக் குற்றமுள்ளதொரு வாழ்க்கைக்குத்தான் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான். நித்தியத்திற்குச் சில மணி நேரங்கள் தொலைவில்தான் அவன் இருந்தான். விரைவிலேயே தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சந்திக்கவிருந்தான். ஆனால் அப்பொழுதுதான் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்தது. இந்த மனிதனின் ஆத்துமாவில் ஓர் அமைதி உண்டாயிற்று. அத்துடன் ஒருவேளை, அவனது வாழ்க்கையிலேயே முதன்முறையாக, தன் சொந்த நிலைமையைப்பற்றி அவன் மெய்யாகவே நினைத்துப்பார்க்கிறான் போலும். உலகம் நழுவிப்போய்க்கொண்டிருக்க, நித்தியம் பிரம்மாண்டமாக விரிந்துத் தொடுவானத்தில் தெரிந்தது.
இப்பொழுது அவன், இந்த நாள் முடிவடைவதற்கு முன்பாகத் தான் தேவனுக்குமுன்
நின்று, தனது வாழ்க்கையைக்குறித்ததொரு கணக்கை ஒப்புவிக்கப்போகிறான் என்பதைப் பிரமிக்கத்தக்கத் தெளிவுடன் காண்கிறான். இந்த எண்ணங்கள் அவன் மனதில் ஓடியபோது, மற்றொரு கள்ளன் இயேசுவை நிந்திக்கும் சத்தத்தை அவன் கேட்டு, “நீ தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” (லூக்கா 23:40), என்று கேட்கிறான்.
பின்பு அவன் இயேசுவினிடமாய்த் திரும்பி, “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்று சொன்னான் (லூக்கா 23:42). இயேசு அவனுக்கு மறுமொழியாக, “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்,” (23:43), என்று சொன்னார். இது அசாதாரணமானதொரு கதை. நரகத்துக்கென்று நியமிக்கப்பட்டு, நித்திய அழிவின் விளிம்பிலேயே நிற்கும் ஒரு மனிதனுக்கு, நித்திய ஜீவனின் சந்தோஷங்கள் மற்றும் பாக்கியங்களைப் பெறுவதற்கு முழுமையான அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. இந்த மனிதனுக்கு நம்பிக்கைக்கு இடமிருந்தது எனில், உங்களுக்கும், நீங்கள் சந்திக்கப்போகும் ஒவ்வொரு நபருக்குமேகூட நம்பிக்கைக்கு இடமுண்டு.

3. “ஸ்திரீயே, அதோ, உன் மகன்!”

அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” (யோவான் 19:26-27).

இயேசு மற்றும் மரியாளினிடையே இருந்த உறவு மாறியது. 33 ஆண்டுகள் அளவாக மாம்சத்தின்படி இயேசு, மரியாளின் மகனாகவே இருந்துவந்தார். ஆனால் அவர், தேவனுடைய குமாரனுமானவர். அவர், நமது மீட்பராக ஆகும்படியாகத் தமது தாயாரிடமிருந்து பெற்றதான மனித உடலைக் கொண்டிருந்தார். அதற்காகவே அவர் உலகிற்குள் வந்தார், அதற்காகவே அவர் சிலுவையின்மீது தொங்கிக்கொண்டிருக்கிறார்.

சிலுவையினடியில் தனது வேதனையிலும், துயரத்திலும் மரியாள் நின்றிருக்கும்போது அவள், “என் மகனே, என் மகனே, என் மகனே…,” என்று கதறிக்கொண்டு இருந்திருக்கவேண்டும். அப்பொழுது இயேசு, “நீங்கள் இனி என்னை உங்களது மகனாகக் கருதக்கூடாது. ஸ்திரீயே, அதோ, உன் மகன். இப்பொழுதுமுதல், உங்களுடைய வாழ்க்கையில் யோவான் அந்த இடத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்,” என்று சொல்கிறார்.

சரி, அவள் வேறு எவ்வாறு இயேசுவைக் கருதியிருக்கவேண்டும்? தனது ஆண்டவராகவும், இரட்சகராகவுமே கருதியிருக்கவேண்டும். தேவதூதர் மரியாளிடம், பிறக்கப்போகும் குழந்தையைப்பற்றிக் கூறியபோது அவள், “என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக்கா 1:47), என்று சொன்னாள். அவள் எப்பொழுதுமே தேவனைத் தனது இரட்சகராகவே நோக்கிப் பார்த்தாள். எனவே, தேவன் அவளை எவ்வாறு இரட்சிப்பார்?

