யாக்கோபின் கதை, வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். அதில் காணப்படும் அனைத்து எதிர்பாராச் சம்பவங்கள் மற்றும் திடீர்த் திருப்பங்களுடன், இந்த மனிதர் தனது வெளிப்படையான தவறுகளுக்குப் பின்னரும்கூட, எப்படித் தேவனால் நேசிக்கப்படுகிற ஒருவராக மாறினார் என்பது, கற்பதற்கு மிக முக்கியமான ஒரு பாடமாகும். தேவன், யாக்கோபைச் சந்திக்கும்படிச் செய்தது எது? அநேகர் அர்ப்பணத்தோடும், பக்தியோடும் இருந்திருக்கலாம், தேவனை யாக்கோபுக்குத் தயவு பாராட்டும்படிச் செய்தது எது?
யார் இந்த யாக்கோபு?
நானறிந்த ஒரு தோழியைப்பற்றி என்னிடம் யாரேனும் கேட்டிருந்தால், ஒருவேளை நான் அவளது குணநலன்களையும், அவள் எதில் சிறந்து விளங்கினாள் என்றும், இன்னும் அவளது குடும்பத்தையும் மற்றும் தற்போது அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்றும் நான் சொல்லியிருப்பேன். இப்பொழுதோ, யாக்கோபைப்பற்றி யாரேனும் கேட்டால், அவரைப்பற்றி மக்கள் தரக்கூடிய விளக்கம், சற்றும் நலமானதாக இல்லை.
யாக்கோபைப்பற்றிய அவர்களது விளக்கம், அவர், “வஞ்சகமானவர், ஏமாற்றுகிறவர் மற்றும் நேர்மையற்றவர்,” என்பதாகத்தான் இருந்தது. அவர், “ஏமாற்றுபவர்,” என்று பொருள்படும் வெறும் ஒரு பெயருடன் மட்டும் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நடமாடவில்லை. அவரது அந்தப் பெயருக்கு ஏற்பவே, தனது சகோதரன் ஏசாவின் மனக் கசப்பு முழுவதற்கும் காரணமாக வாழ்ந்தார்.
யாக்கோபாக இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள். வேதாகமம், அவர் தன் தகப்பனாருக்குப் பிரியமானவராய் இல்லை என நமக்குக் கூறுகிறது. வேதாகம நாட்களின் ஒரு ஆணாதிக்கச் சமுதாயத்தில், மிகவும் தௌ;ளத்தெளிவாகப் பார்த்தால், தன் நிலையில் அதுவே ஒரு மாபெரும் அடி. அத்துடன், அவர் ஏசாவைச் சேஷ்ட புத்திரபாகத்தின் காரியத்தில் முதலாவது ஏமாற்றியபின்பு, அவரது தந்தை மற்றும் சுற்றத்தார் மத்தியில் அவரது நிலைமை மோசமானதாய் இருந்திருக்கவேண்டும். நிச்சயமாக ஏசா, எப்படித் தன்னை யாக்கோபு ஏமாற்றிவிட்டார் என்று, தனது உறவினர்கள் மற்றும் அண்டை, அயலகத்தாரிடம் கூறுவதை நான் உணர்கிறேன். அது, யாக்கோபை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து, மேலும் விலக்கியிருக்கலாம். தன் சகோதரனுடனான தனது கசப்புமிக்க மோதல்களின் காரணமாக யாக்கோபு, வரவேற்கப்படாத குடும்ப அங்கத்தினராக இருந்திருக்கவேண்டும். அநேகமாக யாக்கோபு, இவ்வனைத்துத் தவறான காரணங்களுக்காகத் தன் பட்டணத்தின் பேசுபொருளாய் இருந்திருக்கவேண்டும். ஆனால் தேவன் இன்னும் யாக்கோபைச் சிநேகித்தார். ‘ஏன்?’ என்ற கேள்வி, இங்கே இன்னும் நீடிக்கிறது.
