தேவனின் இருதயத்தை அறிதல்

கிறிஸ்துவ வாழ்க்கை

சுவிசேஷங்களையும், நிருபங்களையும் நாம் உற்றுக் கவனித்தோமானால், தேவனை நாம் அறிந்துகொள்ளவும் மற்றும் அவரைக்குறித்த அறிவில் வளரவும் வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார் என்பதைக் காணமுடியும். நாம், நமது கிறிஸ்தவக் கடமைகளை மிகத் துல்லியமாகச் செய்துவிட்டு, அவரது இருதயத்தை அறிந்துகொள்வதற்கு நேரம் ஒதுக்கத் தவறினால், தேவன் அதில் பிரியமாயிருப்பதில்லை.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.” 2 பேதுரு 3:18

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்…” கொலோசெயர் 1:10

தேவனை அறிந்துகொள்வது என்பது, இரட்சிப்பிற்கும் அப்பாற்பட்டது. தேவனை அறிதல் மற்றும் அவருக்குள் மறைந்திருக்கும், எல்லையற்ற ஞானப் பொக்கிஷங்களைக் கண்டறிதலுக்கான நமது பயணத்தில், இரட்சிப்பானது முதல் படியாக இருக்கலாம். தேவனை அறிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொண்ட மனிதர்கள் மற்றும் தங்கள் சொந்த இருதயங்களின் கட்டளைகளைப் பின்பற்றி, நித்திய தேவனின் இருதயத்தை முழுமையாய்ப் புரிந்துகொள்ளத் தவறிவிட்ட மனிதர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும்படி, வேதாகமம் மிக அழகான விதத்தில் அதைத் தெளிவாக நமக்கு விவரிக்கிறது.

தாவீதும் சவுலும்:

தாவீதைப்பற்றித் தேவன் கொடுத்த சாட்சி என்னவெனில், அவர் தேவனின் இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாயிருந்தார் என்பதாகும் (1 சாமுவேல் 13:14). தேவனிடமிருந்தே இப்பேர்ப்பட்டதொரு சாட்சியைப் பெறுவது, எத்தனை வியக்கத்தக்க ஒரு கனம்! சங்கீதப் புத்தகத்தில், தாவீது ராஜாவின் இருதயத்தைப்பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாம் பெறுகிறோம். அதில் எனக்குத் தெளிவாய்ப் புலப்பட்ட ஓர் அம்சம் எதுவெனில், தாவீது தேவனின் ‘இருதயத்தை’ அறிந்திருந்தார் என்பதே.

உதாரணத்துக்கு, இஸ்ரவேல் ஜனங்கள் நியாயப்பிரமாணத்தின் அனைத்துக் கற்பனைகளையும், எழுத்தின்படியே ஒன்றும் விடாமல் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதொரு காலக்கட்டத்தில், தாவீது மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்துவந்தார். அன்றாடகப் பலிகள், சடங்காசாரமான சுத்திகரிப்புமுறைகள் மற்றும் யாத்திராகமம், லேவியராகமம், உபாகமம், எண்ணாகமம் ஆகியவற்றில் நாம் வாசிக்கும் அனைத்துப் பிரமாணங்களும், அக்காலங்களில் யூதேய வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக இருந்தன.

இருப்பினும் தாவீது, பத்சேபாளுடனான தன் பாவத்தைப்பற்றி மனம் வருந்துகிறபோது,
சங்கீதம் 51-ல், அவர் சொல்வது இதுதான்:

பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்ளூ தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்ளூ தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” சங்கீதம்.” 51:16, 17

என்னதான் அன்றாடகப் பலிகளையும், தகனபலிகளையும் தேவன் கட்டளையிட்டிருந்தபோதிலும், அவரது இருதயம் பலிகளையல்ல, மாறாக அவற்றையும் கடந்து, அதிக ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையே தேடியது என்பதை, எப்படித் தாவீது அறிந்தார்? அன்றாடகப் பலிகள் மற்றும் தகனபலிகள் ஆகியவற்றை, ‘நொறுங்குண்ட ஆவி’ மற்றும் ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயம்’ ஆகியவற்றோடு, எப்படி அவரால் தொடர்புபடுத்த முடிந்தது?