பதில்: மரியாளிடமிருந்து பெற்றதான ஜீவனை, இயேசு சிலுவைக்குச் சென்று ஒப்புக்கொடுத்தார். அவரது சரீரம் நொறுக்கப்பட்டது. அவரது இரத்தம் சிந்தப்பட்டது. மரியாளின் குமாரன் மரித்தார். அந்த தமது மரணத்தில் அவர், அவளது இரட்சகர் ஆனார். மரியாள் ஈடுசெய்யவேமுடியாததொரு குமாரனை இழந்துகொண்டே, இணையற்ற ஓர் இரட்சகரைப் பெற்றுக்கொண்டிருந்தாள்.

4. “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?”

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46, ஒப். மாற்கு 15:34).

சங்கீதம் 22:1-ன் நிறைவேறுதல்

இயேசு காலையில் ஒன்பது மணியளவில் சிலுவையிலறையப்பட்டார். ஒன்பது மணிக்கும், பன்னிரண்டு மணிக்குமிடையே அவர் மூன்றுமுறைகள் மட்டுமே பேசினார். தமது பிதாவிடம்: “இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே,” என்றும், கள்ளனிடம்: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்,” என்றும், தமது தாயாரிடமும், தமது சீஷரிடமும்: “ஸ்திரீயே, அதோ, உன் மகன்… அதோ, உன் தாய்,” என்றும் பேசினார்.

முழு நீளமான மூன்று மணி நேரங்களில், மூன்றே வாக்கியங்கள். மீதியான அந்த நேரங்கள் முழுவதும், அவர் அங்கே மௌனமாய்ப் பாடநுபவித்துத் தொங்கினார். மூன்று மணி நேரங்கள், அவற்றின் ஒவ்வொரு நிமிடமும் யுகயுகமானதொரு காலம்போல் தோன்றியிருக்கவேண்டும். பின்பு நண்பகல் பன்னிரண்டு மணியான வேளையில், அந்தகாரம் பூமியை மூடிற்று: “ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று” (மத்தேயு 27:45).

மூன்று மணி நேரங்கள் அளவும் இயேசு, மனிதர்களிடமிருந்து வேதனைகளையும், நிந்தனைகளையும் அநுபவித்துவிட்டார். ஆனால் இப்பொழுதோ, அதைவிடவும் மோசமானதொரு நிலைமைக்குள் மூழ்கடிக்கப்பட்டார். சிலுவையில் இயேசு, நரகத்தின் அனைத்துப் பரிமாணங்களுக்குள்ளும் பிரவேசித்தார். நரகமானது, காரிருளில், பிசாசின் வல்லமைகளால் சூழப்பட்ட, தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழான, தேவனுடைய அன்பின் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, முழுச் சுய நினைவுடனான வேதனையாகும். சிலுவையில் இயேசு, நரகத்தின் சகல வேதனைகளையும் சகித்தார். அது எப்படிப்பட்டதாய் இருக்குமென்று நீங்கள் ஒருபோதும் அறியாதிருக்கும்பொருட்டு, அவர் இதைச் செய்தார்.

5. “தாகமாயிருக்கிறேன்.”

அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்” (யோவான் 19:28).

சங்கீதம்: 22:15-ன் நிறைவேறுதல்.

இயேசு, ஆறு மணி நேரங்கள் அளவாகச் சிலுவையின்மீது தொங்கினார். அவற்றுள், கடந்து சென்ற ஒவ்வொரு மணி நேரமும், அவரது வேதனை அதிகரித்தது. அவரது உடலின் எடையால் அவரது கரங்கள் மற்றும் பாதங்களில் கடாவப்பட்ட ஆணிகளைச் சுற்றியிருந்த காயங்கள் கிழியுண்டு அகலமாகும் அதேவேளையில், அவருடலில் காய்ச்சல் அதிகரித்தது. நீரிழப்பும் சேர்ந்துகொண்டது. அவரது முழுச் சரீரமும் அக்கினி பற்றி எரிவதுபோல் அவர் உணர்ந்திருக்கவேண்டும்.

