கிருபையின் சுவிசேஷத்தைப் போதிக்கும், வல்லமைமிக்க சிறுகதை உங்களுக்கு வேண்டுமென்றால், இயேசுவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்ட கள்ளனின் கதையை மிஞ்சக்கூடிய ஒரு கதையை நீங்கள் காணமுடியாது (லூக்கா 23:39-43; மத்தேயு 27:38-44).
உண்மையில், இரண்டு கள்ளர்கள் இயேசுவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டனர். ஒருவன் அவரை விசுவாசித்து, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான். மற்றொருவனோ, அப்படிச் செய்யவில்லை. மனந்திரும்பிய, (சிலவேளைகளில், மனம் வருந்திய கள்ளன் என அழைக்கப்படும்), அந்த முதலாம் கள்ளனின் கதையினூடே, நான்கு பகுதிகளாக நாம் இந்தக் கட்டுரையில் பயணிப்போம்.
1) இரண்டு கள்ளர்களுமே இயேசுவை நிந்தித்தனர்
சிலுவையிலறையப்படுதலின் வடிவமைப்பே, ஒரு சரீரத்திலிருந்து ஜீவனையும், ஆற்றலையும் வடிந்தோடச் செய்வதுதான். மத்தேயு, இரண்டு கள்ளர்களுமே தங்களுக்கிருந்த சொற்பச் சுவாசத்தையும், இயேசுவை நிந்திப்பதற்கே பயன்படுத்தினார்கள் என்று, தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார் (மத்தேயு 27:44). அப்படிச் செய்யும்போது, அங்கே நின்று அவரது மரணத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, மதத்தலைவர்கள் மற்றும் பிற பார்வையாளர்களின் அதேவிதமான நடக்கையையே அவ்விருவரும் பின்பற்றினார்கள் (காண்க மத்தேயு 27:39-43).
நிந்தனையைக் கேட்பதோ, இரண்டு கள்ளர்களின் மத்தியில் சிலுவையில் அறையப்படுவதோ, இயேசுவை ஒன்றும் ஆச்சரியப்படுத்திவிடவில்லை (காண்க ஏசாயா 53:12). “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” (சங்கீதம் 22:1), என்று ஜெபித்தபோது இயேசு, 22-ஆம் சங்கீதத்தை மேற்கோள் காட்டி, அதை நிறைவேற்றினார். மேலும் அதே சங்கீதம், “என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்,” என்றும் சொல்கிறது (சங்கீதம் 22:7-8).
2) மனந்திரும்பிய கள்ளன் தன் பாவ நிலையை அறிந்துகொண்டான்
ஒரு கள்ளன் இயேசுவை நோக்கி, “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்து,” தூஷணங்களைத் தூக்கியெறிந்தபோது, மனந்திரும்பிய கள்ளனோ அவனை நோக்கி: “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டான்” (லூக்கா 23:39-41).
என்னவொரு பிரமிப்பூட்டும் மனமாற்றம்! அந்தக் கள்ளன் இயேசுவை நிந்திப்பதை நிறுத்திவிட்டு, இப்பொழுது அவரை ஆதரித்தான். அவனை மாற்றியது எது? மனந்திரும்பிய அந்தக் கள்ளன், எப்பொழுது தேவனுக்குப் பயப்பட ஆரம்பித்தான் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் வேதாகமத்தைப் பார்க்கும்போது, சில தடயங்களை நாம் காண்கிறோம். அதனடிப்படையில் அந்தக் கள்ளன் இயேசுவுடனேகூட எவ்வித அனுபவத்தைப் பெற்றான் என்பதைச் சிந்திக்கிறோம்.
கள்ளர்கள் மரிப்பதற்கு முன்பே இயேசு மரித்தார் என்று யோவான் விவரிக்கிறார் (யோவான் 19:32-34). இயேசு சிலுவையில் தொங்கியபோது, அவர்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே,” (லூக்கா 23:34), என்ற அவரது கதறுதல்கள் உட்பட நிகழ்ந்தவை அனைத்தையும், மனந்திரும்பிய அந்தக் கள்ளனால் கவனிக்க முடிந்தது என்பதை இது குறிக்கிறது. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, அந்தக் கள்ளன் என்ன நினைத்தான் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் “அவரது கரங்கள் மற்றும் பாதங்களில் ஆணிகளைக் கடாவிய மனிதனை அவர் மன்னிக்கத் தயாராக இருந்தாரெனில், ஒருவேளை அவர் என்னையும் மன்னிக்கத் தயாராகவே இருப்பார்,” [1], என்பதுபோல் ஏதொவொரு எண்ணம், அவனது மனதிற்குள் ஓடியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வது நமக்கொன்றும் கடினமானதல்ல.
