பரலோகத்தைப்பற்றி நான் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்

காலின் ஸ்மித்

பரலோகத்தைப்பற்றி நான் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்?

பரலோகத்தைப்பற்றி நான் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்? அதைவிட அதிக முக்கியமான ஒரு கேள்வியை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. அது உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்குமே பொருந்தும். நாம் அனைவருமே எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமானவர்களாக இருக்கிறோமோ, அப்படியே ஒரு விஷயம் நமக்குப் பொதுவானதாய் இருக்கிறது – நிச்சயமாக நாமனைவரும் ஒரு நாள் மரிப்போம்.

நீங்கள் மரிக்கும் நாள் இந்த வாரத்தில், இந்த மாதத்தில், இந்த வருடத்தில், அல்லது அது மிகத் தொலைவான ஒரு காலத்தில் வரலாம். ஆனால் எதுவுமே நிச்சயமில்லை… ஒரு நாள் அது வரும். நீங்கள் விழித்தெழும்போது, அதை நீங்கள் உணர்கிறீர்களோ, இல்லையோ, இப்பூமியில் அது உங்களது கடைசி நாளாக இருக்கும். அதன்பின் உங்களுக்கு என்ன நிகழும்?

சிலுவையில் தொங்கிய கள்ளனின் கதையானது பரலோகத்தைப்பற்றி நீங்கள் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும் என்று கூறுகிறது. இந்த நிகழ்வை, லூக்கா 23-ல் காண்கிறோம்.

“குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்” (லூக்கா 23:32-33).

அதன்பின்பு, இவ்விரு கள்ளர்களில் ஒருவன், “இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்,” என்று நமக்குக் கூறப்படுகிறது. “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (23:42-43).

மக்கள் நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதன்மூலம் பரலோகத்திற்குள் பிரவேசிக்கிறார்கள் என்று நாம் நினைப்பது இயல்பானதுதான், ஆனால் இந்தக் கள்ளன் அதைச் செய்யவில்லை. அவன் ஒரு குற்றவாளியாயிருந்தான். மாற்கு எழுதிய சுவிசேஷத்தில் அவன், “ஒரு கள்ளன்,” என்றே விவரிக்கப்படுகிறான். மேலும், அவனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பிடப்படும் அளவுக்கு, அவனது குற்றங்களின் அளவு அவ்வளவு கொடியதாயிருந்தது.

அவனுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்படுவற்கான சூழ்நிலைகள் என்னவாக இருப்பினும், இந்த மனிதன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவில்லை என்பது தெரிகிறது, அவனும் அதை அறிந்திருந்தான். அந்தக் கள்ளன் தனது தண்டனையைக்குறித்து வாக்குவாதம் செய்யவில்லை. உண்மையில் அவன், “நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை
அடைகிறோம்” (23:41), என்று சொன்னான்.

நல்லதொரு வாழ்க்கையை வாழாத ஒரு மனிதனை இங்கே காண்கிறோம், அவனுடைய காலம் கடந்துவிட்டது! ஒரு புதிய வாழ்க்கை மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய நிலையில் அவன் இல்லை. அவனது கைகளும், கால்களும் ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நிலையில், அவனால் நற்கிரியைகளைச் செய்யமுடியாது. இருந்தபோதிலும் இயேசு இந்த மனிதனிடம்: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்!” என்று சொல்கிறார்.

இந்த நிகழ்வு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது! அது, “பரலோகத்திற்குள் பிரவேசிப்பது, நான் எனது வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்பதைப் பொறுத்தது. அங்குப் பிரவேசிக்கும்பொருட்டு, தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் போதுமான அளவுக்கு நல்லதொரு வாழ்க்கையை நான் வாழவேண்டியிருக்கிறது,” என்று பரவலாகப் பரப்பப்பட்டுள்ள மனநிலைக்கு முற்றிலும் முரண்படுகிறது. அந்தக் கள்ளன் அதைச் செய்யவில்லை என்பது தெளிவாய்த் தெரிகிறது. ஆகவே, அவன் எவ்வாறு நுழைந்தான்? அதுதான் இங்குக் கேள்வி.