தாவீது, நியாயப்பிரமாணத்தைக் கனத்துக்குரியதாய்க் கைக்கொண்டபோதிலும், நியாயப்பிரமாணத்தைக்குறித்த அறிவை மட்டும் உடையவராய் இருப்பதைவிட, நியாயப்பிரமாணத்தை வழங்கியவரின் இருதயத்தை ஆழமாக அறிந்திருந்தார். அவர், தேவனுடைய இருதயத்தின் விருப்பங்களைக் கண்டு, தேவனை மகிழச் செய்வது எதுவெனப் புரிந்துகொண்டார். உண்மையிலேயே அவை, காளைகள் மற்றும் வெள்ளாட்டுக்கடாக்களின் பலிகளல்ல. மாறாக, மனந்திரும்புதலோடு தேவனுக்கு முன்பாக வரும் நொறுங்குண்ட இருதயமும், மனமாற்றத்துக்காக அவரது வல்லமையின்மேல் சார்ந்துகொள்ளும் நருங்குண்ட ஆவியுமே.

அதற்கு நேர் எதிரிடையாக, இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் மற்றும் இஸ்ரவேலின் மூப்பர்களைப்பற்றி நாம் வாசிக்கும்போது, ‘அவர்கள் நியாயப்பிரமாணத்தைப்பற்றிய மிகச்சிறந்த அறிவுள்ளவர்களாய் இருந்தனர்ளூ ஆனால், பிரமாணத்தை வழங்கியவரின் இருதயத்தைப்பற்றி மிகச்;சொற்ப அளவே புரிந்துகொண்டிருந்தனர் அல்லது புரிந்துகொள்ளவே இல்லை,’ என்பதை நாம் பார்க்கிறோம்.

சவுல், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவராகவும், மோசேயின் நியாயப்பிரமாணங்களில் நன்கு பழகியவராகவும் இருந்தபோதும், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் தேவனுடைய அழைப்பை இழந்துபோனார். சவுல், பலி செலுத்துவது தேவனைப் பிரியப்படுத்தப் போதுமானது என்று நினைத்தார். ஒருவேளை அப்படி எண்ணிய காரணத்தாலேயே, சாமுவேலின் வருகைக்காகக் காத்திருக்;காமல் தேவனுக்குப் பலி செலுத்தினார் (1 சாமுவேல் 13). அதுமட்டுமின்றி சவுல், அமலேக்கியரை முற்றிலும் அழிக்காமல் விட்டதினால், தேவனின் கட்டளையை மீறியபோது, அவர் தேவனுடைய கட்டளைக்கு இரண்டாம் முறையும் கீழ்ப்படியாமற்போனார் (1 சாமுவேல் 15). சாமுவேல் தீர்க்கதரிசி, மிகக்கடுமையாக அவரைக் கடிந்துகொண்டு,

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்,” என்றார். 1 சாமுவேல் 15:22

தாவீது அறிந்திருந்ததைப்போல், தேவனின் இருதயத்தைக்குறித்த புரிதலைச் சவுல் கொண்டிருக்கவில்லை, என்பது தெளிவாகிறது.

காயீனும் ஆபேலும்:

… காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.” ஆதியாகமம் 4:3-5

காணிக்கையைக் கொண்டுவந்ததில், காயீன் செய்த தவறு என்ன என்று நான் அடிக்கடிக் குழம்பியதுண்டு. அவரும்கூட, தன் கடின உழைப்பிலிருந்துதான் ஒரு காணிக்கையைக் கொண்டுவந்தார். இந்தச் சூழ்நிலைகுறித்து, வேத வசனங்கள், நமக்கொரு கண்ணோட்டத்தைத் தருகின்றன. ஒரு சில வசனங்களின் கீழே, தேவன் இவ்வாறு பேசுகிறார்:

நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்ளூ அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்…” ஆதியாகமம் 4:7

இந்த வசனம், தேவனுடைய பார்வைக்குச் சரியான ஏதோவொன்றைக் காயீன் செய்யாமல் விட்டுவிட்டதை நமக்குக் கூறுகிறது.

