தவறான கருத்துக்கள் மற்றும் உண்மையற்ற தன்மை ஆகியவற்றையே அடையாளமாகக்கொண்டதொரு காலத்தில் நாம் வாழ்கிறோம். வரலாற்றில் வேறு எந்தவொரு காலக்கட்டத்தினின்றும் இது வேறுபட்டதல்ல எனினும், இப்பொழுது நாம் இதை மிகப்பரவலாகக் காண்கிறோம். சில திருச்சபைகள், நிலையற்ற உலகக் காரியங்களில் ஈடுபட்டு, சமூகக் கூடுகைத் தலங்களாக இயங்கிவருகின்றன. இதன் விளைவாகச் சில கிறிஸ்தவர்கள் குழப்பமடைந்து, சுவிசேஷத்தைக்குறித்த ஒரு தெளிவான புரிதல் இன்றி, உலகத்திலிருந்து பிரித்தறியமுடியா வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். மேலும் சில கிறிஸ்தவர்கள் தேவனுடைய வசனத்திலுள்ள வாக்குத்தத்தங்கள், சன்மார்க்கக் கடமைகள், ஊக்கமூட்டும் சிந்தனைகள் மற்றும் சுயச்சார்பு ஆலோசனைகளால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.
இந்த நிலைமைக்கு என்ன பரிகாரம்? இவ்வித நிலைமையை நாம் எதிர்கொள்ளும்போது, நம்மை நமது போக்கில் விட்டுவிடாதிருக்கிற வேதாகமத்துக்காக ஸ்தோத்திரம். “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக” என்று, கொலோசெயர் 3:16-ல் வேதாகமம் சொல்கிறது. ஆனால் நமக்கு ஏன் தேவ வசனம் தேவை? தேவனுடைய வசனம் நமது இருதயங்களில் எவ்வாறு வாசமாயிருக்கமுடியும்?
நமக்கு ஏன் தேவ வசனம் தேவை?
சமீபத்தில், எங்களது மூத்த மகனின் பணி நிமித்தமாக, எங்கள் குடும்பம் வேறொரு மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தது. நாங்கள் ஒரு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறி, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டுச் சில நாட்கள் கழித்து, ஒரு மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லவேண்டியிருந்தது. அதன்பின்பு மேலும் சில நாட்களில், எங்கள் இளைய மகனைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்தோம். நான் எங்களது புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பியபோது, அதில் நான் அனைத்தையும் எப்படி ஒழுங்குபடுத்தி வைத்தேன் என்பது பழகாத காரணத்தால், என்னால் சட்டென்று எனது பொருட்களைக் கண்டடையமுடியவில்லை. புதிய இடத்திற்குப் பழகிக்கொண்டு, எனது பொருட்களெல்லாம் எங்கிருக்கின்றன என்று அறிந்துகொள்ள, எனக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. சில மாதங்கள் சென்றபின்பு, இந்தப் புதிய இடம்தான் என் இல்லம் என்பது பழகிவிட்டதால், நான் எனது பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைச் சுலபமாக அறிந்துகொள்கிறேன். எனது இல்லத்தில் வசிப்பதே என் பொருட்களைப் புழங்குவதற்கு எனக்கு உதவியாயிருப்பதுபோல, தேவனுடைய வசனத்தை நமக்குள் பரிபூரணமாக வாசமாயிருக்கும்படி அனுமதிப்பதே, கிறிஸ்துவுக்குள் நாம் ஒரு புதிய வாழ்வை வாழ நமக்கு உதவும்.