நாம் வாழ்கிறதான, விழுந்துபோன இந்த உலகத்தில், “வஞ்சகமானவர், ஏமாற்றுகிறவர் மற்றும் கபடுள்ளவர்,” என்கிற, யாக்கோபின் குணாதிசயங்களுடன் நீங்கள் பொருத்திப்பார்க்கக்கூடிய, இரண்டு நபர்களைச் சட்டென்று உங்களால் நினைவுக்குக் கொண்டுவர முடியுமா? இந்த மூன்று வார்த்தைகளை நான் குறிப்பிட்டபோது, உங்கள் மனதில் யார் தோன்றினார்கள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை. ஆனால் அந்தப் பட்டியலின் முதலாவது பெயராக இருக்கவேண்டியது, “நம் சொந்தப் பெயரே” ஆகும்.
தேவன், “உன் பேர் என்ன?” என்று யாக்கோபைக் கேட்டபோது, அது சாதாரணமான ஒரு கேள்வியாய் இருக்கவில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு அறிந்திருக்கிறவரான தேவன், “நீ யார்?” என்று யாக்கோபைக் குறிப்பாகக் கேட்டார். தனது ஏமாற்று வேலைகள், மாறுபாடுகள் மற்றும் நேர்மையற்ற தன்மை ஆகியவை அனைத்துமே, யாக்கோபின் மனதிற்குள், மின்னலாய்க் கடந்து சென்றிருக்கவேண்டும். யாக்கோபு, உடனடியாகத் தனது பெயரைக் கூறியிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர் சற்று நிறுத்தி, நிதானித்துத் தனது கடந்த காலத்தைப்பற்றியெல்லாம் நினைத்துப் பரிதாபகரமான மற்றும் எந்த ஆதரவுமற்ற ஒரு மனிதராக, “நான் யாக்கோபு,” என்று அறிக்கையிட்டபடி, தன் எஜமானரின் பாதங்களில் விழுந்திருக்கவேண்டும். அதுதான் அனைத்தையும் மாற்றியது.
“கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.” (சங்கீதம் 145:14)
மனித இருதயத்தின் அவல நிலை, தேவனுக்கு ஒன்றும் ஆச்சரியமானதல்ல. மனிதர்களின் இருதயங்களைத் தேவன் அறிந்திருக்கிறார். யாக்கோபைப்போலவே, ஏசாவும் அவல நிலையிலுள்ளவர் என்பதுதான் உண்மையாகும். ஏனெனில் வேதாகமம், எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது என்பதை, நமக்குத் தெளிவாய்க் கூறுகிறது (எரேமியா 17:9).
ஆனால் வித்தியாசம் என்னவெனில், ஏசா, தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கான ஒரு தகுதியாக, பொதுவாக இந்தப் பூமிக்குரிய தன் தந்தையினிடத்திலும், மற்றும் சமுதாயத்திலும் தனக்கிருந்த நற்பெயரின்மேல் நம்பிக்கைவைத்திருந்தபோது, தேவன் அவற்றையெல்லாம் அற்பமாக எண்ணினார் என்பதுதான். அதே நேரத்தில், தேவன் எதிர்பார்த்ததெல்லாம், சங்கீதக்காரன் சொல்வதைப்போல:
“தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர். (உம்மையன்றி எனக்கு வேறு நன்மையில்லை) …” (சங்கீதம் 16:2)
என்கிற, அந்த எளிய, தாழ்மையான, ஆதரவற்ற அறிக்கைதான். ஏசா மற்றும் யாக்கோபு ஆகியோரின் கதை, எனக்கு கெட்ட குமாரனின் உவமையை ஞாபகப்படுத்துகிறது. மூத்த குமாரன், ஏசாவைப்போலத் தகப்பனாருக்காகப் பகலும் இரவுமாக உழைத்ததுடன், தன் செய்கைகளிலெல்லாம் நீதியுள்ளவராய் இருந்தார். இது பாராட்டுக்குரியதுதான் என்றபோதிலும், அவர் தன்னையும் அறியாமலேயே, தன் தகப்பன் தன்னை ஆசீர்வதிப்பதற்கான தகுதியாகத் தன் சுய நீதியின்மேல் நம்பிக்கைவைக்கத் தொடங்கினார். ஆனால் இளைய குமாரனோ, யாக்கோபைப்போலத் தன் தந்தையின் பார்வையைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்று, வழிதவறி அலைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் கடைசியில், தன் தந்தையின் வீட்டில் ஒரு வேலைக்காரனாக மட்டும் இருப்பதைவிட, வேறொன்றும் தனக்குத் தேவையில்லை என்று உணர்வதற்கான ஒரு தருணம் அவருக்கு வந்தது. அவ்வாறு சொல்லிக்கொண்டு, அவர் மிகவும் வருத்தம் நிறைந்த ஒரு இருதயத்துடன், தன் தகப்பனின் பாதங்களில் வந்து விழுந்தார். அந்தத் தகப்பனோ, மனதுருக்கத்தினாலும், இரக்கத்தினாலும் நிறைந்தவராய், அவரைத் தூக்கியெடுத்து, கனத்தினாலும், மகிமையினாலும் அவரை உடுத்துவித்தார்.