3) மனந்திரும்பிய கள்ளன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்வைத்தான்
உள்ளானதொரு மனமாற்றத்திற்குப் பிறகு அந்தக் கள்ளன், “இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்று சொன்னான் (லூக்கா 23:42). இயேசு, ஒரு மெய்யான ராஜ்யத்தையுடைய ஒரு ராஜா என்று அந்தக் கள்ளன் விசுவாசித்தான். பொதுவாக, ராஜாக்கள் சிலுவைகளில் மரிப்பதில்லை. மேலும், மரித்தபின்பு நிச்சயமாக அவர்களுக்கு ராஜ்யங்களும் கிடையாது. ஆகவே இந்த ராஜா, உலகப்பிரகாரமான ஒரு ராஜாவைவிடவும் மேலானவர் என்றும், அவர் தமது பரலோக ராஜ்யத்திற்குத் தன்னைக் கொண்டுசெல்லக்கூடுமான, இரட்சகரான ஒரு ராஜா என்றும் அந்தக் கள்ளன் விசுவாசித்தான்.
4) மனந்திரும்பிய கள்ளன் இயேசுவால் இரட்சிக்கப்பட்டான்
இயேசு மனந்திரும்பிய கள்ளனுக்கு, “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்,” (லூக்கா 23:43) என்று, மிகவும் நம்பிக்கையூட்டுவதற்குப் போதுமான வார்த்தைகளில் பதிலளித்தார். அன்று காலையில், நரகத்துக்குப் போகிற பாதையை நோக்கிக் கண் விழித்த ஒரு கள்ளனுக்கு, “இயேசுவே, அடியேனை நினைத்தருளும்,” என்கிற ஒரு எளிய விண்ணப்பத்தின்மூலம், அவனது நித்தியத்தைக் குறித்த முடிவே மாற்றிக்கொடுக்கப்பட்டுவிட்டது!
இந்தக் கதை நமக்கு உணர்த்துவது என்ன?
முதலாவதாக இந்தக் கதை, இரட்சிப்பு தேவனிடத்திலிருந்து வரும் ஓர் ஈவு என்பதை நமக்கு உணர்த்துகிறது. மனந்திரும்பிய கள்ளனுக்கு, நற்கிரியைகள் செய்வதற்கு நேரம் இல்லை. அவன் யாரிடமெல்லாம் களவாடினானோ, அவர்களுக்கெல்லாம் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. ஏழைகளுக்கு உதவமுடியவில்லை. அல்லது ஞானஸ்நானம் பெறவும் முடியவில்லை. சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்குச் சிறப்பான விசுவாசமும் அவனுக்கில்லை. வேதாகம ஞானம்குறித்துப் பரீட்சை வைத்திருந்தால் அதில் அவன் நிச்சயமாய்த் தோற்றுப்போயிருப்பான். அவனால் செய்யமுடிந்ததெல்லாம், இரட்சகரை விசுவாசத்துடன் நோக்கிப் பார்த்து, அவரது கிருபைக்காகக் கெஞ்சிக் கேட்பதுதான். அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் அது மட்டும்தான்.
மனந்திரும்பிய கள்ளனின் அனுபவம், இரட்சிப்பென்பது விசுவாசத்தின்மூலம் நாம் பெற்றுக்கொள்கிற, கிரியைகளினால் சம்பாதிக்கமுடியாத, தேவனுடைய கிருபையின் ஓர் ஈவு என்கிற வேதாகமச் சத்தியத்தின் சிறப்பான ஒரு வர்ணனையாகும் (காண்க எபேசியர் 2:8-9; தீத்து 3:5).