இதில் நற்செய்தி என்னவெனில், இந்த மனிதனால் பரலோகத்திற்குள் பிரவேசிக்கமுடியும் என்றால், உங்களாலும் பிரவேசிக்கமுடியும் என்பதுதான். அது எப்படி என்பதை அந்தக் கள்ளனின் கதை நமக்குக் காண்பிக்கிறது. அதை மூன்று வார்த்தைகளில் சுருக்கிக் கூறலாம் – திரும்புங்கள், கேளுங்கள் மற்றும் விசுவாசியுங்கள்.

1. திரும்புங்கள்

அந்தக் கள்ளன் குறைந்தது ஆறு மணி நேரங்களாவது சிலுவையின்மீது தொங்கினான். அந்த நேரத்தில்தான், இயேசுவைக்குறிதத அவனது மனநிலையில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் நிகழ்ந்தது.

இயேசுவின் இருபுறங்களிலும், இரண்டு குற்றவாளிகள் சிலுவையில் அறையுண்டிருந்தனர், என்று மத்தேயு நமக்குக் கூறுகிறார். “அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் (பன்மை) அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்” (மத்தேயு 27:44).

ஆகவே, இங்கே இரண்டு குற்றவாளிகள் உள்ளனர், அவர்கள் இருவருமே முதலில் இயேசுவை நோக்கி நிந்தனைகளை வீசியெறிந்துகொண்டிருந்தனர். ஆனால் அதன்பின்பு, ஒருவன் அப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருக்கையில், மற்றொருவனிடம் ஒரு மாற்றம் தோன்றியது. வேதாகமம், இந்த மாற்றத்தை மனந்திரும்புதல் என்று கூறுகிறது.

மனந்திரும்புதல் என்பது, உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவுடன், உங்கள் பாவத்தைப்பற்றி நீங்கள் அறிந்த அளவிலிருந்து, தேவனைப்பற்றி நீங்கள் அறிந்த அளவில், அவரிடம் திரும்புவதைக் குறிக்கிறது.¹

ஆகவே, மனந்திரும்புதல் காலப்போக்கில் ஆழமடைகிறது. தேவன் யாரென்பதைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் அறிகிறீர்களோ, நீங்கள் யாரென்பதைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் கண்டுபிடிக்கிறீர்களோ, மேலும் பாவம் என்னவென்பதைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் கிரகித்து, உணர்கிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் மனந்திரும்புதல் அதிக ஆழமானதாக மாறுகிறது. ஆனால் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு. அவ்வாறாக, மனந்திரும்புதல் எங்கே தொடங்குகிறது என்பதைக் கள்ளனின் கதை நமக்குக் காண்பிக்கிறது.

நீங்கள் தேவனுக்குப் பயப்படத் தொடங்குகிறீர்கள்

அந்தக் கள்ளன், இயேசுவை நோக்கி முறைகேடான வார்த்தைகளை வீசியெறிந்துகொண்டிருந்தான். ஆனால் அதன்பின்பு, இனி வரப்போவது என்ன என்பதைப்பற்றி அவன் சிந்தித்தபோது, அவனது ஆத்துமாவில் ஓர் அமைதி வந்தது. நான் ஏன் தேவனை எதிர்த்துப் போராடுகிறேன்? நான் வெகு விரைவில் அவருக்கு முன்பாக நின்று, என் வாழ்க்கைக்கான கணக்கை ஒப்புவிக்கப்போகும் நிலையில், நான் இப்படிச் செய்வதற்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?

இயேசுவின்மீது நிந்தனையான வார்த்தைகளை வாரியிறைத்துக்கொண்டிருந்த இன்னொரு கள்ளனின் பக்கமாய் அவன் திரும்பி, “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?” என்றான் (லூக்கா 23:40).

