இயேசு யார் என்பதையும், அவரால் மக்களுக்காக என்ன செய்யமுடியும் என்பதையும் அவர்கள் காண உதவும்படியாகப் பலமுறை சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் கதையை நான் பயன்படுத்தியுள்ளேன். அவனது வாழ்க்கையின் இறுதி நாள் தனித்துவமான சிறப்புவாய்ந்தது. அது, சிறைச்சாலை அறையின் துயரத்துக்குள் தொடங்கியது. ஆனால் பரலோகத்தின் சந்தோஷத்தில் முடிவடைந்தது. அந்தக் கள்ளன், சாத்தானுடன் அன்று காலை உணவையும், இரட்சகருடன் இரவு உணவையும் உட்கொண்டான். என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். அது மிகவும் பிரமிப்பூட்டுகிற ஒரு மனமாற்றம். இயேசு கிறிஸ்து, ஒரு நபருக்காக ஒரே நாளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை அது நமக்குக் காண்பிக்கிறது!
அந்தக் கள்ளனின் கதை அபூர்வமானது, ஆனால் ஒவ்வொரு நபரும் அறிந்துகொள்ளத் தேவையான ஒன்றை அது போதிக்கிறது.
பரலோகத்திற்குள் பிரவேசிப்பது உங்களைச் சார்ந்ததல்ல
நீங்கள் பரலோகத்திற்குள் நுழைவது, கிறிஸ்தவ வாழ்க்கையில் உங்கள் சாதனைத் திறனைச் சார்ந்ததல்ல. அந்தக் கள்ளனுக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றிச் சிந்தியுங்கள்: அவன், கிறிஸ்துவை விசுவாசித்து, அதே நாளில் பரலோகத்துக்குச் சென்றான். அதாவது, அவன் கிறிஸ்தவ வாழ்வை முற்றிலுமாகத் தவறவிட்டுவிட்டான். ஆகவே, சோதனைகளுடனான போராட்டங்களோ, ஜெபிப்பதில் உண்டான சிரமங்களோ அவனுக்கில்லை. ஞானஸ்நானம் பெறவும், கர்த்தருடைய பந்தியை அனுசரிக்கவும், ஒரு சபையில் சேர்ந்துகொள்ளவும், அல்லது ஓர் ஊழியத்தில் பணியாற்றவும் அவனுக்கு ஒருபோதும் வாய்ப்பே இருந்ததில்லை.
நீங்கள் பரலோகத்திற்குள் நுழைவது, கிறிஸ்தவ வாழ்க்கையில் உங்கள் சாதனைத் திறனைச் சார்ந்ததல்ல.
அநேகர், நல்ல மற்றும் தெய்வீகமானதொரு வாழ்க்கையை வாழ்வதைச் சார்ந்தே தாங்கள் பரலோகத்திற்குள் பிரவேசிக்கமுடியும் என்று நம்புகின்றனர். அவர்கள், இயேசு தங்களை மன்னிக்கிறார் என்று விசுவாசிக்கலாம், ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் தங்களது முன்னேற்றம்தான் பரலோகத்தின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் என்பதே, உள்ளத்தின் ஆழத்தில் அவர்களது உணர்வாயிருக்கிறது.
அது எப்படி உண்மையாக இருக்கக்கூடும்?
அந்தக் கள்ளன் பரலோகத்திற்குள் பிரவேசித்தது எப்படி
அந்தக் கள்ளன், ஒருபோதும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழாமலேயேகூடப் பரலோகம் சென்றான்! அந்த வாய்ப்பை அவன் பெறவில்லை. தன் கரங்கள் சிலுவையிலறையுண்ட நிலையில், அவன் நற்கிரியைகளைச் செய்கிற நிலையிலும் இல்லை. சிலுவை மரத்தில், தன் பாதங்கள் ஆணி கடாவப்பட்ட நிலையில், அவனால் நீதியின் பாதைகளில் நடக்கமுடியவில்லை. மேலும், மரணத்துக்கும், அவனுக்கும் ஒருசில மணி நேரங்கள் தொலைவு மட்டுமே இருந்த நிலையில், மேலானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான புதிய பக்கத்தைத் திறக்கவும் அவனுக்குக் கால அவகாசம் இல்லை.
அன்று அந்தக் கள்ளன் செய்த காரியம், எளிமைபோல் தோன்றும் கடினமானதொன்று ஆகும். அவன் இயேசுவினிடமாய்த் திரும்பி, “நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்று சொன்னான். அத்துடன், இயேசு அதற்கொரு பதிலைச் சொல்வதற்காகவும் அவன் காத்திருந்தான். வீணாய்க் கழிந்த அவனது அனைத்து வாழ்நாட்களின் பின்பாக இயேசு அவனிடம், “என் ராஜ்யத்தைக்குறித்து நினைத்துப்பார்ப்பதற்கு நீ சற்றுத் தாமதித்துவிட்டாய் என உனக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்டிருந்தாலும் அது ஆச்சரியப்படத்தக்கதாய் இருந்திருக்காது.
சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இயேசுவின்மீது தனது வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருந்த அவனுக்கு, அதன்பின்பு இயேசு அவனிடம், “பரலோக ராஜ்யம் உன்னைப்போன்ற நபர்களுக்கானது அல்ல,” என்று சொல்லியிருந்தால், அதைப்பற்றிக் குறை சொல்லவும் முடிந்திருக்காது. ஆனால் இயேசுவின் வழி அதுவல்ல. அவர் அந்தக் கள்ளனை, ஒரு சோதனை ஓட்டத்தில் நிறுத்தவில்லை, அல்லது ஒரு நீண்ட ஆவிக்குரிய பயணத்திலும் அனுப்பவில்லை. மேலும் அவர், “நாம் அதைப்பற்றிப் பிறகு பார்ப்போமே,” என்றும் அவனிடம் சொல்லவில்லை.
அதற்கு மாறாக, இயேசு அந்தக் கள்ளனின் ஜெபத்தைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். இயேசு, எவ்விதத் தயக்கமும், நிபந்தனையும் இன்றித் தாராளமாகவும், மகிழ்ச்சியுடனும், அவனை ஏற்றுக்கொண்டார். அவர், அதற்கு “ஆமென்,” என்று சொல்லி, அதன்பின்பு ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்,” என்று சொன்னார்.
நிச்சயமாக ஒரு சன்மார்க்கமான வாழ்வை வாழ்ந்திராத அந்தக் கள்ளனை, இயேசுவினால் இரட்சிக்கமுடியுமென்றால், தேவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் நபருக்கும்கூட, இயேசுவில் நம்பிக்கைக்கு இடமுண்டு. இயேசு கிறிஸ்துவில் ஒவ்வொரு நபருக்கும் நம்பிக்கைக்கு இடமுண்டு. நாம் இதைத்தான் அந்தக் கள்ளனிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.