தேவ வசனம், சுவிசேஷத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. தேவனுக்கு முன்பாக நம் நிலைமையை அறிந்துகொள்ளவும், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமது இரட்சிப்புக்காகத் தேவன் வைத்திருக்கும் பரிகாரத்தைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வார்த்தை நமக்கு உதவுகிறது. தேவனுடைய வார்த்தை, கிறிஸ்தவர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்வில் இயேசுவைப்போல் வாழ நமக்கு உதவுகிறது. நமது வேதாகமப் புத்தகத்தைக்கொண்டு நாம் செய்வதெல்லாம், கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற உறவை வெளிப்படுத்துகிறது. மூடிவைக்கப்பட்ட ஒரு வேதப்புத்தகம், கிறிஸ்துவோடு நாம் அனுதினமும் நடப்பதற்கு உதவாது. நமது வாழ்க்கை எவ்வளவு ஒழுங்கற்றது என்பதை நமக்குக் காண்பித்து, அதைக் கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக மாற்றியமைக்கத் தேவ வசனம் நமக்கு உதவமுடியும். மேலும், தேவ வசனம் நமக்குள் பரிபூரணமாக வாசமாயிருக்கும்போது, நம்மால் கள்ளப் போதனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும்.
கொலோசெ பட்டணத்திலிருந்த கள்ளப் போதகர்கள், விசேஷித்த வெளிப்பாடுகள், புதிரான அனுபவங்கள் மற்றும் சடங்காசாரப் பழக்கங்கள் ஆகியவை, கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாதவை என்று கிறிஸ்தவர்களுக்குப் போதித்தார்கள். ஆனால் பவுலோ, கிறிஸ்தவ வாழ்விற்குக் கிறிஸ்துவும், கிறிஸ்துவின் வார்த்தையுமே போதுமானவை என்று கொலோசெ பட்டணத்துக் கிறிஸ்தவர்களுக்குப் போதித்தார். இப்பொழுதும்கூடக் கிறிஸ்தவர்கள், கள்ளப் போதனைகளாலும், விசித்திரக் கருத்துக்களாலும் மற்றும் விசேஷித்த வெளிப்பாடுகளாலும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். தேவனுடைய வசனத்தைக் கிறிஸ்தவர்கள் வாசித்துக் கற்காதபோது, கள்ள உபதேசங்கள், சபைகளுக்குள் வேரூன்றிப் பரவிவிடக்கூடும். அதனால்தான், தேவ வசனம் தங்களுக்குள் பரிபூரணமாக வாசமாயிருக்க அனுமதிக்கும்படிக் கொலோசெ பட்டணத்து விசுவாசிகளைப் பவுல் உற்சாகப்படுத்துகிறார்.
தேவ வசனம் எவ்வாறு நம் இருதயங்களில் வாசமாயிருக்கமுடியும்?
சிலர், தற்காலிகமானதோர் உணர்ச்சித் தூண்டுதலுக்காக அல்லது ஓர் உணர்வுப்பூர்வமான முறையிலேயே வேதாகமத்தை வாசிக்கிறார்கள். ஆனால், தேவனுடைய வார்த்தைக்கு நாம் ஜாக்கிரதையுடன் கவனம் செலுத்தி, அதற்கு முழு மனதுடன் கீழ்ப்படியவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும், தேவனுடைய வார்த்தை நிரந்தரமாகத் தங்கி வாசம்செய்யவேண்டும். தேவனுடைய வார்த்தை நம்மில் பரிபூரணமாக வாசமாயிருப்பது எப்படியிருக்கும் என்பதைக் கொலோசெயர் 3:16 விவரிக்கிறது
தேவனுடைய வார்த்தை நமக்குள் மெய்யாகவே வாசமாயிருக்கிறது என்பதற்கான சான்றுகளை நாம், போதனை மற்றும் ஞானமாய்ப் புத்திசொல்வதன் மூலமாகவும், சங்கீதங்கள், கீர்த்தனைகள் மற்றும் ஞானப்பாட்டுக்களைப் பாடுவதன் மூலமாகவும் காணலாம். சங்கீதங்களைப் பாடுவது, தேவன் யார் என்பதைக்குறித்த ஒரு தெளிவான கருத்தை நமக்குத் தரும். தேவனுடைய வார்த்தையை நினைவுகூர்வதற்கும், தேவனுடைய வார்த்தையைக் கைக்கொள்வதற்கு நினைவூட்டப்படுவதற்கும், தேவ ஜனங்களுக்கு கிருபை அருளப்படும் ஒரு வழியே, பாடல்களாகும். நாம் பாடுகிற பாடல்களை நம்மால் மனப்பாடம் செய்யமுடியும். கிறிஸ்துவைப் பின்செல்பவர்கள், அர்த்தம் பொதிந்த சுவிசேஷக் கீர்த்தனைகளைப் பாடுவதன்மூலம், சரியான இறையியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.