சிலுவையின்மீதிருந்த கள்ளன் தேவனைக்குறித்துச் சிறிதளவு அறிந்திருந்தான், ஆனால் தன் வாழ்வில் அவன் தேவனுக்குரிய கனத்தைக் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுத்திருந்தால், அவன் கள்ளனாகியிருக்கமாட்டான். ஆனால் அதற்குப் பதிலாக அவன், தேவனுக்குரிய கோட்பாடுகளைத் தன் வாழ்விலிருந்து புறம்பே தள்ளிவிட்டான். அவன் தன் சொந்த வழியிலேயே சென்றான். எவ்வளவு தூரம் அவன் தேவனைவிட்டு அதிகமாக விலகிச் சென்றானோ, அவ்வளவிற்குக் குறைவான விகிதத்திலேயே அவனது மனச்சாட்சி அவனைத் தொந்தரவு செய்தது.

ஆனால் இப்பொழுதோ, அவன் நித்தியத்தின் நுனி விளிம்பில் இருந்தான். அத்துடன், தேவனுக்கு முன்பாக நிற்பதைக்குறித்த பயம் அவனைப் பிடித்தது. தேவனுக்குப் பயப்படுதலே அவரிடத்தில் திரும்புவதன் தொடக்கம்; அது இயேசு கிறிஸ்துவை உங்கள் ராஜாவாக அடையாளம் கண்டுகொள்ள வழிவகுக்கிறது.

நீங்கள் கிறிஸ்துவை உங்கள் ராஜாவாக அறிந்துகொள்கிறீர்கள்

அந்தக் கள்ளன் இயேசுவினிடமாய்த் திரும்பி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்றான் (லூக்கா 23:42).

அந்தக் கள்ளன் இயேசு ஒரு ராஜா என்பதை அடையாளம் கண்டுகொண்டான். அவர் ஒரு ராஜாவாக இருந்தும், மரணத்துக்குள் பிரவேசிக்கிறார் எனில், அவர் மறுபுறத்தை அடையும்போது, ஒருவேளை எனக்கு உதவும்படி அவரால் ஏதேனும் செய்யக்கூடும்.

தம்மை ஒரு ராஜா என்று அறிந்துகொள்ளும் நபரிடம் இயேசு, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (லூக்கா 23:43), என்று சொல்கிறார்.

பரலோகத்தைப்பற்றி நீங்கள் எப்படி நிச்சயத்தோடிருக்கமுடியும்? மனந்திரும்புங்கள்!
தேவனுக்குப் பயந்து, உங்கள் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு உங்களைக் கீழ்ப்படுத்துங்கள்.

2. கேளுங்கள்

அந்தக் கள்ளன், “இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்றான் (லூக்கா 23:42). அது மிகவும் தைரியமான ஒரு வேண்டுகோள். சில நொடிகளுக்கு முன்புதான், அவன் மற்றொரு கள்ளனோடு உடன்பட்டவனாய், இயேசுவின்மீது சாபங்களைப் பொழிந்துகொண்டிருந்தான். தமது ராஜ்யத்தில் வரும்போது இயேசு இதை நினைவுகூர்ந்தாரானால், இதினிமித்தம் அந்தக் கள்ளனின் கதி அதோகதிதான். இருப்பினும், அந்தக் கள்ளன் கேட்டான்.

கேட்பது என்பதற்கு நீங்கள் நீதிமானாகக் காண்பிக்கவில்லை என்று பொருள்

அவன், “நான் சில தவறுகளைச் செய்திருக்கிறேன் என்று அறிவேன், ஆனால் யாருமே சரியானவர்கள் இல்லை, மேலும், நான் எனது வாழ்வில் அநேக நற்கிரியைகளைச் செய்திருக்கிறேன்,” என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவன், “நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்,” என்று சொன்னான் (லூக்கா 23:41).

இந்த மனிதன், கிறிஸ்துவினிடத்தில் நேர்மையுடனும், தாழ்மையுடனும் கேட்டான். அவன் தான் ஒரு பாவி என்ற உண்மையை உணர்ந்திருந்தான். அவன் தேவனுக்கு விரோதமாகவும், தன் சக மனுஷனுக்கு விரோதமாகவும் பாவம் செய்திருந்தான். நாமும் அவனைப்போலத்தான் இருக்கிறோம். நாம் எதைச் செய்யும்படித் தேவன் அழைத்திருக்கிறாரோ, அதைச் செய்யத் தவறியிருக்கிறோம்; மேலும், நாம் எதைச் செய்யக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறாரோ, அதைச் செய்திருக்கிறோம்.