ஆபேலின் காணிக்கையை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆபேலின் காணிக்கை, சிலுவையில் கிறிஸ்துவின் பலியை, மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியதை நாம் காணலாம். ஏனெனில் பல நூற்றாண்டுகள் சென்றபின், தேவன் மோசேயினிடத்தில் நியாயப்பிரமாணத்தை வழங்கியபோது, பலியாக ஒப்புக்கொடுக்கப்படும் ஆட்டுக்குட்டியானது, பழுதற்ற ஒன்றாக இருக்கவேண்டும் என்றும், ‘அந்த ஆட்டுக்குட்டியின் கொழுப்பு’ சமாதான பலியாக ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டார். (லேவியாராகமம் 4:26, 31, 35). ஆபேலுக்குத் தேவன் அதை வெளிப்படுத்தியிராவிடில், ‘ஆட்டுக்குட்டியின் கொழுப்பைப்பற்றி’ அவருக்கு எப்படித் தெரியும்? ஆபேல் கர்த்தரை உண்மையாய்த் தேடியிராவிடில், தேவன் அவருக்கு அதை எப்படி வெளிப்படுத்தியிருக்கக்கூடும்? ஏனெனில், தேவன் பட்சபாதமுள்ளவரல்ல. ஆனால், தம்மை அறிந்துகொள்ளும்படியாகத் தம்மை உண்மையாய்த் தேடுவோருக்குப் பலனளிக்கிறவராயிருக்கிறார்.

ஆபேல், ‘தேவனின் இருதயத்தைக்குறித்ததொரு புரிதலுடன் பலியை ஒப்புக்கொடுத்ததால், அவரது காணிக்கை தேவனுக்குப் பிரியமாயிருந்தது. காயீனோ, சிறந்ததென்று தனக்குத் தோன்றியதைத்தான் கொடுத்தார்.

யாக்கோபும் ஏசாவும்:

ஏமாற்றுக்காரன் என்றும், தன் சகோதரனால் பகைக்கப்பட்டவன் என்றும் அறியப்பட்டிருந்தும், யாக்கோபு தேவனால் அன்புகூரப்பட்டார். ஏசாவோ, தன் இலக்கைத் தவறவிட்டார். அவர்கள் இருவரது குணாதிசயங்களை நீங்கள் கூர்ந்து நோக்கிக் கற்பீர்களானால், உலகப் பிரகாரமான அனைத்து அம்சங்களின்படியும், ஏசாதான் ‘நல்ல பிள்ளை’ என்பதை நீங்கள் காண்பீர்கள். பிறகு, ஏசாவைவிட யாக்கோபின்மேல் தேவனைத் தயவு காட்டச் செய்தது எது? (ரோமர் 9:13)

யாக்கோபு ஜீவனுள்ள தேவன்மேல் எவ்வளவு பசிதாகமாயிருந்தார் என்றால், அவர் தேவனுடைய ஆசீர்வாதங்களை எப்படியேனும் பெறவேண்டும் என்று வாஞ்சித்தார் என்பது, நான் கண்ட காரணங்களுள் ஒன்றாகும். ஏசா, தேவனால் அளிக்கப்பட்ட மாபெரும் ஈவை அலட்சியம் செய்தபோது, யாக்கோபு அதற்காக ஏங்கினார். எப்படியேனும் பரலோக தேவனைக் கிட்டிச் சேரும் வாஞ்சையுள்ள ஓர் இருதயத்தையே, தேவன் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தேவனின் தூதனானவரோடு யாக்கோபு போராடியபோதும் (ஆதியாகமம் 32), தேவனைப்பற்றி மேன்மேலும் அறிந்துகொள்ளும் அவரது ஆவலின் ஒரு சிறு பார்வை நமக்குக் கிடைக்கிறது. யாக்கோபு, “உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும்,” என்று கேட்டார்.
தேவனோடு போராடியதில், தன் ஜீவனைவிட அதிகமாக யாக்கோபு அக்கறை எடுத்துக்கொண்டதெல்லாம், தேவனைப்பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்குத்தான்! தன் தந்தை ஈசாக்கும், தாத்தா ஆபிரகாமும், எப்படித் தேவனோடு நடந்தார்கள் என்பவைகுறித்த சம்பவங்கள், அவற்றைக்குறித்து யாக்கோபு ஏங்கவும், ஒருவேளை அதைவிட அதிகம் அறியவும், ஆவல்கொள்ளச் செய்திருக்கக்கூடும். ஒருவர் பெற்றிருக்கும் இவ்வுலகிற்கான எந்த ஆசீர்வாதங்களைவிடவும், தேவனையே வாஞ்சிப்பதுதான் மிகச்சிறந்தது என்பதைத் தன் முற்பிதாக்களிடமிருந்து யாக்கோபு கற்றிருக்கவேண்டும். உண்மையில், தேவனை அறிகிற, மகிமையான ஐசுவரியங்களுடன் ஒப்பிடும்போது, யாக்கோபு தன் வாழ்வையே மிக அற்பமாக எண்ணினார்.

அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்ளூ அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொ(ன்னார்).” (ஆதியாகமம் 32:29)

தேவனை அறிகிறதற்கான யாக்கோபின் தாகமும், அவர் எப்படி ஆர்வமாய்த் தேவனைத் தேடினார் என்பதும் மிகவும் கவனிக்கத்தக்கவை ஆகும்.

முடிவுரை
தேவனுடைய கண்களில் தயவு பெற்ற ஒவ்வொருவரின் வாழ்விலும், தொடர்ந்து நாம் காணக்கூடிய பொதுவான குணாதிசயங்களுள் ஒன்று, தேவனுடைய இருதயத்தைக்குறித்து அதிகமாய் அறிந்துகொள்ள அவர்களுக்கிருந்த தாகம் ஆகும். அவர்கள், தேவனுடன் உறவாடுவதற்கு ஆழ்ந்ததொரு வாஞ்சை உடையவர்களாய் இருந்தார்கள். செய்யவேண்டியதும், செய்யக்கூடாததுமான ஒரு பட்டியலைத் தவிர, வேறொன்றுமில்லாத மதத்தினால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியவில்லை. அவர்கள், தாங்களே தேவனை அறிந்துகொள்ளும்வரையில், அவர்களுக்கு நிறைவு ஏற்படாத அளவுக்கு, அவர்களது வாஞ்சை இருந்தது.

இன்றும்கூட, தமது இருதயத்தைப் பின்பற்றிச் சென்று, தம்மை அறிந்துகொள்ளும்படியாக, உற்சாகமுள்ள மனதுடன் தம்மைத் தேடும் ஜனத்தையே தேவன் தேடிக்கொண்டிருக்கிறார். ஏனெனில், மாம்சத்தின்படியும், சடங்காசாரங்களின்படியும் மற்றும் தன் தன் சொந்த மனதின் ஏவுதலின்படியும் அல்லாமல், ஆவியோடும் உண்மையோடும் தம்மைத் தொழுதுகொள்ளக்கூடிய இப்படிப்பட்டவர்களையே, தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்களாக இருக்கும்படிப் பிதாவானவர் தேடுகிறார்.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.” சங்கீதம் 53:2

மனிதன், தேவனை அறிந்துகொள்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். பழைய உடன்படிக்கையின்கீழ் மறைபொருளாய் வைக்கப்பட்டிருந்த ஒன்று, புதிய உடன்படிக்கையில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற காரணத்தால், தாவீது, ஆபேல் மற்றும் யாக்கோபு ஆகியோரைவிட, நாம் அதிகச் சிலாக்கியம் பெற்றவர்களாய் இருக்கிறோம். யாக்கோபு கேட்டபோது, தேவன் அவருக்குச் சொல்லாத நாமம், நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மூலமாகத் தேவன் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார். தேவனை நாம், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக, மிகவும் தெளிவாகக் காண்கிறோம்ளூ மிகவும் அந்நியோன்னியமாக அறிகிறோம்.

திரை இப்பொழுது கிழிக்கப்பட்டுள்ளதுளூ உங்களையும், என்னையும்போன்ற எளிய விசுவாசிகள், தேவனைப்பற்றி யாக்கோபு அறிந்துகொண்டதைவிடவும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். நேற்றைவிட, ஒரு சிறு துளி அளவாவது அதிகமாகத் தேவனை நாம் அறிந்துகொள்ள, நாம் நேரம் எடுத்துக்கொள்வதிலும் அவரை அதிகம் சந்தோஷப்படுத்துவது எதுவும் இல்லை. அவரை அறிந்திட நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையாகவே, நாம் அவரை நம் முழு இருதயத்தோடும் தேடும்போது, நாம் அவரைக் கண்டடைவோம்.

ஆசிரியர்

Varna

Varna currently resides in the US with her husband and two kids. She enjoys playing the piano and passionate about writing songs that magnify what Christ has done in her life. Her favourite time of the day is when her family gathers together for prayer and worship every night. She also loves to make homemade works of art and enjoys cooking.

மேலும் படிக்க