“பரிபூரணமாக” என்ற வார்த்தையைப் பவுல் பயன்படுத்துகிறார். “பரிபூரணமாக” என்பது, முறையான வாசிப்பு மற்றும் கீழ்ப்படிதலின் மூலமாகத் தேவனுடைய வார்த்தையானது, நம் வாழ்வில் ஆழ்ந்த மற்றும் நீடித்ததொரு விளைவை ஏற்படுத்தவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. தேவனுடைய வார்த்தை, நம் நிலையான, அனுதின உணவாய் இருக்கும்போது மட்டுமே, அந்த வார்த்தை நமக்குள் பரிபூரணமாக வாசமாயிருக்கமுடியும். தேவனுடைய வார்த்தையை நாம் சிறிது சிறிதாய்க் கொரிக்கலாகாது. மாறாக, ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய வார்த்தையை விருந்துபோல் கொண்டாடிப் புசிக்கவேண்டும்.
நாம் நமது உணவைச் சமைக்கவும், நமது பணியிடங்களுக்குச் செல்லவும், வழக்கமான ஓய்வை எடுத்துக்கொள்ளவும், நேரம் ஒதுக்குவதைப்போலவே, தேவனுடைய வசனத்தை வாசிப்பதற்கும் நாம் நேரத்தை ஒதுக்கத் திட்டமிட்டு முயற்சிக்கவேண்டும். “பரிபூரணமாக” என்பது, தேவனுடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியவேண்டும் என்பதையும் நமக்கு அறிவுறுத்துகிறது.
தேவனுடைய வசனத்தை நமக்குள் பரிபூரணமாக
வாசமாயிருக்கும்படி அனுமதிப்பதற்கான, சில நடைமுறை வழிகள் இங்கே தரப்பட்டுள்ளன:
முதலாவது, தேவனுடைய வசனத்தை முறையாக வாசியுங்கள். அது உங்களுக்குக் கடினமானதாகத் தோன்றினால், உங்களைப் பொறுப்பாய் விசாரிக்கிற ஒருவரை உங்களுடன் இணைந்து வாசிக்க ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது, ஒரே பகுதியை இணைந்து வாசிக்கவும், நீங்கள் கற்றுக்கொள்வதை உரையாடல் குறுஞ்செய்திகளில் பகிர்ந்துகொள்ளவும் ஒரு நண்பர் குழவை அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வகையான பொறுப்பேற்றுக்கொள்ளுதல் ஒவ்வொரு நாளும் அதைக் கிரமமாய்ச் செய்ய உங்களுக்கு உதவும்.
இரண்டாவது, அவசரமற்ற, நிதானமான வேகத்தில், தேவனுடைய வசனத்தை முறைப்படியாக வாசியுங்கள். சிலவேளைகளில், ஒரு அதிகாரத்தை முழுமையாகவும், மற்றும் சில வேளைகளில், கொலோசெயர் நிருபத்தை ஒரே முழு வீச்சில் வாசிப்பதைப்போல, ஒரு புத்தகத்தையே முழுமையாகவும் வாசியுங்கள்.
கடைசியாக, வேதாகமச் சத்தியங்களால் நிரம்பிய பாடல்களைப் பாடுங்கள். தேவனைப்பற்றிப் போதிக்கிற பாடல்களைப் பாடுங்கள். மற்றும் தேவனுடைய முழுமையான ஆலோசனைகளைப் போதிக்கிற பாடல்களைப் பாடுங்கள்.
கர்த்தர்தாமே தமது வசனத்தை உங்களுக்குள் பரிபூரணமாக வாசமாயிருக்கும்படிச் செய்வாராக.