தேவன் யாக்கோபை உயர்த்தியதற்கு, அவரது ஆதரவற்ற அறிக்கையே காரணமானதென்று நான் நம்புகிறேன். யாக்கோபு தன் இருதயத்தின் அவல நிலையை அறிந்திருந்தார். தேவனையன்றித் தனக்கு வேறு ஒரு நம்பிக்கையுமில்லை எனவும் அவர் அறிந்திருந்தார். ஆதரவற்ற, விரக்தியான நிலையில் அவர், “ஆண்டவரே, என் பெயர் யாக்கோபு…. ஆனால், என்னைத் தயவாய் ஆசீர்வதியும்!” என்று அறிக்கையிட்டார்.
பல விஷயங்களில், நாம் ஒன்றும் யாக்கோபிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. யாக்கோபின் ஏமாற்றுகிற இயல்பானது, நமக்குள் பின்னிப் பிணைந்துள்ளதுளூ தேவனுடைய கிருபையையும், சிலுவையின் வல்லமையையுமே அல்லாமல், அதிலிருந்து விடுபடுவது என்பது, இயலாத ஒன்றாகும். யாக்கோபைப்போலவே நாமும் தேவனிடத்தில், “ஆண்டவரே, நான் யாக்கோபு … நான் யாக்கோபு … என்மேல் கிருபையாயிரும்,” என்று ஆதரவற்றுக் கதறும்போது, தேவனின் கிருபையானது, நம்மை ஆசீர்வதிக்கும்படி இறங்கி வருகிறது.
“அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்ளூ … என்றார்” (ஆதியாகமம் 32:28).
யாக்கோபின் கடந்த கால வஞ்சகமான தந்திரங்களை அறிந்த அவரது அந்த உறவினர்களுக்கு, யாக்கோபுக்குத் தேவனுடன் ஏற்பட்ட அனுபவமும், யாக்கோபைத் தேவன் ஆசீர்வதித்ததான ஆசீர்வாதமும், மிக நிச்சயமாக, நியாயமற்ற ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் அது, தேவன் எடுத்த நிலைப்பாட்டை மாற்றுவதில்லை.
தங்களை மிகவும் நல்லவர்கள் என நினைத்துக்கொள்ளும் நீதிமான்கள், இன்னும் கிருபையைவிட்டுத் தூரமாய் நிற்கும்போது, அவரிடம் ஓடி வரும் பாவி, கிருபையைக் கண்டடைகிறார்.
தனது மன்னிக்கமுடியாத செயல்களுக்காக அனைவராலும் வெறுக்கப்பட்ட நிலையிலிருந்து, தேசங்களுக்கு ஆசீர்வாதமாக ஆகும்படியாக அவர் மாற்றப்பட்டார்ளூ அதற்கு, அன்பான ஓர் இரட்சகரின் பாதங்களில், மெய்யாகவே தான் யார் என்பதை அவர் அறிக்கையிடத் துணிந்ததே ஒரே காரணம்.