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” (யோவான் 7:37), என்று சொன்ன அதே இயேசுதான், இப்பொழுது, “(நான்) தாகமாயிருக்கிறேன்,” என்று சொல்கிறார். சிலுவையின்மீது தமது சொந்த வேதனை பற்றி இயேசு குறிப்பிடுவது, இந்த ஒரே ஒரு முறைதான். அவரது மற்ற வார்த்தைகள் எல்லாம், மற்றவர்களை மன்னிக்கவும், பரதீசைத் திறக்கவும், தன் தாயாருக்கு வேண்டியதைச் செய்யவும், நரகத்தின் வேதனையை வெளிப்படுத்தவும், குற்ற நிவாரணத்தை அறிவிக்கவும், தமது மரணத்தில் தம் ஆவியைப் பிதாவினிடத்தில் ஒப்புவிக்கவுமே பேசப்பட்டன. ஆனால் இந்த வார்த்தைகளில், அவர் தமது உடல்ரீதியான வேதனையிலிருந்து பேசினார்.

நாமனைவருமே பல்வேறு விதங்களில் பாடநுபவிக்கிறோம். ஆனால் உங்கள் வாழ்வின் ஏதொவொரு கட்டத்தில், உங்கள் சகிப்புத்தன்மையினுடைய எல்லைகளுக்கப்பால் உங்களைத் தள்ளக்கூடிய அளவுக்கு நீங்கள் துன்புறுவீர்கள். இயேசு அங்கே இருந்திருக்கிறார். அவர் பாடநுபவித்தார் அதனாலேயே பாடநுபவிக்கிறவர்களுக்கு அவரால் உதவமுடிகிறது. தமது பாடுகளினிமித்தமாக இயேசு தாகமுற்றார். ஆகவே, அவரால் பாடநுபவிக்கிறவர்களுக்கு உதவமுடிகிறது.

6. “முடிந்தது!”

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:30).

இயேசு, “முடிந்தது!” என்று சொன்னார். எது முடிந்தது?

1. அவரது பாடுகள்

2. அவரது கீழ்ப்படிதல்

3. தமது சத்துருவுடனான அவரது தீர்க்கமான யுத்தம் மற்றும்

4. அவரது குற்றநிவாரணத்தின் பரிபூரணமான கிரியை, ஆகியவை.

இது, இயேசுவினுடைய பாடுகளின் முடிவாகும். பாடுகளை அறிந்திருக்கக்கூடிய மற்ற எவரைக்காட்டிலும், இயேசு அதிகமாய் அறிந்திருக்கிறார். ஆனால், அவர் இப்பொழுது பாடநுபவிக்கவில்லை. அவர் அதை முடித்துவிட்டார். அவர் நிறைவேற்றிவிட்டார். மேலும், இப்பொழுது அவர் கல்லறையிலும் இல்லை. அவர் பரலோகத்தில், பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்.

இது முக்கியமானது. துன்பப்படுகிற ஓர் உலகத்துக்குத் துன்பங்களைப்பற்றி அறிந்திருக்கிற ஓர் இரட்சகர் தேவைப்படுகிறார். ஆனால் பாடுகளால் மூழ்கடிக்கப்பட்ட ஓர் இரட்சகரால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. பாடுகளின்மேல் வெற்றிசிறந்த ஓர் இரட்சகர்தான் நமக்குத் தேவை. அதுதான் நமக்கு இயேசுவில் இருக்கிறது: அவர், விவரிக்கமுடியாத பாடுகளுக்குள் தள்ளப்பட்டார். ஆனால், அவர் அதனால் மேற்கொள்ளப்படவில்லை. அவர் அதை உருவக் கடந்துசென்று, அதன்மீது வெற்றிசிறந்தார்.

7. “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்!”

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்” (லூக்கா 23:46).

சங்கீதம் 31:5-ன் நிறைவேறுதல்

இயேசு மரணத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. அது அவரை மேற்கொள்ளவில்லை. அவர், “ஒருவனும் அதை (என் ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான் … அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு” (யோவான் 10:18), என்று சொன்னார். இயேசுவின் ஜீவன் எடுக்கப்படவில்லை. அது கொடுக்கப்பட்டது. அவர்: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்!” என்று, தம்மைத்தாமே மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்ன குரலின் முக்கியத்துவம் இதுதான். நீங்கள் எப்பொழுதாவது, ஒருவர் மரிக்கும் தருணத்தில் அவருடன் இருந்திருக்கிறீர்களா? மரிக்கும் தறுவாயில், யாருமே மகா சத்தமாய்ப் பேசுவதில்லை. ஆனால் இயேசு பேசினார். அவர் மரணத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்தார். மாற்கு, “அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்” (மாற்கு 15:39), என்று எழுதுகிறார். இதன் மகிமையை நீங்கள் காண்கிறீர்களா? அதைப்போல ஒருவருமே மரித்ததில்லை.

Let the Word of God Dwell Richly Among You
Biblical Faith