நாம் சர்வவல்லவரான தேவனுக்குமுன்பாகப் பாவிகளாயிருக்கிறோம். அதுதான், இயேசு சிலுவைக்குச் சென்றதற்கான மிகத்துல்லியமான காரணம். அங்குதான், பாவிகளுக்காக அவர் பலியாகவும், பதிலாளாகவும் ஆனார். “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசாயா 53:6). நீங்கள் உங்களது மரணத்தில் பாவங்களைச் சுமக்காதபடிக்கு, இயேசு தமது மரணத்தில் பாவங்களைச் சுமந்தார்.

கேட்பது என்பதற்கு நீங்கள் ஓர் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கவில்லை என்று பொருள்

நாம் கேட்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, நாம் ஒப்பந்தங்களைச் செய்ய ஆர்வம் காட்டுகிறோம். மேலும், நம்மிடம் இருப்பவற்றைக்கொண்டே நாம் அந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம். “இதோ, இதையெல்லாம் நான் உங்களுக்காகச் செய்யமுடியும். இப்பொழுது, நீங்கள் எனக்காகச் இதைச் செய்யுங்கள்,” என்பதாக அவை இருக்கின்றன.

ஆனால் இயேசுவுக்குக் கொடுக்கும்படி அந்தக் கள்ளனிடம் ஒன்றுமே இல்லை. அவன் வெறுங்கையனாய் இருந்தான். அவனால் செய்யமுடிந்ததெல்லாம், ஒரு பிச்சைக்காரனைப்போல, இயேசுவினிடமாய்த் திரும்பிக் கேட்பது ஒன்றைமட்டும்தான். அதைத்தான் அவனும் செய்தான்.

இது முக்கியமானதாகும், ஏனெனில், தேவனைக்குறித்த காரியம் என்று வரும்போது, ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்திப்பதுதான் நமது முதல் உள்ளுணர்வாயிருக்கிறது. நான் ஜெபித்தால்… நான் ஆலயத்திற்குச் சென்றால்… நான் உதாரத்துவமாயிருந்தால்… நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால்… தேவன் என்னைப் பரலோகத்தில் சேர்த்துக்கொள்வார்.

ஆனால் அந்த வழியில் நீங்கள் தேவனிடம் வருவீர்களானால், நடப்பது இதுதான்: முதலாவது, தேவன் உங்களுக்குக் கடன்பட்டவர் என்ற உணர்விலேயே நீங்கள் வாழ்க்கையினூடாகக் கடந்துசெல்வீர்கள். இரண்டாவது, இல்லாத ஒப்பந்தம் ஒன்றின்மீது உங்கள் எதிர்காலத்தை ஊசலாடவிடுகிறீர்கள், ஏனெனில் தேவன் ஒப்பந்தகளைச் செய்வதில்லை.

கேட்பது என்பதற்கு, நீங்கள் இயேசுவுக்கு உங்களால் கொடுக்கக்கூடியதொன்றும் இல்லையென்று அறிந்தவராய், வெறுங்கைகளுடன் அவரிடம் வருகிறீர்கள் என்று பொருள். நீங்கள் செய்யக்கூடியதெல்லாம் கேட்பது ஒன்றுமட்டும்தான். அப்படிக் கேட்பதில், நீங்கள் அவரது இரக்கத்தின்மீது உங்களை வைத்துக்கொள்கிறீர்கள்; மற்றும் கிருபைக்காக அவரையே நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

3. விசுவாசியுங்கள்

அந்தக் கள்ளன் செய்த காரியம், எளிமைபோல் தோன்றும் கடினமானதொன்று ஆகும். அவன் தேவனுக்குப் பயப்படத் தொடங்கினான். அவன் தன் பாவ நிலையை உணர்ந்தான். அவன் இயேசுவை ராஜா என்று விசுவாசித்து, மற்றவை அனைத்தையும் அவரது கரங்களிலேயே விட்டுவிட்டு, தன்னை இரட்சிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டான்.