இரண்டாவதாக, மனந்திரும்பிய கள்ளனின் கதையானது, எந்தப் பாவமுமே மன்னிக்கப்படமுடியாத அளவுக்கு மோசமானதல்ல என்பதை நமக்குக் காண்பிக்கிறது. மனந்திரும்பிய அந்தக் கள்ளன், தனது தவறுகளுக்காக ஏற்கெனவே மரண தண்டனைத் தீர்ப்பைப் பெற்றுவிட்டான். அவனது பாவத்தைக்குறித்து நாமறிந்திருப்பதெல்லாம், வேதாகமம் அவனைக் கள்ளன் என்றும், குற்றவாளி என்றும் குறிப்பிடுகிறது என்பதைத்தான். உலகத்தைப் பொறுத்தவரை இந்தப் பாவம், மரண தண்டனைக்கு உரியதே. இருப்பினும் இயேசுவைப் பொறுத்தவரை, அது மன்னிக்கப்படக்கூடியதுதான். இயேசுவின் மரணம், நம் பாவங்கள் அனைத்திற்குமான விலைக்கிரயத்தைச் செலுத்தப் போதுமானது (ரோமர் 6:23). ஒரு பாவி செய்யவேண்டியதெல்லாம், தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, அறிக்கையிட்டு, இயேசுவிடம் மன்னிப்பை மன்றாடுவதுதான்.
கடைசியாக இந்தக் கதை, உங்களுக்கும் நம்பிக்கைக்கு இடமுண்டு என்று பொருள்படுகிறது. மனந்திரும்பிய கள்ளன் தன் கடைசி நிமிடங்களில், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்வைத்தான். இது, மரிக்கும் முன் தங்களுடைய இறுதி மூச்சுக்களின் தருணத்திலும்கூடத் தேவனிடத்தில் தங்கள் விசுவாசத்தை வைக்கிற அனைவருக்கும் கிருபையளித்து, அவர்களனைவரது பாவங்களையும் அவர் மன்னித்தருளுவார் என்பதற்கு ஆதாரமாயிருக்கிறது.
இது மகிமையானதொரு சத்தியம்! ஆனால் நீங்கள், இந்தச் சத்தியத்தை அறிந்தவராய், “நான் இப்பொழுது என் இஷ்டம்போல் வாழ்ந்துவிட்டு, என் முதிர்வயதான காலத்தில் இயேசுவின்மீது விசுவாசம்வைத்துக்கொள்கிறேன்,” அல்லது “என் மரணப்படுக்கையில் இயேசுவின்மீது நம்பிக்கைவைப்பேன்,” என்று நினைக்கக்கூடும். இவ்விதமாக நினைப்பதன் அலட்சியத் தன்மையைப் பின்வரும் இரண்டு கேள்விகள் வெளியரங்கமாக்குகின்றன:
1) பின்னாட்களில் நீங்கள் அந்த வாய்ப்பைப் பெறுவீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் இருதயம் ஒரு நொடியில் துடிப்பதை நிறுத்திவிட, நீங்கள் நரகத்துக்குச் சென்றுவிடக்கூடும்.
2) நீங்கள் இப்பொழுது இயேசுவை விசுவாசிக்க விரும்பாவிடில், வருங்காலத்தில் அவரை விசுவாசிக்க வாஞ்சிப்பீர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
உண்மை என்னவென்றால், நாம் அந்தக் கள்ளனைப்போலத்தான் இருக்கிறோம். நாம் பரிசுத்தரான ஒரு தேவனுக்கெதிராய்ப் பாவம் செய்திருக்கிறோம். அதனால், அவரது கோபாக்கினைக்குப் பாத்திரர்களாய் இருக்கிறோம். ஒரு நாள், ஒவ்வொரு மனிதரும் நியாயத்தீர்ப்பின்முன் நிற்கவேண்டும் (எபிரெயர் 9:27). இருப்பினும், அந்தக் கள்ளனின் கதையில் நாம் பார்த்ததைப்போல, தேவனுக்கு முன்பாக விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும் தன்னைத் தாழ்த்துகிற ஒவ்வொருவருக்கும், நம்பிக்கைக்கு இடமுண்டு. இப்படி நீங்கள் செய்தால், இயேசு சந்தோஷத்துடன் உங்களிடம்: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்,” என்று சொல்வார்.
[1] ‘பரலோகம், நான் எப்படி இங்கு வந்தேன்: சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் கதை’ என்ற புத்தகத்திலிருந்து, காலின் ஸ்மித் அவர்கள் இந்த வார்த்தைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்.