உங்களுக்குத் தீவிரமான இதய நோய் இருப்பதாகவும், நீங்கள் அதற்காகத் திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்றும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அறுவைச் சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் செல்கிறீர்கள்: அவரோ, “முதலாவது, நான் உங்களை மயக்கமமைடயச் செய்யப்போகிறேன், அதன்பின்பு ஒரு சிறு அறுவைக் கத்தியை எடுத்து உங்களை அறுத்துத் திறக்கப்போகிறேன்,” என்று சொல்கிறார்.

தொடர்ந்து, தான் என்ன செய்யப்போகிறார் என்கிற விவரங்களை, அவர் பயங்கரமான விதத்தில் விளக்கிக்கொண்டே போகிறார். அதன்பின்பு அவர், சில காகிதங்களை உங்களிடம் கொடுத்து, “இதோ, நீங்கள் கையெழுத்திடவேண்டிய காகிதங்கள். உங்கள் அதிகாரப்பூர்வ அனுமதியை நான் பெற்றபின், நாங்கள் இதற்கான செயல் திட்டத்தை
வகுத்துக்கொள்வோம்,” என்று சொல்கிறார்.

மக்கள் இத்தகைய காகிதங்களில் கையெழுத்திடுகிறார்கள், காரணம் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளமுடியாத ஒன்றை அந்த அறுவைச் சிகிச்சை நிபுணரால் செய்யமுடியும் என்றும், அப்படி அது செய்யப்படாத பட்சத்தில், தங்களுக்கு வேறு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்றும் அவர்கள் அறிந்துள்ளார்கள். எனவே அவர்கள், “அறுவைச் சிகிச்சை செய்யுங்கள். நான் உங்களை நம்புகிறேன்,” என்பதாகத் தங்களையே முற்றிலுமாக அந்த அறுவைச் சிகிச்சை நிபுணரின் கரங்களில் ஒப்படைத்துவிடுகிறார்கள்.
அதைப்போலவே, அந்தக் கள்ளனும் விசுவாசித்து, இயேசுவின் கரங்களில் தன்னையே ஒப்படைத்துவிட்டான். அப்படி விசுவாசிக்கிற நபரிடம் இயேசு, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்,” என்று சொல்கிறார். தங்கள் விசுவாசத்தைத் தம்மேல் வைக்கிற ஒவ்வொரு நபருக்கும், இரட்சகரின் வாக்குத்தத்தம் இதுதான்.

நீங்கள் இயேசுவினிடத்தில் திரும்பி, உங்களை இரட்சிக்கும்படி அவரைக் கேட்பீர்களானால், உங்களிடத்தில் என்ன இருக்கிறது? உங்களிடத்தில் இருப்பது அவரது வார்த்தைதான். நீங்கள் அவரது வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இயேசு, “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37), என்று சொல்கிறார். எனவே, அவரிடம் வந்து, அவரிடம் கேட்டு, அவரது வார்த்தையின்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

இருளில் விசுவாசித்தல்

அந்தக் கள்ளன் இயேசுவை விசுவாசித்ததை அடுத்து உடனடியாகவே, “பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று…” (லூக்கா 23:44). இந்த அந்தகாரம், அந்த நாளின் மத்தியில் வந்து, மூன்று மணி நேரங்கள் வரையிலும் நீடித்தது.

அந்தக் கள்ளனின் இடத்தில் உங்களையே நீங்கள் நிறுத்தி யோசித்துப்பாருங்கள். நீங்கள் அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையையும், பரலோகம்குறித்த உங்களது விசுவாசத்தையும் இயேசுவினிடத்தில் ஒப்படைத்திருக்கிறீர்கள். உடனே நீங்கள் இருளில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டீர்கள். மேலும் நீங்கள், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:46), என்று இயேசு மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிடுவதைக் கேட்கிறீர்கள்.

அந்தக் கள்ளன், “இங்கு என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது?” என்று குழம்பியிருக்கவேண்டும்.

நீங்கள் உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மீது வைக்கும்போது, ஒருவேளை மாபெரும் அந்தகாரமான தருணங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கலாம். இது நிகழும்போது ஆச்சரியப்படாதீர்கள். நீங்கள் வெளிச்சத்திலிருக்கும்போது சார்ந்துகொள்ளமுடிவதைப்போலவே, இருளிலும் நீங்கள் இயேசுவின் வாக்குத்தத்தத்தின்மீது நிச்சயமாய்ச் சார்ந்துகொள்ளமுடியும்.

வேதனையில் விசுவாசித்தல்

இயேசுவை விசுவாசிப்பது, வேதனைகளற்ற ஒரு வாழ்வுக்கு வழிநடத்தும் என்று பரிந்துரைப்பவர்கள் யாருமே, வேதாகமத்தை ஆழமாக அறியவில்லை. இயேசுவை விசுவாசித்தபின், அந்தக் கள்ளன் அனுபவித்த வேதனையைப்பற்றி நினைத்துப்பாருங்கள். சிலுவையில் அறையுண்டிருப்பதின் வேதனையானது, கரங்கள் மற்றும் கால்களில் இருக்கும் காயங்கள் பெரிதாவதைப்பொறுத்தும், காய்ச்சல் உடலெங்கும் தீவிரமாய்ப் பரவுவதைப்பொறுத்தும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்தது. எனவே அந்தக் கள்ளன், இயேசுவை விசுவாசிப்பதற்குமுன் அனுபவித்ததைவிட அதிகமான சரீர வேதனையை, அவரை விசுவாசித்தபின் அனுபவித்தான்!

இருளின் மத்தியில் நீங்கள் இயேசுவை விசுவாசிக்கவேண்டும். மேலும், வேதனையின் மத்தியில் நீங்கள் அவரை விசுவாசிக்கவேண்டிய தருணங்களும் இருக்கலாம்.

மரணத்தில் விசுவாசித்தல்

அந்தக் கள்ளன் செய்ததைப்போலவே, மரிக்கும் தருணம் உங்களுக்கு நேரிடும்போது, நீங்களும் இயேசுவை விசுவாசிக்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன், வயது முதிர்ந்தவரான ஒரு போதகர், கவலைக்கிடமான அளவில் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற சக போதகர் ஒருவர், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தவராய் அவரிடம், “எப்படி மரிப்பது என்பதை உங்களுக்குக் கூறும்படியாகவே நான் வந்திருக்கிறேன். உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றி மறந்துவிடுங்கள்.”

“என் கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றி நான் மறந்துவிடவேண்டுமா? மெய்யாகவா?”

“ஆம். மெய்யாகத்தான் சொல்கிறேன். ஏனெனில்: நீங்கள் இயேசுவுக்காக என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி நினைத்துக்கொண்டே கிடப்பீர்களானால், கூடிய விரைவிலேயே நீங்கள் இயேசுவுக்காக என்ன செய்யவில்லை என்பதையும், இயேசுவுக்காக என்ன செய்திருக்கலாம் என்பதையும் மற்றும் இயேசுவுக்காக இன்னும் சிறப்பாக என்ன செய்திருக்கமுடியும் என்பதையும் காணத் தொடங்குவீர்கள். அப்படி நீங்கள் செய்தால், சீக்கிரமாகவே சந்தேகத்தாலும், பயத்தாலும் சூழப்பட்டுக் காணப்படுவீர்கள்.”

“அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”

“இயேசுவுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப்பற்றி மறந்துவிட்டு, இயேசு உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதன்மீது முழுமையாக உங்கள் கண்களைப் பதியவையுங்கள்.”

மரிப்பதற்கான வழியானது, வாழ்வதற்கான வழியாகும். இயேசுவுக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் அல்லது செய்யத் தவறியிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டு, இயேசு உங்களுக்காகச் சிலுவையில் என்ன செய்திருக்கிறார் என்பதில் முழுமையாக விசுவாசத்தை வையுங்கள்.

இன்று அந்தக் கள்ளன் பரலோகத்தில் இருக்கிறார். அதற்குக் காரணம், அவர் பாவமற்றவர் என்பதோ, அவர் கூடுமானவரை நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதோ அல்ல. அந்தக் கள்ளன் பரலோகத்தில் இருக்கிறார், காரணம் இயேசு அவரது பாவத்திற்காக விலைக்கிரயத்தைச் செலுத்தி, அவருக்குப் புதியதொரு நித்திய வாழ்வை வழங்கியிருக்கிறார். அந்தக் கள்ளனுக்காக இயேசு செய்ததை, உங்களுக்கும் செய்ய வல்லவராயிருக்கிறார்.

வித்தியாசம்

ஆனால், அங்கே இரண்டு கள்ளர்கள் இருந்தார்கள் என்பதையும், மற்றும் ஒருவன்
இரட்சிக்கப்பட்ட அதே நேரத்தில், மற்றொருவன் கைவிடப்பட்டான் என்பதையும் நினைவுகூருங்கள். அவர்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான தேவையும் வாய்ப்பும்தான் இருந்தன. அவர்கள் இருவருமே இயேசுவுக்கு அருகாமையில் இருந்தனர். இருவருமே, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே,” என்று அவர் ஜெபித்ததைக் கேட்டார்கள்.

ஆனால், ஒருவன் இயேசுவினிடத்தில் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தில் திரும்பிவந்த அதே வேளையில், மற்றொருவன் தொலைவிலேயே நின்றுவிட்டான் என்பதில்தான் வித்தியாசமே இருக்கிறது.

ஒருவேளை நீங்கள், ‘நான் இப்பொழுதே எந்தவிதமானதொரு அர்ப்பணிப்பையும் செய்ய விரும்பவில்லை. நான் நேரமெடுத்துக்கொள்ள விரும்புகிறேன்,’ என்று எண்ணிக்கொண்டிருக்கலாம்.

நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுப்பீர்களானால், ஒன்று, நீங்கள் மனந்திரும்புதலுக்கு உட்பட்டு, அதன்பின்பாக, இன்னும் முன்னமே வந்திருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். அல்லது, உங்கள் இருதயம் கிறிஸ்துவைக்குறித்துக் கடினப்பட்டுப்போய்ப் பின்பு அவரிடம் நீங்கள் ஒருபோதும் வரவேமாட்டீர்கள். இவையிரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஆகவே, இப்பொழுதே விசுவாசத்திலும், மனந்திரும்புதலிலும் இயேசுவினிடத்தில் வாருங்கள்.

அல்லது, அவரிடம் திரும்புவதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது என்று ஒருவேளை நீங்கள் பயப்படலாம். சிலுவையில் தொங்கிய அந்தக் கள்ளனை நினைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு அப்பொழுது காலம் கடந்துவிடவில்லை. அதுபோல, இப்பொழுது உங்களுக்கும் காலம் கடந்துவிடவில்லை. நீங்கள் இயேசுவிடம் திரும்பவும், அவரிடத்தில் கேட்கவும், அவரில் விசுவாசிக்கவும் உங்களுக்கு இதுவே காலமாயிருக்கிறது. தாமதிப்பதைவிட, முந்திக்கொள்வது சிறந்தது, ஆனால் தாமதமனாலும், அது ஒருபோதும் இல்லையென்பதைவிடச் சிறந்தது.

இதோ, நீங்கள் பயன்படுத்துவதற்கான ஒரு ஜெபம்:

ஆண்டவரே, நான் ஒரு பாவி என்றும், உமது பரலோகத்திற்குள் பிரவேசிக்க எனக்குத் தகுதியில்லை என்றும் நான் அறிக்கைசெய்கிறேன். ஆனால், நீரே ராஜா என்றும், எனக்காகவே நீர் சிலுவையில் மரித்தீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆகவே, நீர் என்னை நினைவுகூர்ந்து, உமது ராஜ்யத்திற்குள் என்னைக் கொண்டுவருமாறு உம்மிடத்தில் நான் கேட்கிறேன். மேலும், உம்மிடத்தில் வருகிறவர்கள் ஒருபோதும் புறம்பே தள்ளப்படமாட்டார்கள் என்கிற உமது வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். (ஆமென்.)

1 ஜே. ஐ. பாக்கர்-ன் கீப் இன் ஸ்டெப் வித் த ஸ்பிரிட், ப. 87, பேக்கர், 2005-ஐத் தழுவி எழுதப்பட்டது.

Let the Word of God Dwell Richly Among You
Biblical Faith